ஒரு அறிவிலியின் சிம்மாசனம் - வினோதன்
சீரழியும் நம் நாட்டை
சீராக்கிக் காட்டிட
வீடேறி கைகூப்பும்
கொழுத்த சாக்கடைகள்
கொடுத்த பணத்திற்கு
விலையாக விளைந்த
வாலறுக்க வேண்டாமா ?
மூளையை மட்டுமல்ல
முதுகெலும்மையும்
பணத்தாளின் பாதத்தில்
புதைத்து விட்டு - நீவிர்
வெள்ளுடை நரிகளை
வென்றிட துணைபோதல்
சுய துரோகமில்லையா ?
நீங்கள் தீர்மானிப்பவன்தான்
நாட்டின் தலையெழுத்தின்
முன்னெழுதென உணர்ந்தும்
கையூட்டு வாங்கிவிட்டு
கையறு நிலை கண்டால்
கரைவேட்டிகள் தரப்போவது
அல்வா அல்லவா ?
தமிழின மரபணுவில்
பின்னிக் கிடக்கும்
தன்மான இழைகளை
உருக்கி ஊற்றிவிட்டு
வாழும்போதே வாய்க்கரிசி
உண்ணுதல் தகுமோ ?
பெருச்சாளிகள் வாயில்
வியர்வையின் வாசமில்லை,
தருவதை - தாராளமாய்
பெற்றுக்கொள்ளுங்கள்,
ஓட்டை மட்டும்
போடாது கொல்லுங்கள் !
ஒரு அறிவிலிக்கு
நாம் தரும் சிம்மாசனம்,
சந்ததிகளுக்கு - நாம்
சுடச்சுட கள்ளிப்பால்
ஊட்டுவதை ஒத்தது !
நம் வாழ்க்கை
நம் கையில் - ஆம்
ஓட்டிற்கு காசென்றதும்
விரியாதிருக்கும் வரை !
- வினோதன்