காலம்
காலத்தின் தோற்றம் எவரும் அறியார்
காலத்தின் முடிவு என்றோ தெரியார்
காலத்தின் வேகம் கட்டுப்பாட்டில் இல்லை
காலத்தை வென்றவர் உலகினில் இல்லை
காலம் நம்முடைய கையில் சிக்காது
காத்திருக்கச் சொன்னாலும் காதில் விழாது
காலத்தை கவிதையிலும் அடக்கிட முடியாது
காலமது இல்லையெனில் வாழ்வே இங்கேது
காலத்தின் முன்னே நாமெல்லாம் துகளே
காலத்தை இகழ நமக்கில்லை புகழே
காலத்தை மதிக்க பெற்றிடுவோம் வளமே
காலத்தை வீணின்றி உபயோகிப்பது நலமே
எதிர்காலம் தெரிந்துவிட்டால் நிம்மதியும் இல்லை
கடந்தகாலம் நினைத்திருந்தால் தூக்கம்துளியும் இல்லை
நிகழ்காலம் நமக்குகிடைத்த வசந்தகாலம் தானே
இந்நொடியை வாழ்ந்திட்டால் வாழ்வில்சுகம் தானே
காலத்தின் சக்கரத்தில் விரைந்துகழியும் நேரமே
விழிக்காமல் கண்ணயர விட்டுப்போகும் தூரமே
ஓலமிட்டும் நிற்காது நம்எல்லைக்குள் சிக்காது
வீழ்ச்சிவிட்டு வெற்றிபெற சிந்திப்பதால் தப்பேது!
காலதேவன் கணக்குப்படி நடப்பதெல்லாம் நடந்திடும்
காட்சிகளை மாற்றும்வழி எவராலிங்கே ஆகிடும்
வாழவந்தோம் கொஞ்சநேரம் வாழ்ந்திடுவோம் நேர்மையாய்
வாழ்க்கைதந்த பாடங்களை விட்டுச்செல்வோம் முழுவதும்