நிழலாடும் நினைவு
விழியோரம் அணுஅளவு நீர்த்துளி எட்டிப்பார்க்க
விதிசெய்த விளையாட்டு எவர்பார்த்து கேள்விகேட்க
பழியான காதல்காலம் கனவில்மட்டும் வந்துபோக
மொழிமறந்து வாழுமவனின் வலியறிவார் யாரோயிங்கு?
ஒருநாளும் யார்பார்த்தும் கொஞ்சமுமவன் சிரித்ததில்லை
தெருநாய்கள் தாக்கும்போதும் கோபம்கொண்டு பார்த்ததில்லை
வருவாயென ஏதுமின்றி காயம்மிகக் கொண்டிருந்தான்
வருவாளவள் ஒருநாளென நம்பிக்கையும் வைத்திருப்பானோ?
இனிதாகவே கழிந்திருக்கும் ஓடியாடிய காதல்வாழ்க்கை
இனியிவளென நினைத்திருந்து கொண்டிருப்பான் வாழ்வில்வேட்கை
தனிமையில்லை இனிமையேயென எழுதியிருப்பான் ஆயிரம்கவிதை
தனித்துவிட்டாள் இவனையவளே என்றுமலரும் இவனின்நாட்கள்?
வேடிக்கை மனிதருக்கு வேடிக்கை பொருளாயானான்
வாடிக்கை இதுவேயென பலர்வாயில் விழவேயானான்
கேளிக்கை மக்கள்செய்யும் கேலிக்கு வழிவகுத்தான்
வாழ்கையிலே இவன்கடக்கும் வலிகளுக்கு ஏதுமருந்து?