வைகுண்ட ஏகாதசி நாளில் ஏன் கண்விழிக்க வேண்டும் தெரியுமா

ஏகாதசி நாளில் நாம் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் பகவான் மகாவிஷ்ணுவின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக்காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப் படுகின்றன. அமாவாசை நாளையும், பெளர்ணமி நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும்.


திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் இவை ஐந்தும் ஒரு நாளிற்குரிய முக்கியமான ஐந்து அங்கங்கள். இந்த ஐந்தையும் நமக்குத் தெரிவிப்பதுதான் பஞ்சாங்கம். அதாவது பஞ்ச அங்கம். திதி என்பது சூரியன் சஞ்சரிக்கும் நிலைக்கும், சந்திரன் சஞ்சரிக்கும் நிலைக்கும் இடையில் ஏற்படும் தூரத்தின் அளவைக் குறிப்பது

அமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பர். அமாவாசை நாள் தொடங்கி பிரதமை, த்விதியை என்று ஒவ்வொரு நாளாக சூரியனின் பாகையிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக விலகி பௌர்ணமி நாளன்று நேர் எதிர் பாகையில் அதாவது சூரியன் இருக்கும் பாகையில் இருந்து சரியாக 180வது பாகையில் சந்திரன் சஞ்சரிப்பார்.


முப்பது நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பெளர்ணமி வரை உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினோராம் நாளும், பெளர்ணமி அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக்காலத்தின் பதினோராம் நாளுமாக இரண்டு முறை ஏகாதசித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியைச் சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பெளர்ணமியை அடுத்த ஏகாதசியைக் கிருட்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.

ஏகாதசி தோன்றிய புராண வரலாறு:

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர்.

அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப் படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, 'முரன்' பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.


விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு "ஏகாதசி" எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார்.

எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Posted By: Mayura Akilan

எழுதியவர் : (29-Dec-17, 10:25 am)
பார்வை : 78

மேலே