பேருக்கா சுதந்திரம்
பேருக்கா சுதந்திரம்...???
இயந்திர மனிதனைப்போல இதயமின்றி இருந்தவன் வெள்ளையன்
வியந்தவன் கண்டதொன்று எதுவெனில் இந்தியரின் ஒற்றுமை
பயந்தவன் பாதம்வைத்து நுழைந்ததும் விரித்திட்டான் சதிவலை
தயக்கங்கள் ஏதுமின்றி பிடித்திட்டான் இந்திய நாட்டினை
எத்தனை மொழிகளுண்டு எத்தனை பிரிவுஉண்டு இருப்பினும்
பித்தனை விரட்ட சேர்ந்தது சுதந்திர வேட்கையோடு
மத்தள அடிகள்போல அகிம்சையால் ஓங்கி அடிக்க
சத்தான அவன்படையும் சிதறியே ஓடக் கண்டீர்
ஓங்கியது இந்தியர் ஒற்றுமை தோன்றினர் பலதியாகிகள்
ஏங்கியே கிடந்தனர் சொந்தங்கள் இழந்த குடும்பங்கள்
வாங்கிய சுதந்திரத்தை வகையாக பயன்படுத்தினோமா நாம்
தூங்கியே வாழ்வைவேறு வழிகளில் கழிப்பது தவறுதானே
கூறுகள் போட்டு விவசாய நிலங்களை விற்றுவிட்டோம்
ஏரிகள் குளங்கள் விழுங்கி ஏப்பமே விட்டுவிட்டோம்
லாரியில் மண்ணை நிரப்பி ஆறுக்கு ஆப்புவைத்தோம்
பேருக்கு சுதந்திரத்தை கொடியாய் நெஞ்சினில் குத்திவைத்தோம்
பணத்திற்கு கல்விவிற்று பாவம் மிக சுமந்துவிட்டோம்
மனதிற்குள் ஊழல்வைத்து இதய அமைதி இழந்துவிட்டோம்
பிணத்திற்கும் ஒப்பாசாதி கட்டி பத்திரமாய் வைத்துக்கொண்டோம்
இனத்திற்கு அடிவிழுந்தும் ஒதுங்கி வயிறுநன்று நிரப்பிவந்தோம்
சுதந்திரம் மறவோம் இழந்தோர் வலிகளை மறவோம்
இதந்தரும் சொற்களாலே அவருக்கு புகழ்மாலை அளிப்போம்
மதவாதம் மறந்து பிரிக்கும் பேதங்கள் எரித்து
சோதனை வாழ்வை மாற்றி சாதனை படைத்திடுவோம்...