புதிய பயணம் புத்தாண்டில்
தைரியமுள்ளவர் தானே நீங்கள்!சரி,என் கையைப் பிடித்துக்கொள்ளுங்கள் உங்களை ஓர் இருட்டறைக்குள்
கூட்டிச்செல்லப் போகிறேன் இப்போது எங்கே கண்களை மூடிக்கொள்ளுங்கள்
இதோ வந்துவிட்டோம்!
இந்த இடத்திற்கு இன்னொரு பெயரும் உண்டு
"இதயக்குகை"
துணிவுள்ளவர் தானே நீங்கள்!சரி,மெதுவாக நடந்துவாருங்கள்
நிறைய அதிசயங்களை பார்க்கலாம்
விதைக்குள் இருக்கும் விருட்சத்தைக் காணும்
வாய்ப்பு இன்று உங்களுக்கு
கருத்துள்ளவர் தானே நீங்கள்!சரி,இங்கே பாருங்கள்!எத்தனையெத்தனை
தத்துவ மேதைகள்,ஞானியர்கள்,
கவிஞர்கள்,கலைஞர்கள்,
அறிவியல் அறிஞர்கள் அனைவரும் அயராமல்
வேலை செய்துகொண்டு இருப்பதை கண்டீர்களா!
ஆம்!ஆச்சர்யமாய்த்தான் இருக்கும்
புதியனஅறியும்ஆர்வமுள்ளவர்தானே நீங்கள்!சரி,
இங்கிருந்துதான் பூமியைப்
புரட்டிப்போட்ட மகத்தான தத்துவங்கள் தோன்றின!
உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன!
மகிழ்விக்கும் இசையும் கலைகளும் கிளம்பின!
கற்பனைச்சிறகு விரிக்கும்
கவிதைகளும் கதைகளும்
களிப்பூட்டப் பிறந்தன!
சிரத்தையுள்ளவர் தானே நீங்கள்!சரி,
நானே வியப்பால்
மலைத்துநிற்கின்றேன் இப்போது!
இதோ!இதோ!
இது உங்கள் இடம்!
இதுவரை நீங்கள் அறியாமல்
இருந்திருக்கலாம்,
அவ்வளவுதான்!
எதற்காக நீங்கள் பிறந்துள்ளீர்களோ
அதற்கான இடம்!
உங்கள் வருகைக்காக
தயார்நிலையில் இருக்கிறது!
இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள்
உழைக்கச் சித்தம் உள்ளவர் தானே நீங்கள்!சரி,
பாருங்கள்!பாருங்கள்!
உங்களைச் சுற்றிலும் எத்தனை
கருவிகள்!
உளியும் சுத்தியலும் சிலைவடிப்பீர்களா
வண்ணமும் தூரிகையும் ஓவியம் தீட்டுவீர்களா
காகிதமும் எழுதுகோலும் காவியம் படைப்பீர்களா
வீணையும் தாளமும்
கானம் இசைப்பீர்களா
கணினியும் கணக்கீட்டுப்பொறியும்....
நுண்பெருக்கியும் தொலைநோக்கியும்....
சோதனைக்குழாயும் கருமுட்டைகளும்....
சட்டப்புத்தகங்களும் வழக்குக்கட்டுகளும்....
உழவோடு விதைநடும் கருவிகள்....
அறுத்து விலக்கி உருக்கிஒட்டும்
கருவிகள்....
நீரில்நிலத்தில் வானில்பறக்கும்
ஊர்திகள்....
இன்னும் எத்தனை!எத்தனை!
ஆஹா!
உங்களுக்கு எதுவிருப்பமோ அதை எடுத்துக்கொள்ள தடையேதுமில்லை!
இப்போதே உங்கள் வேலையைத் துவங்கலாம்!
வித்தியாசம் காட்டலாம்!
பொறுமையுள்ளவர் தானே நீங்கள்!சரி,
வேலைசெய்யும்போது
வெளியிலிருந்து இடையூறுகள்
வரலாம்,வந்தால் பொருள்படுத்தி
வேதனைப்படுவதல்ல
நம்வேலை.
தினம் குறித்தபொழுதில்
கண்களைமூடி காரியங்கள்
புரிகையில்
"என்ன,தியானமா செய்கிறாய்?
இல்லை,ஆழ்ந்த சிந்தனையா?"
என்றுகேட்டு எழுப்புவார்கள்
அதை அசட்டைசெய்து,
அசையாமல் இதயவீட்டிலிருந்து
வேலைசெய்யுங்கள்
வெகுசிலநாளில் அவர்களே
உங்களை தோளில் தூக்கி
"இதோ புதிய சாதனையாளர்"!
என்றும் கொண்டாடுவார்கள்.
அவர்கள் வேலை அது
அடக்கமுள்ளவர் தானே நீங்கள்!
சரி,உங்கள் பிறவிக்காரணம் முழுமையடைகிறது!
நம் புதியபயணம் நிறைவடைகிறது!
உலகம் உங்களை வாழ்த்துகிறது!வாழ்த்துக்கள்!