கான்கார்ட் காட்சிக் குமரன்
கான்கார்ட் காட்சிக் குமரன்
*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
உக்கியிட்டுக் கணபதியுன் துணையைக் கேட்டோம்
உன்பெருமை மூசிகனார் சொல்லக் கேட்டோம்
உவப்புடனே வேலனுக்குப் பாடல் நெய்வோம்
உடனிருந்து உதவிடுவாய் குருவே நீயும்
காததூரம் பழனிக்கு வருவோம் என்றால்
காடுகடல் தாண்டவேணும் கந்தா நீயும்
கானமயில் ஏறிஇங்கு வருவாய் என்றே
கான்கார்டை நோக்கிஅடி வைத்தோம் வாவா
பழநிவரும் காவடிகள் சிறிதே என்று
பக்குவமாய் தொடர்ந்தோமே படைவீ(டு) ஆறு
பார்த்ததிலே அதுகூடக் கொஞ்சம் என்று
பக்தர்களும் தொடர்ந்துவிட்டோம் கான்கார்ட் இன்று
ஆறுபடை வீடிருந்தும் ஐயா எங்கள்
ஆசைமட்டும் அகலவில்லை அழகா உன்னை
அனுதினமும் பார்த்திருக்க வேண்டும் இங்கே
ஆக்கிடுவோம் கான்கார்(ட்)ஓர் படைவீ (டு)என்றே
பழம்வேண்டிப் பழநிக்குச் சென்றாய் என்று
பலநூறு வகையுனக்குப் பழங்கள் கொய்வோம்
பலன்வேண்டித் தரவில்லை பகட்டும் இல்லை
பக்தியுண்டு உன்மேலே அதனால் செய்தோம்
சனிகேது திசைபலவும் சாந்தம் கொள்ளும்
சங்கரனார் புத்திரனுன் பார்வை போதும்
சங்கடங்கள் வந்ததிசை தேடிப் போகும்
சண்முகனே சரணமுன்னை அடையும் நேரம்
வேல்வணங்கித் தொடங்குகிற வேலை யாவும்
வெற்றிபெறும் ரகசியத்தை வேலா சொன்னாய்
வேங்கைமரம் வேடரூபம் போலே நானும்
வேண்டும்படி காட்சிவரம் எப்போ சொல்வாய்
நாருசிக்க மூவேளை உணவும் உண்டு
நான்படிக்க நல்லதமிழ் பாட்டும் உண்டு
நம்பிவந்தால் கைகொடுப்பான் கந்தன் என்று
நாட்டமுடன் நடந்துவந்தோம் பாதை கண்டு
கந்தனென்ற மந்திரத்தைக் கருத்தில் கொண்டு
கடல்தாண்டி வந்துவிட்டேன் கதிவே(று) அன்று
கரையுமிந்தக் கன்றறிந்த பசுநீ ஒன்றே
கால்சுற்றிக் குழைந்திருப்பேன் காப்பாய் நன்றே
கணக்கின்றிப் பிறந்துவந்தேன் காயம் ஆற்று
கற்பூரம் கமழ்தூபம் முருகா ஏற்று
கைபிடித்தேன் கவலைவிடு என்றே சொல்லக்
காட்சியருள் கான்கார்டில் மயில்மேல் வீற்று
... மீ.மணிகண்டன்
#மணிமீ