உடையாத பலூன்

ஆக்கியழித்தலே
போட்டியின் நியதி
ஒவ்வொரு போட்டியாளரையும்
ஆதரித்து
ஓட்டப் பாதையின் இரு மருங்கிலும்
கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றன
அவ்வவ்வணிகள்

நடுவரின் விசில் சத்தத்துடன்
ஆரம்பமானது ஓட்டம்
ஐம்பது மீற்றர் நிறைவில்
ஒவ்வொருவருக்கும்
தனித்தனியான பலூன்

ஊதிப் பெருத்த பலூன்
உடைந்தால் மாத்திரமே
எல்லைக் கோட்டை
எட்ட முடியும்

முதலாவது பலூன் உடைந்து
" டப் "பென்ற சத்தம் அடங்குவதற்குள்
அடுத்த பலூனும் உடைந்தது
இல்லையில்லை
குண்டூசியால் குத்தி உடைக்கப்பட்டது

முதலாவது செல்லும் பிள்ளைக்கும்
இரண்டாவது செல்லும் பிள்ளைக்கும்
இடைவெளியாய் - வெறும்
இரு எட்டுக்களே எஞ்சியிருந்தன

கலந்துகொண்ட ஆறு பிள்ளைகளில்
ஐந்து பிள்ளைகள்
எல்லைக் கோட்டைக்
கடந்தும் விட்டனர்

உடைய மறுக்கும்
கடைசிப் பிள்ளையின்
நீல நிற பலூனை
ஓர் ஓரமாய் நின்று
பார்த்து ரசிக்கிறேன்
மற்றவர்கள் கூச்சலிட்டு சிரிக்கிறார்கள்

எனக்கு ஏற்கனவே தெரியும்
அந்த பலூன் உடையாதென்று

பலூன் உடையாமல்
ஊதிப் பெருக்க வைக்கும் வித்தையை
என் மகளுக்கும்
கற்றுக் கொடுத்திருக்கிறேன்

இப்படிக்கு இவண்,
பலூன் வியாபாரி

எழுதியவர் : ஜே.எஸ்.எம். ஸஜீத் (2-Jan-18, 7:29 pm)
பார்வை : 126

மேலே