ப்ரியப்பட்ட டேஷ் கடிதப்பதிவு - 2
ப்ரியப்பட்ட டேஷ் - கடிதப்பதிவு - 2
===============================
சாப்டியா,, நீ எப்படி இருக்க
நல்லா இருக்கதானே
எல்லோரும் நலமா
என் நினைவுனக்கு அப்பப்போ வருமா
என்னைப்பத்தி
யோசிப்பியா, என இப்படி
மீண்டும் ஒரு அழைப்பின் மூலம் உயிர்க்கொடுத்திருக்கிறாய்
சுவாசிக்க அனுமதிக்கிறாய்
மிஸ் பண்றேன், அப்பப்போ தேடுறேன்,,
தனிமைக்கு உயிர் சேரும் துணை
இதுமட்டும்தானே
உயிர்க்கொடுத்ததற்கு நன்றி
எண்ணிக்கையிலடங்கா
நம் நட்சத்திர குறுஞ்செய்திகட்தான்
முதல் கவிதைகளாகிற்று
பின்புதான் அதைப் பலரும் எடுத்துக்கொண்டார்கள்
கடந்த மூன்று இரவுகளாகவே
நீ என் பார்வைக்கு
நட்சத்திரங்களை சேராத முழு நிலவாகிறாய்
மேகங்களுக்கெல்லாம்
ஏதேதோ உரு கொடுக்கிறாய்
ஆயிரமாயிரம். சூரிய தேஜஸ்களுக்கப்பால்
நிலவொளிகளுக்கப்பால்
உன்னுடைய பிரவேசமும்
தூக்கமும், சோம்பேறித்தனமும் தான்
அந்த அறை நிறைக்கின்றன
நம்மில் நம்மை
யாரோ ஒருவர் நேசித்திருக்கும்வரை
நம் தொடர்பிரிவு என்பது
மரணத்தின் பின்னால்தான் நேருவது
உன் குழந்தை நாட்களின்
செருகேட்டிலிருந்து
ஒரு நிழற்படம் கேட்டிருந்தேன்
நீ அப்போது உடுத்திய
ஆடைகள் உள்ளனவா எனக் கேட்டிருந்தேன்
மறந்திருப்பாய்
இன்றும் அதே ப்ரியமிருந்தால் அனுப்பிவை
ஒருமுறை பார்க்கிறேன்
அப்போதுதானே
அடுத்தமுறை நீ எப்போதாவது
அழைக்கும்போது
உன்னை கிண்டல் பண்ணமுடியும்
இன்னும் என் சிரிப்பொலி
நீ சொன்னதுபோல் அழகாகத்தான் இருக்கிறது
உனக்குப்பிறகு
என்னுடன் பேசிய பலரும்
இதை சொல்லியிருந்தார்கள்
உன்னை அப்பப்போ நினைவு படுத்த
இவர்கள் போதாதா ம்ம்
இதன் பெயர்த் தெரியாமலேயே நீ இரு,
நமக்குள்ளிருக்கும்
இந்த நெருக்கம்
சுகமா, இதமா, என்று மட்டும் சொல் போதும்
தயவு செய்து
குழப்பம் என்று மட்டும் சொல்லிவிடாதே
சித்திரமே
கடவுளிடம்
மன்றாடிக்கொண்டிருக்கிறேன்
என் பிரார்த்தனையின் பலம்
உன்னை எப்போதும் காத்துக்கொள்ளும்
உன்னோடுதான் இருக்கிறேன்
உன்னைவிட்டு எங்கும் போய்விடவில்லை நான்
""என் காதல் கங்குகளின்
தணல் ஆறாமல் இருக்கிறது
இயற்கையிடம் ஒரு யுகத்தின்
மழை யாசிக்கிறேன் ம்ம்"""
அனுசரன்