உலகமயமாதல்

முன்னுரை:

"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில் உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்!" எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும், எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் அழியாத கல்வெட்டாக என்றும் நிலைத்து நிற்கும் உண்மை வரிகள் இப்பாடல் வரிகள். உலக மயமாதலை இதைவிட தெளிவாக ஒரு பாடலின் பல்லவியில் இந்திய நாட்டின் செல்வச் செழிப்பையும் உலகமயமாதல் என்னும் கொள்கையை அதன் விளைவுகளோடு எடுத்துக்கூறிய கவிஞரின் வரிகள் காலத்தால் அழியாத காவியம். இப்பாடல் வரிகளை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டாலே உலகமயமாதல் என்றால் என்ன என்று தெள்ளத்தெளிவாக விளங்கிவிடும்.

இதனை இன்னும் தெளிவாக விளக்க வேண்டுமெனில், உன் வீட்டில் இருந்து அரிசி எடுத்து வா, நான் என் வீட்டில் இருந்து உமி எடுத்து வருகிறேன், நாம் இரண்டையும் ஒன்றாக கலந்து ஊதி ஊதி சாப்பிடுவோம். இதுதான் அப்பட்டமான உலகமயமாதல். முதலாளித்துவ நாடுகள் நம்மைப்போன்ற வளர்ந்துவரும் நாடுகளை இப்படித்தான் ஏமாற்றி வருகின்றன. ஒரு நாட்டையே ஏமாற்றி அரசியல் வாதிகளும், முதலாளித்துவ நாடுகளும் ஏற்றம் பெரும் கொள்கைதான் "உலகமயமாதல்"

உலகமயமாதல் - பொருள் :

உலகமயமாதல் என்பதைப் பொருளாதாரத் தொடர்பில் பயன்படுத்தத் தொடங்கியது 1981 ம் ஆண்டில்தான். வளர்ந்துவரும் நாடுகளுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும், வளத்தையும் கொண்டுவருகின்றது என்பதும் முதல் உலக நாடுகளுக்கும், மூன்றாம் உலக நாடுகளுக்கும் நதி வளத்தைப் பெருக்க உதவுகிறது என்பது ஒரு சாராரின் கருத்து. மற்றொரு கருத்து பொருளாதார, சமூக, சூழல் அடிப்படையில் உலகமயமாதலை ஒரு எதிர் மறையான கருத்தாக அமைகிறது. இதன்படி உலகமயமாதல் வளர்ந்து வருகின்ற நாடுகளின் உரிமைகளை நசுக்குகிறது என்றும் வளம் வரும் என்று நினைத்த வேளையில் கொள்ளை லாபம் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டுள்ளது என்றும் பொருள் கொள்ளலாம்.

உலகமயமாதலும் பண்பாடும்:

உலகமயமாதல் இன்று உலகம் முழுவதும் பரவிவிட்ட காற்று போல சுற்றிவருகிறது. உலகத்தின் பல நாடுகளின் பாரம்பரியமிக்க பல பண்பாடுகளை காணாமல் போகச் செய்வதில் இந்த கொள்கை பெரும்பங்கு ஆற்றி வருகிறது. எடுத்துக்காட்டாக பாரம்பரியத்தில் சிறந்து விளங்கிய நம் இந்திய நாடு இன்று, வளங்களை இடித்து, பண்பாட்டைக் களைத்து, மனித நேயத்தை விடுத்து பணம் ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டு செயலாற்றிவரும் உலகமயமாதல் கொள்கையின் சில விளைவுகளை இக்கட்டுரையில் காண்போம். மேலும் எதிர்மறையான விளைவுகளையே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

விளைவுகள்:

பொருளாதாரம்:

1955 ம் ஆண்டுக்கும் 2007 ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உற்பத்திப் பொருட்களின் பன்னாட்டு வணிகம் 100 மடங்குக்கு மேலாக அதிகரித்து உள்ளது. 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விரிவடைந்த வணிகம் அந்நிய முதலீடு, அந்நிய செலவாணி என எண்ணற்ற காரணங்களால் ஒவ்வொரு நாளும் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான பல நாட்டு நாணய வணிகம் நடைபெறுகிறது. வணிகப் போட்டிகளுக்குத் தாக்குப் பிடிக்க உலக வணிகச் சந்தையில் பல நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு பொருளாதாரத் சந்தைகளை பிடிக்க உலகமயமாதலை நம்பி மக்களை ஏமாற்றி வருகின்றன. பல நாடுகளை வறுமையிலிருந்து மீட்பதற்கு உலகமயமாதல் ஒரு கருவி என்று வளர்ந்த நாடுகள் கூறுகின்றன. ஆனால் உண்மையில் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை அழித்து நாட்டினை மட்டுமே முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்கின்றன.

வெளியேற்றப்படும் மனித உழைப்பு:

அமெரிக்காவில் உள்ள 31% மருத்துவர்கள் இந்தியர்கள், 36% தொழில் வல்லுநர்கள் இந்தியர்கள், 55% பேர் தகவல் தொழில் நுட்பத்தில் பணியாற்றி வருகின்றனர். தங்கள் உழைப்பை அந்நிய நாட்டுக்காக செலவிடுகின்றனர். காரணம் வளமான ஊதியம், செல்வச் செழிப்பு. ஒவ்வொரு இந்திய மாணவர்களின் கனவு அமெரிக்காவில் வேலை வாய்ப்பினை பெற வேண்டும் என்பதே ஆகும். இதனால் நம் நாட்டுக்கு ஏற்படும் இழப்பினை யார் அறிவார்?

வணிகம்:

உலக நாடுகள் பல இந்தியாவை ஒரு வணிகச் சந்தை என்ற ஒரு பார்வையிலே பார்க்கின்றன. நம் நாட்டு வளங்களை உறிஞ்சி பின் அதனை நமக்கே விற்பனை செய்கின்றன. கோ-கோ கோலா ஒரு பாட்டில் தயாரிப்பதற்கு 100 லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. "வெள்ளைதான் அழகுதான்" என்று நம் இந்தியப் பெண்களை மூளை சலவை செய்து அலங்காரச் சந்தைகளை நம் நாட்டில் திறந்து கறுப்பு அழகில்லை என்று நம்மை நம்ப வைக்கின்றன. உலக அழகிப்போட்டிகளும், வெற்றியாளர்களும் என்பதும் பெரும் வணிக அரசியல்

நுகர்வுக் கலாச்சாரம்:

மக்களின் நுகர்வுக் கலாச்சாரமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் அடிப்படை. ஆனால் உலகமயமாதல் காரணமாக மக்கள் உள்நாட்டு பொருட்களை மறந்துவிட்டு வெளிநாட்டு பொருட்களின் மீது மோகம் கொண்டு வாழ்கின்றனர். ஊட்டச் சத்து நிறைந்த நம் உணவு வகைகள், pizza , KFC , பர்கர் என்ற அந்நிய பொருட்களின் முன்னால் அழிந்து போய்விட்டது. இதனால் ஆரோக்கியம் நிறைந்த நம் மக்கள் இன்று மருத்துவர்களின் பின்னால் ஓடிக்கொண்டு இருக்கின்றனர். மேலும் தரம் குறைந்த சைனாப் பொருட்கள் நாம் சந்தையை ஆக்கிரமித்துக் கொண்டு நம் இந்திய பொருட்களை வெளியேற்றுகின்றன. இதனால் பல தொழிலாளர்கள், கைவினை கலைஞர்கள் வேலை வாய்ப்பினை இழந்து வறுமையில் வாடுகின்றனர்.

கள்ளச் சந்தை:

உலகமயமாதலின் காரணமாக 2010 ம் ஆண்டில் உலகப் போதைப் பொருள், வணிகம் ஆண்டு ஒன்றுக்கு 320 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் பெற்றது என ஐக்கிய நாடுகள் அலுவலகம் அறிவித்துள்ளது. அறிய மூலிகை குணம் கொண்ட தாவரங்கள், விலங்குகள் என ஒவ்வொன்றும் கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன. இதற்கென முறையான விதிமுறைகளோ, தணிக்கைகளோ கிடையாது. இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் அழிந்து வருகின்றன.

அரசியல்:

இன்றைய சூழலில் அரசியல் இல்லாத துறையே இல்லை எனக் கூறலாம். எல்லாவற்றிற்கும் அரசியல் சாயம் பூசப்பட்டுவிட்டது. உலகமயமாதல் என்னும் இந்தக் கொள்கையே ஒரு அரசியல் தான். முதலாளித்துவ நாடுகளின் நலனுக்காக, இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளும், பெரு நிறுவன முதலாளிகளும் இணைந்து நடத்துவது இந்த உயரிய கொள்கை! அமெரிக்க இந்தியாவை ஆதரிப்பது ஒரு அரசியல் அதே வேளையில் பாகிஸ்தானை ஆதரிப்பதும் ஒரு அரசியல். இடைப்பட்ட நாம் தான் ஏமாளிகள்!

பண்பாடு:

ஒரு மொழி அழிந்து விட்டாலே அதன் பண்பாடு, கலாச்சாரம் என சகலமும் அழிந்துவிடும். உலகின் 35% கடிதங்கள், தந்திகள் போன்றவற்றின் மொழி ஆங்கிலம். உலகின் 40% வானொலி நிகழ்ச்சிகள் ஆங்கிலத்தில் நடைபெறுகின்றன. இணையத்திலும் ஆங்கிலமே முதன்மை மொழியாகத் திகழ்கிறது. உலகத் தொடர்புகளை உருவாக்கும் அதே வேளையில் பல பண்பாட்டுக் கலாச்சாரங்களின் ஆணிவேரையே அழித்துவிட்டது. தாய்மொழியில் பேசுவது அசிங்கம், அவமானம் என்று நினைக்கும் சமுதாயத்தில் வாழ்ந்து வருகிறோம். நுனி நாக்கில் ஆங்கிலம் பேச வேண்டும் என்பதே இன்றைய இளைய தலைமுறையினர், பெற்றோர்களின் கனவு. உலகமயமாதலின் பங்கு இன்றியமையாதது.

முடிவுரை:

மேலோட்டமாக பார்க்கும்போது உலகமயமாதல் என்பது அருமையான, மிக இன்றியமையாத கொள்கை போன்று தோன்றும். ஆனால் சற்று உற்று நோக்கினால் எளிதாக புரிந்துவிடும், தேங்காய் துண்டிற்கு வலையில் மாட்டிய எலிகள் என்று! ஒரேயடியாக இந்த கொள்கை ஆபத்தானது என்று சொல்லிவிட முடியாது. இன்று தகவல் தொழில்நுட்பம், மற்றும் அறிவியல் விஞ்ஞான வளர்ச்சியில் நம் நாடு முன்னேற இக்கொள்கையே பெரிதும் உதவியது! இன்று இந்தியா பல நாடுகளை பின்னுக்குத் தள்ளி முன்னேறி வருவது நமக்கு பெருமையே! ஆனால் நம் அடையாளங்கள் எல்லாம் அழிந்த பிறகு யாருக்காக, யாருடைய வளர்ச்சிக்காக நம் முன்னேற்றம்?

சிந்தித்திடுவோம், தெளிந்திடுவோம், எனக்கென்ன என்று ஒதுங்கிச் செல்லாமல் நம் உடன்பிறப்புகளுக்கு தோள் கொடுப்போம்

எழுதியவர் : (5-Jan-18, 11:56 am)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 851

சிறந்த கட்டுரைகள்

மேலே