குழந்தையும் பூனையும்

இது ஒரு படக்கவிதை...


குழந்தையும் பூனையும்..!
=======================

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றென..
...............கவியரசின் மனதிலன்று தத்துவமே பிறந்தது.!
மழலை பேசும்அழும் விழும்எழும்.!...வீட்டில்..
...............பழகும் பிராணியோடு பயமின்றி விளையாடும்.!
அழுக்காக்கிக் கொள்ளும் உடம்பையும் சட்டையும்..
...............அழுக்கதன் மனதிலொரு போது மில்லையாம்.!
பழுத்த பெரியோர்களைப் பழமைபேசச் சொல்லி.!
...............குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும்.!


ஆசையுடன் வளர்ப்பதற்கும் பழகு தற்கும்..
...............ஐந்தறிவு ஜீவிகளும் பலவுண்டு நம்மிடையே.!
மீசைவச்ச பூனைக்குட்டியும் அதிலே ஒன்றாம்..
...............மியாமியா வெனக்கத்தும்! நம்காலடியில் சுற்றும்.!
தோசைபோல ஒட்டிக் கொள்ளும் நம்மடியில்..
...............தொட்டு வருடினால் மனதுக்கு இதமளிக்கும்.!
ஆசைநாயகிக்கு அருமைப் பரிசாக அப்பூனையை..
...............அயல்நாட்டில் வழங்கும் வழக்கமும் உண்டாம்.!


வானூர்திபோல சிறிதுதூரம் வேகமாக ஓடியே..
...............வகையாய் இரையை வாயால் பிடிக்கும்.!
தானும் புலிக்குச் சற்றும் சளைத்தவனில்லை..
...............எனச்சீறிப் பாய்ந்துதன் பல்லைக் காட்டும்.!
ஊனுண்ணும் பாலூட்டி,!..சஷ்டியின் வாகனமது!..
...............உபத்திரவம் மனிதர்க் கென்றும் செய்யாது.!
மீனுணவை விரும்பி உண்ணும் மிச்சமதை..
...............தானீன்ற குட்டிக்குப் பகிர்ந்து கொடுக்கும்.!


காட்டில் உலவும் புலியுமிதற்கொரு உறவாகும்..
...............கனிவுடன் பழகும் ஆபத்தில்லா அழகுப்பூனை.!
வீட்டில் நமக்குப் பொழுதுபோகும் தன்னிடம்..
...............மாட்டிய எலியைக் கவ்வித்தூக்கியே பந்தாடும்.!
பாட்டில் பாரதியு மிதற்கொரு இடமளித்தான்..
...............பூனையின் பலநிறம் சொல்லும் தத்துவத்தாலே.!
ஏட்டில் எழுதிய மியாவ்மியாவ்ப் பாடலின்றும்..
...............என்றும் ஒலிக்கிறது மருதகாசியின் நினைவாக.!
==================================================
வல்லமை படக்கவிதை போட்டிக்குச் சமர்ப்பிக்கப்பட்டது..

நன்றி :: கூகிள் இமேஜ்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (6-Jan-18, 11:53 am)
பார்வை : 97

மேலே