சந்யாசியும் பெண்மணியும்- சாணக்கியன்

ஏக ஏவ பதார்தஸ்து த்ரிதா பவதி தீக்ஷிதஹ

குணபஹ காமினீ மாம்ஸம் யோகிபிஹி காமிபிஹி ஸ்வபிஹி



–சாணக்கிய நீதி, அத்யாயம் 14, ஸ்லோகம் 16



பொருள்

ஒரே பொருளோ, மனிதரோ பார்வையாளரின் மனப்போக்கிற்குத் தக மூன்றாகத் தோன்றும். ஒரு பெண்ணுடைய உடலானது யோகிகளுக்கு வெறும் உயிரற்ற சடலமாகவும், காதல்வயப்பட்ட ஆணுக்கு பேரழகியாகவும், நாய்களுக்கு வெறும் மாமிஸமாகவும் தோன்றும்.

சாணக்கியன் சொல்லுவது சரியானதுதான் என்பதற்கு மேலும் சில உதாரணங்களைச் சொல்லலாம்



ஒரு அழகான இளம் பெண், அவளுடைய சஹோதரனுடன் பஸ்ஸில் அருகருகே உட்கார்ர்ந்து இருந்தால், அவன் என்ன நினைப்பான். ‘அட, நமக்கு எவ்வளவு அழகான சஹோதரி வாய்த்திருக்கிறாள்; இவள் நல்லபடி கல்யாணமாகி, நல்லபடி வாழ வேண்டும்’ என்று கடவுளைப் பிரார்த்திப்பான். சஹோதர வாஞ்சையுடன் இருப்பான்.



அதே அழகி, ஒரு இளைஞன் அருகில் உட்கார்ந்து இருந்தால், அந்த இளைஞன் என்ன நினைப்பான்; ‘அடடா, என்ன அழகு! இந்தப் பெண் நமக்கு மனைவியாக இருந்தால் எப்படி இருக்கும்!’ என்று காம உணர்வுடன், காதல் நோக்கில் அவளைப் பார்ப்பான்.



அவன் அருகில் ஒரு சிறு குழந்தை உட்காந்து இருந்தால், அது மற்ற ஒரு பெண்ணையும் தாய் போலக் கருதி, கட்டிக் கொள்ளும். அங்கே தாய்- மகன் என்ற பாச உணர்வு (Supreme love and affection) மட்டுமே இருக்கும். உலகிலேயே மிக உன்னதமான உணர்ச்சி அது.



இப்போது நமக்குள் ஒரு கேள்வியை எழுப்பிப் பார்க்கலாம். அருகிலுள்ள பெண்ணின் உடல்தான் இந்த உணர்வுகளுக்குக் காரணமா? அல்லது அவளை நாம் பார்த்தவிதமும் மனதின் போக்கும்தான் காரணமா?



மனதின் போக்குதான் இதற்குக் காரணம் என்பர் சான்றோர்கள். மேலும் எது இன்பம் என்பதை விளக்கவும் அவர்கள் ஒரு அளவுகோல் (Scale or Touch stone) வைத்துள்ளனர். எது ஒன்று எல்லோருக்கும் எப்போதும் நிரந்தர இன்பம் தருமோ அதுவே இன்பம் என்பர்.



இதனால்தான் “கண்டேன் கண்டேன் கண்ணுக்கினியன கண்டேன்” என்றும் “சேரவாரும் ஜகத்தீரே” என்றும் “யான்பெற்ற இனம் பெறுக இவ்வையகம்” என்றும் சான்றோர்கள் ஆடிப்பாடி கூத்தாடுகின்றனர்.



நிரந்தர இன்பம் இது என்று நாங்கள் சொல்லியும், காட்டியும் பின்னர் நீங்கள் அடியார் திருக் கூட்டத்தில் சேராதது ஏன் என்றும் வினவுகின்றனர்.



இன்னும்சில யோகியர் வேறு ஒரு எடுத்துக்காட்டை நம்முன் வைப்பர். ஒரு நாய்க்கு எலும்புத் துண்டு ஒன்று கிடைத்ததாம். அது கூரான முனைகளை உடையது. அதை வாயில் போட்டு மென்றவுடன் ரத்தம் வரவே அதற்கு பெரு மகிழ்ச்சி. முன்னைவிட எலும்பை பலமாகக் கடித்துக் குதறத் துவங்கியது. அது நினைத்தது—‘எலும்பிலிருந்து ரத்தம் வருகிறது’ என்று; ஆனால் உண்மையில் எலும்பின் கூரான முனைகள் அதன் வாயைக் கிழிக்க, கிழிக்க ரத்தம் மேலும் மேலும் வெளி ஏறியது. இன்பத்தின் காரணம் என்ன என்பதை அது தவறாகப் புரிந்து கொண்டது.



சாணக்கியன் இரண்டே வரிகளில் சொன்னதை சமயச் சான்றோர்கள் மணிக் கண்ணக்கில் உபந்யாசங்களில் விளக்குவர்!!!



-சுபம்,சுபம்–
Written by London Swaminathan

Share this:

எழுதியவர் : (17-Jan-18, 7:03 pm)
பார்வை : 129

மேலே