நெஞ்சோடு கலந்திடு-அத்தியாயம்-10

....நெஞ்சோடு கலந்திடு....

அத்தியாயம் : 10

என் இறுதிப் பரீட்சைகளை எழுதி முடித்துவிட்டு வெளியே வந்த நான்..அந்தச் சட்டக் கல்லூரியை ஓர் முறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன்...இந்த நான்கு வருடங்களாய் என் தனிமைக்கு துணையாய் நின்ற கல்லூரி அல்லவா..??...முன்னே எழுந்து நின்ற அந்தக் கட்டிடத்தை பாசத்தோடு தழுவிக் கொண்டது என் விழிகள்...

கண்ணீரும் புன்னகையும் மாறி மாறி என் முகத்தினை நிறைத்துக் கொள்ள,கடந்த நான்கு வருடங்களாய் எனக்குத் தோள் கொடுத்த தோழமைகளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வாயிலை நோக்கி என் நடையைத் தொடர்ந்தேன்...

என் கனவுகள் அனைத்தும் நனவாகும் காலம் என்னை நெருங்கிவிட்டது...ஆனால் அவன்..??நான்கு வருடங்களிற்கு முன் என்னைத் தேடி வராதேயென்று சொல்லிச் சென்றவன்,என்னைத் தேடி வரவுமில்லை...அவன் சொன்னது போல் அவனைத் தேடி நான் செல்லவுமில்லை...மேலும் மேலும் அவன் முன்னே போய் நின்று அவனை வேதனைக்குள்ளாக்க நான் விரும்பவில்லை...அதைவிடவும் அவன் என்னை வெறுத்துவிடுவானோ என்ற பயம் முதன்முறையாக அன்று என்னைத் தொற்றிக் கொண்டதும் ஓர் காரணம்...

ஆனால் இந்த நான்கு வருடங்களில் அவன் நினைவுகள் என்னை விட்டு ஓர் விநாடி கூட விலகியதில்லை...அவனை நான் தேடிச் செல்லவில்லையே தவிர,அவனைப்பற்றிய தகவல்களை நான் தேடிக் கொண்டேதான் இருந்தேன்...

அவனது எண்ணங்களில் மூழ்கியபடியே வாசலை வந்தடைந்த நான்,அதற்கு மேலும் நகர முடியாமல் அப்படியே சிலை போலே நின்று கொண்டேன்...

இத்தனை வருடங்களாய் என்னைக் கட்டிப் போட்ட அந்த விழிகள்...தூரமாய் நின்று என்னை கூறு போட்டுக் கொண்டிருந்தது..நான்கு வருடங்களாய் நான் காணத்துடித்த அவன் முகம்..என்னை மொத்தமாய் அளவெடுத்துக் கொண்டிருந்தது...

அவனேதான்...என் வருணேதான்..."உன்னைத் தேடி வரமாட்டேன்"என்றவன் இன்று வந்துவிட்டானா..??என்னைத் தேடி வந்துவிட்டானா...??...அவனை அப்படியே ஓடிச் சென்று அள்ளிக் கொள்ள வேண்டும் போலிருந்தது..ஆனாலும் ஏதோ ஓர் தயக்கம் என்னை நகரவிடாது கட்டிப் போட்டது...

காரின் கதவோடு சாய்ந்தவாறு கைகளிரண்டையும் மார்பிற்கு குறுக்கே கட்டிக் கொண்டு என்னையே பார்வையால் அளந்து கொண்டிருந்தவனும் அசையவில்லை...வாசலில் நின்று கொண்டு அதிர்ச்சி கொஞ்சமும் குறையாது அவனையே ஏக்கத்தோடு வருடிக் கொண்டிருந்த நானும் நகரவில்லை...

எவ்வளவு நேரம் இருவருமே அப்படி நின்றோமென்று தெரியவில்லை...அவன் என்னை நோக்கி வரும் வரை நான் அவனது மனதிற்குள்ளேதான் மூழ்கிக் கொண்டிருந்தேன்...அவன் அருகே நெருங்கி வர வர என் இருதயம் படபடவென்று அடித்துக் கொண்டது...

வேகமாகவே என்னை நெருங்கி விட்டவன்,என்னை யாரையோ பார்ப்பது போல் பார்த்து வைத்தான்...அவனது முகம் இறுகிப் போயிருந்தது...அன்று இறுதியாக அவனை எப்படிப் பார்த்தேனோ அதைவிடவும் இன்று கடுமை காட்டியது அவன் முகம்..

என் உள்ளம் உள்ளே அடித்துக் கொண்டாலும்,வெளியில் எந்தத் தாக்கமுமே ஏற்படாதது போல் சலமின்றியே என் முகத்தினை வைத்துக் கொண்டேன்...

"வா"என்று ஒற்றைச் சொல்லாக கூறியவன்,என் பதிலிற்கு காத்திருக்காமலேயே முன்னோக்கி நடக்கத் தொடங்கினான்...நான்கு வருடங்களின் பின்னான அவனது அந்த அழைப்பே எனக்குப் போதுமானதாக இருக்க..அவனைப் பின்தொடர்ந்து சென்றேன்...

அவனது காரின் அருகே சென்றவன்,எனக்காக மறுபக்க கதவினைத் திறந்துவிட்டு,சாரதி இருக்கையில் அமர்ந்து கொண்டான்...அவனைத் தொடர்ந்து நானும் ஏறிக்கொள்ள கார் வேகமெடுத்துக் கிளம்பியது...எங்கே செல்கிறோம் என்று அவனும் கூறவில்லை...எங்கே போகிறோம் என்று நானும் கேட்டுக் கொள்ளவில்லை...

அவனது கவனம் முழுதும் சாலையிலேயே பதிந்திருக்க...என் கவனம் முழுதும் அவன் மேலேயே பதிந்து கொண்டது...அப்போதிருந்ததிற்கு இப்போது மிகவும் உரு மாறியிருந்தான்...

அவனையே ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தேன்....அதை அவன் கண்டு கொண்டாலும்...காணாதது போல் பாவனை செய்து கொண்டு வண்டியை ஓட்டுவதிலேயே குறியாக இருந்தான்...

இனியும் அவனிடத்தில் எந்தன் காதலைச் சொல்வதில் எனக்கு எந்தத் தடையுமே இருக்கவில்லை....ஆனால் அவனது முகத்தில் இப்போது குடியேறியுள்ள கடுமைதான் எனக்குள் லேசான திகிலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது...

மனதை ஏதோ ஒரு தயக்கம் சூழ்ந்து கொள்ள...மீண்டும் என் நினைவுகளிற்குள்ளேயே மூழ்கத் தொடங்கினேன்...என் கவனத்தை அவனிடமிருந்து திருப்பி,சாலையில் நான் செலுத்த முற்பட்ட போது அவன் காரை சாலையின் ஓரமாக நிறுத்தியிருந்தான்...

அவன் நிறுத்திய இடத்தினைக் கண்டதுமே...இருவரும் எங்கே வந்திருக்கிறோம் என்பது புரிந்து போனது...ஒரு பக்கம் அந்த இடத்திற்கு அவன் என்னைக் கூட்டி வந்தது சந்தோசமாக இருந்தாலும்..மறுபக்கம் வேதனையாகவும் இருந்தது...

ஆம்,அவன் என்னை அழைத்து வந்தது,இருவரது நினைவுகளுமே உலாவிக் கொண்டிருக்கும் இருவரின் காதலின் அடையாளமான அந்தக் கடற்கரைக்குத்தான்....அவனைப் போலவே என் மனதிற்கு மிக நெருக்கமாகிக் கொண்ட கடற்கரை...

காரிலிருந்து இறங்காமலேயே அக் கடலை என் விழிகள் தழுவிக் கொண்டன...ஆனால் அவனிற்குத்தான் எனக்காக காத்திருக்க நேரமில்லை போலும்...எனக்கு முன்னமே காரிலிருந்து இறங்கியிருந்தவன்...மீண்டும் அதே சொல்லை உச்சரித்தான்...

"வா..."

"இதைத்தவிர என்கிட்ட பேச உனக்கு வேற எதுவுமே இல்லையா வருண்...??.."என்று சத்தமின்றியே மனதிற்குள் என் வார்த்தைகள் அழுது கொண்டன...

காரிலிருந்து இறங்கி அவனோடு நடக்கத் தொடங்கிய நான்...அவனுக்கும் எனக்குமான இடைவெளியை வெறுமையோடு குறித்துக் கொண்டேன்...அவனது மனதிலும் எனக்கான இடைவெளி விழுந்துவிட்டதோ என்று என் உள்ளம் கசப்போடு எண்ணிக் கொண்டது...

அன்று எந்த இடத்தில் வைத்து காதல் சொன்னானோ அதே இடத்தில் போய் நின்று கொண்டவன்,என்னைத் திரும்பிப் பார்த்தான்...என் உள்ளம் ஓர்வித எதிர்பார்ப்பில் தடதடக்கத் தொடங்கியது...என் உணர்வலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நான்...அவனது காதல் மொத்தத்திற்குமாக முழுதாக ஏங்கி நின்றேன்...

இன்று அவனின் கண்சிமிட்டலொன்றே போதும்...அவனிடத்தில் என் காதல் மொத்தத்தையும் கொடுத்து சரணடைந்து கொள்ள....அவனின் ஓர் அழைப்பு போதும்...அவனுள் நான் புதைந்து கொள்வதற்கு...ஆனால் என் மனம் எதிர்பார்ப்பதையெல்லாம் இன்று அவன் செய்வானா என்பதில்தான் என் உள்ளம் முதற் தடவையாக ஆட்டம் காணத் துவங்கியது...

நான் ஏதேதோ கற்பனைகளில் எல்லாம் சுழன்று கொண்டிருக்க அவன் என் ஒட்டுமொத்த கனவுகளையும் சிதைப்பது போல் பெரிய இடியையே என் தலையில் இறக்கினான்...

"எனக்கு வீட்டில பொண்ணு பார்த்திருக்காங்க....வாற மாசம் சம்பந்தம் பேச அப்பா,அம்மா,அக்கா எல்லாரும் அமெரிக்காவில இருந்து வாறாங்க....அவங்க எல்லாருக்குமே பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு....எனக்கும்..."என்று சொல்லி நிறுத்தியவன் என்னை நன்றாக ஊடுருவிப் பார்த்தவாறே என் இருதயத்தை நொறுக்கும் அந்த வார்த்தைகளைச் சொன்னான்...

"எனக்கும் அவளை ரொம்பப் பிடிச்சிருக்கு..."

இந்த வார்த்தைகளை இவன் சொல்வதற்கு பதில் என்னை கொன்றே புதைத்திருக்கலாமே....கண்ணீர் தேங்கிய விழிகளோடு அவனையே வெறித்துப் பார்த்தேன்...நடப்பதெல்லாம் கனவாக இருக்கக் கூடாதா என்று உள்ளம் கதறி அழுதது...ஆனால் என் காதல்தான் அங்கே கனவாகிப் போனது....நினைவுகள் வீசும்....

எழுதியவர் : அன்புடன் சகி (18-Jan-18, 7:00 pm)
பார்வை : 259

மேலே