தமிழ் மொழி

தமிழ் மொழி
அமிழ்தம் உண்டென்பார் பலரும்
தமிழே அமுதென்பார் சான்றோர்
அமிழ்தம் அமிழ்தம் எது அமிழ்தம்
தமிழே தமிழே தானமிழ்தம்

எத்தனை சுவைகள் எத்தனை இன்பம்
அத்தனையும் உண்டன்றோ அதனில்
மெத்தவே போற்றிடினும்
நித்தமும் வாழ்த்திடுனும்
புத்தம் புதிதாய் மிளிரும் - அது
தித்திக்கும் தேனிசையாய் பரவும்

முத்தமிழுக்கு ஈடேது
மூவுலகில் புகழோடு
தானே தனித்தியங்கும் அதுவே - என்றும்
தரணியெலாம் போற்றும் தமிழே

சொற்சுவை பொருட்சுவை தேன்சுவை பாற்சுவை
அறுசுவையும் மிளிரும் அதனில் - அதனைப்
பருகிடவே பருகிடவே போதாது போதாது
நம் நாச்சுவை தேடுமே இன்னும் -அது
நாளுமே அலைபாயும் எங்கும்
வண்ணப் பூங்குயில் எண்ணத்திலே மின்னி
தென்றல் தவழ்ந்தாட வருவாள் - தமிழன்னை
கன்னல் சுவையெனவே திகழ்வாள்

வசந்தமே வீசிடும் இசைத்தென்றல் கவிபாடி
பூமழைப் பொழிந்தே வாழ்த்தும்
மலரன்னைத் தழிழையே போற்றும்

பாட்டென்றும் தொகையென்றும் கீழ்க்கணக்கென்றும்
எத்தனை வண்ணங்கள் அதனில் -
காவியம் காப்பியம் இதிகாசமெனவே
இதமளிக்கும் மனதிலே நாளும்

சிற்றிலக்கியம் அதுவோ சிந்தையை வருடியே
சீரியே பாயும் எங்கும்- அதனில் நீந்திய
மனமென்ற அன்னப் பறவையும்
பாலையும் வெறுக்குமே நாளும்

பைந்தமிழ் அன்னைக்குப் பலசான்றோர் ஆன்றோர்
அணிசேர்த்தர் தரணியில் நாளும்-
புலவரும் புரவலரும் புவியோர் பல்லோரும்
பூமலர்ச் சொரிந்தே பாமலர் இசைத்தனரே என்றும்

இதில் என்செய்வேன் நானுமே
தேடுகிறேன் நல்முத்தை நாளுமே கடலில்
தமிழ்க் கடலில்

கிட்டவில்லை இன்னமும் -
சுட்டினாள் அவ்வை என்னிடம்
கற்றது கைமண்ணளவு என்றே!
அதனைத் தலவணங்கி ஏற்றேன் நானே.

அன்புடன்,
ஸ்ரீ.விஜயலக்‌ஷ்மி
தமிழாசிரியை,
கோயம்புத்தூர் 641022.

எழுதியவர் : ஸ்ரீ.விஜயலக்‌ஷ்மி (21-Jan-18, 9:16 pm)
Tanglish : thamizh mozhi
பார்வை : 480

மேலே