தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 19 --- முஹம்மத் ஸர்பான்

181.கூண்டிற்குள் சிறைப்பட்ட பறவைகள்
அசைந்தாடும் மலர்களை சபிக்கின்றது
182.மெய்களை மறைக்கும் ஊடகங்கள்
பொய்களின் விதியை யுகமாக்கும்
183.ஊழலை ஒழிக்கும் சட்டங்களெல்லாம்
உறுதியற்ற நாகரீகச் சவப்பெட்டிகள்
184.சித்தனிடம் தத்துவத்தைக் களவாடி
பித்தனிடம் வாழ்க்கையை விற்கின்றோம்
185.திறமையுள்ள ஏழையின் போராட்டம்
கல்லறைக்குள்ளும் கல்லடி படுகிறது
186.குருட்டுப் பிச்சைக்காரியின் அட்சயத்தில்
சீல் படிந்த காமத்தின் ஒட்டடைகள்
187.தென்றலிடம் பாடத்தைக் கற்று
தேர்வெழுதச் செல்கிறது பறவைகள்
188.நாட்கள் நீர்வீழ்ச்சி போல் ஓட
வாழ்க்கை நதிகளாய் மாறும்
189.ஆயிரம் துப்பாக்கிச் சூடுகளின் பின்
மூங்கில் புல்லாங்குழலாகிறது
190.ஆயிரம் உணர்வுகளை மடி சுமந்து
குழந்தைகளை பெற்றெடுக்கிறான் கவிஞன்