மரணவாக்குமூலம்
ஒவ்வொரு நாளும்
விடியும் என்று
நம்பிதான் எழுகிறேன்...
ஆனால்
அந்த விடியல் கூட
இருளில் தான் தொடங்குகிறது
என் வாழ்க்கையில் ...
அகவை இன்னும்
ஈரைந்து தாண்டவில்லை...
ஆயுள் கூட
அதைத் தாண்ட எண்ணவில்லை...
தாய் மடியைத் தலையணையாக்கி
துயில் கொண்ட காலங்கள்
தீப்பட்ட தளிராகக் கருகி விட்டன!
நட்போடு நடனங்கள்
நானாடிய தருணங்கள்
இனி நீள வாய்ப்பில்லை
ஒளிபட்ட பனியாகக் கரைந்து விட்டன!
பாசத்தோடு பார்த்துக் கொண்டாள்
என் அன்னை கருவறையில் !
நானும் பிறப்பெடுத்தேன்
பாவம் நிறைந்த நிலவறையில்!
இப்போது இருப்பது நான்
இருட்டறையில் ...
என் தாய் ,
வகடெடுத்து வாரிய
தலைமுடிகள் எனக்கில்லை
ஆடிப்பாடி விளையாட
அவகாசம் ஏதுமில்லை ...
ஆம்!
அதுதான்!
எனக்கு வந்திருப்பது
அதுதான்!
பாடம்
கற்றுக் கொள்ள
பள்ளி செல்லும்
பருவத்திலே...
புற்றுக்கட்டி வந்து
படுத்துவிட்டேன்
மருத்துவமனை விருந்தாளியாய் !
அங்கு
விருந்தும் வைத்தார்கள்
விதவிதமாய் ...
மருந்து மாத்திரை
வடிவினிலே...
மருத்துவக் கதிர்வீச்சும்
தனிமையின் கதிர்வீச்சும்
உடலையும் மனதையும்
ரணரணமாய் நொறுக்குகின்றன !
என் வாழ்வு
தொடங்கும் முன்னே
முடிவு தேடும்
விதி இதுவோ ?
கேள்வி கனைகள்
என்னைத் துளைகின்றன.
ஏன் இந்த வாழ்வு ?
எதற்காக இந்த நோவு ?
வாழ்வே இல்லாமல்
எதற்காக இந்த சாவு ?
கைவிரல் இடைதனிலே
சிகரெட்டைப் பற்றிக் கொண்டு
புகைவண்டி எந்நாளும்
விட்டதில்லை...
உள்ளங்கையில் புகையிலையை
உருண்டையாக்கி
உள்கடைவாய் பக்கமாக
அடக்கியதில்லை ...
மதுபானம் கையேந்தி
மதிமயங்கி எந்நாளும்
மதிலோரம் கிடந்ததில்லை ...
இருந்தும் என்னைப் பற்றியது
நோயென்ற புற்று !
இது புற்று அல்ல !
மனிதன் இயற்கைக்குச் செய்த
பாவத்தின் தொற்று !
நான்
பிறந்தது தவறில்லை ...
இந்த பூமியில்
பிறந்தது தான் தவறு !
சிந்தடிக் என்ற பெயராலே
சிரிப்பெல்லாம் சிதைத்து விட்டோம்!
தலைமுறை தலையெடுக்காமல்
தளிரிலேயே புதைத்து விட்டோம்!
வளர்ச்சி என்ற பெயராலே
வாழ்வையே அழித்துக் கொண்டு
விழிமூடி உறங்கி கிடக்கும்
மானிடா !
விழித்துக்கொள் !
இனியாவது விழித்துக்கொள்!
இது
என் வெற்று வார்த்தையல்ல...
மனித இனத்திற்கே
மரணவாக்குமூலம் !