மதுரையார் கோமான் பெண்டிரேம் ஆக அறிவாரார் – முத்தொள்ளாயிரம் 66
நேரிசை வெண்பா
அறிவாரார் யாமொருநாள் பெண்டிரேம் ஆகச்
செறிவார் தலைமேல் நடந்து – மறிதிரை
மாட முரிஞ்சும் மதுரையார் கோமானைக்
கூட ஒருநாட் பெற. 66 – முத்தொள்ளாயிரம்
பொருளுரை:
தடுக்கும் அலைகள் உப்பரிகைகளைத் தேய்க்கும் மதுரை மக்களின் மன்னனாகிய பாண்டியனைக் கூடி அடைவதற்கு ஒரு நாள் பெறுவதற்கும், யாம் ஒரு நாள் அப்பாண்டியனுக்கு மனைவியாவதற்கு உரிய நாளையும் தலைக்கு மேலுள்ள காவலைக் கடந்து சென்று அறியக் கூடியவர் யார்’ என்ற தலைமகளின் ஆற்றமை வெளிப்படுகிறது.
பெண்டிரேம் ஆக – பாண்டியனுக்குரிய மனைவியாக,
தலைமேல் நடந்து – தலைக்கு மேலுள்ள கட்டுப்பாட்டைக் கடந்து,
மறிதிரை – தடுக்கும் அலை (வைகையாற்று வெள்ளத்தின் அலை),
மாடம் – மாளிகை, உப்பரிகை, உரிஞ்சும் – தேய்க்கும்,
கோமான் – மதுரை மக்களின் மன்னனாகிய பாண்டியன்,