பாதங்களால் நிறையும் வீடு --- கலித்துறை

கலித்துறை :


தேன்மழைத் துளிப்போல் யாழ்மொழி பேசுந் தேவதைகள்
வான்உறு மதியின் ஒளிதனில் களிகூர் மனத்தோடு
கூன்பிறை யுடலாட் சொல்கதைக் கேட்டுக் குறுநகையில்
ஈன்றவள் மடியில் நெல்லமு துண்ப தெழில்மிகுதே...

ஏழ்பரு வமொக்கும் இளம்பொழில் வாழும் வண்டினங்கள்
ஆழ்மனந் தோன்றும் அகல்விசும் பன்பில் ஓருயிராய்
ஏழ்பரி யோன்போல் இதயம துவீசும் பொற்றொளியில்
தாழ்திறந் தின்பந் தாமரை மலராய் வந்திடுதே...

வீசுதென் றலோடு வெண்பனி நனைந்து விரிமலர்ப்போற்
பூசுமஞ் சளோடு பொன்வளை யணிந்து புதுமணப்பெண்
தேசுறு நிலவாய்த் திருவிழா வேற்குந் திருமணநாள்
மாசறு மனத்தால் வாழிடம் புதிய வானுலகே...

மாதவம் புரிந்து மாதவட் சுமக்கும் மகவொன்றாற்
மாதவட் பதியும் மாகடற் களிப்பில் மருட்கொள்ள
கோதறு மனத்தோர் குலத்தினில் இன்பங் குடைவிரிக்க
மேதினி மயக்கும் வீணையின் இசையும் வீட்டினிலே...

கண்விழுந் தீப்போற் கடுந்துயர் நெஞ்சிற் காற்பதித்தால்
விண்டருந் துளியில் வியன்நிலந் தணிந்து விளைநெற்போற்
கொண்டலின் உறவாய்க் கொடுத்தருட் டுளியிற் குளிர்வித்துத்
தண்ணிழல் விரிக்குந் தளிர்எனுஞ் சொந்தந் தருமன்பால்...


வாய்ப்பாடு :

விளம் மா விளம் மா காய்

எழுதியவர் : இதயம் விஜய் (30-Jan-18, 8:56 pm)
பார்வை : 1729

மேலே