ஒரு பாட்டியின் கண்ணீர்
ஒரு கதை சற்று கவிதை நடை
🌸🌸🌸🌸🌸🌸
இள வயதில் பல கனவில்,
மணவாழ்வில் இணைந்து
ஆணொன்றும்,பெண்ணொன்றுமாய் மகவு இரண்டு.
பெண் பிள்ளை பெரியவளாகி,
இன்னொருவனுக்கு உரியவள்
ஆகிவிட,ஆண் பிள்ளை வளர்ந்தும் குழந்தையாய்,ஏதும்
அறியாமனதாய் வறிய நிலையில் என்னுடன் மீதமாய்🌸மகளிரண்டு மகவெடுத்து என்னை பாட்டி
ஆக்கினாள்.சந்தோஷமில்லா
வாழ்வில் கணவனின் சந்தேக
சுடுசொல் தாங்காது ,தீயில்
தன்னைச் சுட்டுக் கொண்டு,
சுவரில் மாட்டும் படமாகிப்
போனாள்.இப்போதென்னுடன்,
நான் பெற்றதும்,(ஆண்)பெற்றது தந்தது இரண்டு என
அவர் மூவரோடு நான்காகிப்
போனேன்.பாரபட்சம் காட்டாத
இறைவா! எனக்கு மட்டும்
ஏனிந்த சோதனை? ஈர நிலத்தில் விழுந்த இடியாக
என் நெஞ்சம் துடிதுடித்தது.
பசி என்று கேட்கத்தெரியா
பிள்ளைகளின் நிலை கண்டு
என் கண்ணீர் உதிரமாய் சிந்த
அவர்களை சுமக்கும் தேராகிப் போனேன். தாயில்லாது போன
பிள்ளைகளை நோயில்லாது
வளர்க்க பல நோய் நான் கண்டேன்.தள்ளாத வயதில்
சிறகொடிந்த பறவையாய்
இடை நோக இரை தேடினேன்.
கண்ணீர் வந்தாலும் ,மழலைகளின் சிரிப்பில் நோய் மறந்தேன்.
தேரோடும் வீதியில்தெய்வம்
தரிசனம் தரக் காத்திருக்க
நீராடவும் நேரமின்றி வாழ்வில்
போராடி நின்றேன்.பள்ளியில்
கல்லாத நான் கல்லடி பட்டும்
சொல்லடி பட்டும் கல்லாகிப்
போனேன்.தாய் வாசம் மறந்த
பிள்ளைகளை நோய் வாசம்
தீண்டாமல் பார்த்துக் கொண்டேன்.பிள்ளைகள்
வளர்ந்து காலூன்றி சான்றோர்
ஆகி என் வயிற்றில் பால் வார்க்கும் நாள் நோக்கி கண்ணீர் மிச்சம் வைத்தேன்.
அந்த நாளும் வந்தது. பேரனும்,
பேத்தியும்,அவரவர் துறையில்
முதலிடம் பிடித்து பரிசு பெற
மேடையேறினர்.என்னையும்.
அவர்கள் எனைக்காட்டி,கட்டி
சொன்னார்கள், இதோ! எந்தன்
தெய்வம் என்றென்னைச் சுட்ட
அனறடைத்த கண்ணீர் இன்று
மதகுடைத்த நீராய் அவர்தம்மைச் சுமந்த மார் வழியே வயிறு நனைத்தது.
அன்று உப்புக்கரித்த கண்ணீர்
இன்று கரும்பாய் இனித்தது.
இனி என் ஆவி போயினும்
மகிழ்ந்தே போகும்.