இருளினுள் இட்ட இருண்மை – வளையாபதி 68
கலி விருத்தம்
பொருள்இல் குலனும் பொறைமைஇல் நோன்பும்
அருள்இல் அறனும் அமைச்சுஇல் அரசும்
இருளினுள் இட்ட இருண்மையிது என்றே
மருள்இல் புலவர் மனம்கொண்டு உரைப்ப. 68
- வளையாபதி
பொருளுரை:
செல்வம் இல்லாதவருடைய குலப்பெருமையும், பொறுமைப் பண்பில்லாதவன் மேற்கொண்ட தவமும், நெஞ்சத்தில் அருட்பண்பில்லாதவன் செய்த அறச்செயலும், அமைச்சரில்லாத அரசாட்சியும் இருளினூடே கண்ணிலெழுதப் பட்ட கரிய மை போல்வனவாம் என்று மயக்கமில்லாத புலவர்கள் மனத்தினெண்ணிக் கூறுவர் என்பதாம்.
விளக்கம்:
அறத்திற்கு அருளுடைமையே காரணமாகலின், அருளில்லாதான் செய்யும் அறம் அறமாகாது என்பது பற்றி அருளில் அறம் என்றார். இதனை,
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் தேறின்
அருளாதான் செய்யும் அறம். 249 அருளுடைமை
அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.
எனவருந் திருக்குறளானுமுணர்க.
வறுமை குலப்பெருமையை அழித்துவிடும் என்பதனை,
தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக
நல்குர வென்னு நசை. 1043 நல்குரவு
வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.
எனவும்,
இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த
சொற்பிறக்குஞ் சோர்வு தரும். 1044 நல்குரவு
நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.
எனவும் வரும் திருக்குறள்களால் உணர்க.
இன்னும்,
குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉ
நாணணி களையு மாணெழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி மணிமே-76-80
எனவரும் மணிமேகலையானும் பொருளில் வழிக் குடிப்பிறப்பழியும் என்பது முதலியனவும் உணர்க.
இருளிலே கண்ணிலெழுதப்பட்ட மை இருந்தும் இல்லாதது போல, வறுமை முதலியன ஏற்பட்ட பொழுது, குலம் முதலியன இருந்தும் இல்லாதனவாகும் என்பது கருத்து.