கைம்பெண்

பூக்களும்
எதிரியாகிப்போனது
இவளுக்கு
வசந்தமும் வழிமாறிப்போனது...

பொட்டுக்கு என்ன வழக்கு
இவளின் நெற்றியின் மேல்
ஒட்டி உறவாட மறுக்கிறதே...

தென்றல் தீண்டா கற்பூரபொம்மையானது
இவளின் தேகம்
விரல் மீட்டா வீணையானது
இவளின் சோகம்...

வண்ணம் தொலைத்த வானவில்லானது இவளின் வெறுமை வாழ்க்கை
தண்ணீரில் அழும் மீனானது
இவளின் கனவுகள்...

சிப்பிக்குள் முடங்கிய கங்கைப்போலானது
இவளின் வாழ்க்கை பயணம்
வண்டு மொய்க்கா வெள்ளைரோஜாவானது
இவளின் எதிர்காலம்...

பூஜையற்ற துளசிமாடமாக
அர்ச்சனைக்கு ஆகாத
அரலிப்பூவாக ஒதுக்கி பார்க்கும்
திருந்தாத சமுதாயம்...

ஊமையாகிப்போன
இவளின் கால்கொலுசு
அதன் மனசுக்குள்ளும்
அரங்கேறாத ஆசைகள்...

இன்னும் மாறாத சமுதாயம்
தேராத சம்பிரதாயங்கள்
இதைக்கண்டு ஆறாத ரணம்
என் இதயத்தில்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (4-Feb-18, 6:04 am)
பார்வை : 431

மேலே