***சட்டென்று வாடுது வானிலை***

நெடுநாளாய் நீ கண்ணுறங்கக் காணக் கோரிக்கை வைத்தது விண்வெளி....
கருணைகொண்டு களவு செய்தேனடி ஓர் கூரைக்கீற்றை...

நொடிப்பொழுதிலோர் வானிலை மாற்றம்...

விலகி நிற்க கட்டளையிட்டது விண்மீன் கூட்டம் ...,
சல்லாபம் கொண்டுன் எழில் மேயத்துணிந்தது சந்திரன்...
உனில் மோகம் கொண்டு அவனைப் பின்னிருத்தி அலைமோதின அம்மேகங்கள்...

முட்டி மோதி முத்தமொன்றை வீசலானான் அச்சந்திரன்....சலனத்தால் அதன் முகவரி திருத்தி விட்டெறிந்தது காற்று...!

விழி வியர்க்க நன்றி சொன்னேன் மாற்றாய் உன் கூச்சம் கேட்டு அதுவும் குத்திப்பாய்ந்தது....

காத்திருந்து கைது செய்து மூச்சில் சிறைவைத்தேன் - உனைத்தீண்டும் உரிமை என்னிடத்தில் மட்டுமென்று....!

மீண்டுமோர் வானிலை மாற்றம்...
இம்முறை...
கோபத்தில் சிவந்த சந்திரக்கண்ணங்கள்...
இரைச்சலாய் உருவெடுத்த காற்று...
விம்மி விம்மித்துடித்த விண்மீன்கள்..
ஒன்றுகூடிக் குமுறிய மேகங்கள்...

விரக்தியில் விண்ணவர்க்குள் கலவரம்...
இடி மின்னலால் நிரம்பிய போர்க்களம்....

அவர்தம் எதிரில் ஒற்றைக் காவலனாய் நான்...

யாவும் மறந்து யாழ் உனை ரசிக்கலானேன்..
கூந்தல் மட்டும் அசையக் குழந்தையாய் உன் துயிலில் லயித்து நின்றேன் ...

ஏதோ ஒன்று எனையும் தாண்டி உனை நொக்கிப்பாயக்கண்டேன் - கோளத்துளியாய் விண்ணவர் இரத்தம்...

செயவதறியது ஏங்கித் துவண்டேன்...நீ ஏனோ சட்டெனப் போர்வைக்குள் புகுந்தாய்....

கம்பளி வேலியில் முட்டிச் சிதறிய ஒற்றைத்துளியதன் ஓலங்கள் கேட்டேன்...

"உன்நினைவிலே அவள் உயிர்க்கூடு துடிக்குதடா...
உன் காதலே அவள் உயிரதன் காவலடா" என்று...

கர்வத்தில் களித்து மிதந்தேன் கண்ணிமையாமல் நின்று....!!!

#காதலாடல்

எழுதியவர் : இரவாடி (4-Feb-18, 7:27 pm)
சேர்த்தது : Iavadichiththan
பார்வை : 79

மேலே