வளர்ந்த கலை மறந்துவிட்டாய் ஏனடா கண்ணா

செல்லம் என்ற வார்த்தைக்கு என்
இல்லம் வந்த அர்த்தம் நீ...
என்னுள்ளே இருந்த ஏக்கங்கள்
ஒன்றாய் பிழிந்த ஓர்சொட்டு நீ..

அடம்பிடித்து நீ அழுதிட
உன் திடம்பார்த்து மலைத்தேன்...
குறும்பு செய்து சிரித்திட
எனை எறும்பென நினைத்தேன்...

வராத மொழியில் நீ வசனம்பேச
வாயடைத்து கிடந்தேன்...
வாராது என வாடுகையில் எனை குழைந்து கொடுத்தேன்....

பள்ளி செல்லும் வேளையில்
சொல்லி அழும் நீ
சொல்லாமல் அழும் நான்...

திரும்பி வரும் வேளையில்
திரைக்குப் பின்னால் நான்போடும்
ஆட்டத்திற்கு கலைஞனும் நானே!
கைதட்டலும் நானே!!

வீட்டுப்பாடம் செய்கையில்
உன்சோட்டுப் பையனாய் மாறிடுவேன் என்ஏட்டின்
பக்கம் மறந்து.....

மிதிவண்டி நீ பழகிட உன்
கவனம் கற்றுக்கொள்வதில்
என் கவனமோ நான்
பெற்றுக் கொண்டதில்....

இடறி நீ விழுகையில் உனை
தேற்ற நான் ஓடி வர
எனை தேற்ற?????

என் இதயத்தின் கதறல்கள்
என்காதை மட்டும்தானே பிளந்தது!!!....

பனிகூழ் நீ பருகிட
சிலதுளிகள் அதில் ஓழுகிட
நீ முகம் சுருங்கி போவாய்...

அதை முக்கிய குறிப்பாக
குறித்துவைத்துக் கொள்வேன்
என் இதயக் குறிப்பேட்டில்...

சட்டை செய்யாமல் நீ
கொட்டம் செய்ய
ஏழ்கடல் இமயம் ஏறி
பாற்கடல் பனிகளை வாரி
உன் சட்டைப்பயையில்
சாக்கிலேட்டுகளாக கொட்டியவன்
நான்தானே!!!

ஒழுங்காய் நீ நடக்க
ஊன்றுகோலாய் ஆனேன்...
உயரே நீ பறக்க
ஏங்கும் நூலாய் ஆனேன்....
நீயோ ஓடவே கற்றுக்கொண்டு
ஓரங்கட்டிவிட்டாய் என்னை
ஆகாயம் துளைக்க எண்ணி
அறுத்துக் கொண்டாய் இந்தநுலை

அன்று அறியாமொழியில்
நீபேசஆயிரம் முறை
அறிவிலியானவன்....
இன்று ஆங்கிலமொழியால்
எனை ஏச ஒரேநொடியில்
அறிவாளியாகிப் போனேன்......

நான் கேட்பது ஆடம்பர
விருந்தல்ல மகனே!
அடைத்துக் கொள்ளும் போது
தலை தட்டும் விரலும்
தண்ணீர் ஏந்தும் கரமும்தான்!!!

உரிமைக்கும் கடமைக்கும்
உலக தூரம் உண்டு
உனக்குத் தெரியாதா?!
நான் கேட்பது
உணர்வுக்கு உரிமையை...
நீ புரிவதோ
கடமைக்கு கடமையை..

பாசம் வார்த்து ஆலகாலம்
அளிப்பினும் அமுதென
ஏற்காதோ மனம்...
நீயோ பாவம் பார்த்து
அறுசுவை அளிக்கிறாய்
அடம்பிடிக்கிறது அது
தொண்டை தாண்ட....

சிலசமயம் நீ வீசும் பாவப்பார்வையால்
நானும் யாசகனோ என
நானே எனை எண்ணிக்
கொள்கிறேனடா கண்ணா!!!

யாசகனுக்கு வீடு ஏது?
வீதி தானே அது....

கனல் வார்த்தைகளை
கக்கினாய்அன்று
நிற்கிறேன் இன்று...
யாசக வாசலிலே....

வளர்ந்த கலை மறக்கலாம்
வளர்த்த கலை மறக்குமா???

எழுதியவர் : விமுகா (6-Feb-18, 12:39 am)
சேர்த்தது : விமுகா
பார்வை : 128

மேலே