புத்தாண்டு வருகை---பாடல்---

பல்லவி :

கடலில் துள்ளும் வெள்ளி நீர்ப்போல
உலகில் இன்பம் பொங்கும் புத்தாண்டில்...
நதியின் சந்தம் நெஞ்சில் பாய்ந்தோட
உயிரில் பூக்கள் பூக்கும் நன்னாளே...

இன்பத்தின் வாசம் நெஞ்சுக்குள் வீசும்
துன்பத்தின் பாரம் பஞ்சென்று மாறும்...
அன்பில் எல்லாம் ஒன்றாய்க் கூடும் பொன்னாள் பக்கம் தான்...
கண்ணில் சொந்தம் வந்து கொஞ்சும் அந்நாள் சொர்க்கம் தான்...

(கடலில் துள்ளும்...)

சரணம் 1 :

வெண்பனி மேகங்கள் தேன் தூவிடுமே
வாசலின் கோலங்கள் வண்ணம் கொண்டு ஈர்க்குமே...
வீணையின் நாதம் போல் வாழ்வினில் ஆனந்தம்
மார்கழி தேசத்தில் தோன்றும் ஆண்டில் நீந்துமே...

ஊற்றாய் மழையாய் வருசம் வந்தால்
வீட்டின் உழைப்பே மூச்சாகும்...
பூவாய் மலர்ந்தே அமைதி தந்தால்
நாட்டின் மதிப்பே பண்பாடும்...

சின்னத்தின் காலம் மண்ணுக்குள் மூடும்
தெய்வத்தின் பார்வை அன்னத்தில் வீழும்...
மண்ணின் நன்மை நெல்லில் தோன்றும் பொன்னாள் பக்கம் தான்...
பெண்ணின் உள்ளம் அச்சம் நீங்கும் அந்நாள் சொர்க்கம் தான்...

(கடலில் துள்ளும்...)

சரணம் 2 :

வெண்மதி நேரத்தில் ஊர் கூடிடுமே
ஆசையின் ஓடத்தில் உள்ளம் சுற்றிப் பார்க்குமே...
மாதவன் ராதைக்கும் காதலின் மோகத்தேன்
வானவில் கோலத்தில் கண்ணில் இன்பம் வார்க்குமே...

தீயால் கடலால் நலமே என்றால்
வாழ்வை அழிவோ?... தீண்டாது...
வாளோ?... உளியாய்ச் சிலையில் வீழ்ந்தால்
ஆற்றும் செயலில் தீங்கேது...

உள்ளத்தில் ஊரும் வஞ்சத்தின் நாகம்
பாசத்தின் பாணம் கொல்லத்தான் மாறும்...
நெஞ்சின் வன்மம் அன்பை ஏற்கும் பொன்னாள் பக்கம் தான்...
பிஞ்சின் பண்பும் உள்ளம் தங்கும் அந்நாள் சொர்க்கம் தான்...

(கடலில் துள்ளும்...)

எழுதியவர் : இதயம் விஜய் (6-Feb-18, 4:49 pm)
Tanglish : puthandu varukai
பார்வை : 5501

மேலே