கல்யாணக் கனவினிலே---பாடல்---

ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு மெட்டில் :


பல்லவி :

பூங்காற்றுத் தொட்டு ஆளான மொட்டு
நூல்சேர நாளாகுது.....(4)

கனவோடு வாழ்ந்து அனல்மீது வீழ்ந்து
செம்பூவோ?... நித்தம் வாடுது...

பூங்காற்றுத்...


சரணம் 1 :

பெண்மை நதி வற்றி வர
தூங்கும் விழி நீரில் விழ
முல்லைக்கொடி கள்ளிச்செடி ஆனதிங்கே.....(2)

உள்ளம் கருகும் வெள்ளை முகிலே...
முள்ளில் விரியும் வண்ணத் துகிலே...

சொந்தம் அது சொல்லில் கொடும் நஞ்சைத்தரும்...

பூவோடு வண்டு இணைகின்ற வாழ்க்கை
ஆதாயம் கேட்டே தேள் போன்று தாக்கும்...
வேண்டாத தெய்வம் ஏது இங்கே...

பூங்காற்றுத்...


சரணம் 2 :

மன்னன் விரல் பெண்ணைத் தொட
மஞ்சள் கொடி நெஞ்சில் விழ
காணும் அது கானல் என கண்டாள் இங்கு.....(2)

கண்ணின் ஒளியில் தேயும் நிலவோ?...
உச்சந் தலையில் வெள்ளி வருதோ?...

சித்தம் அதில் நித்தம் புது பித்தம்வரும்...

நெஞ்சோடு தாய்தான் பாலூட்டும் காலம்
கண்ணோரம் வந்து தீமூட்டிப் போகும்
ஏற்றாது தூங்கும் கோவில் தீபம்...

பூங்காற்றுத்...

எழுதியவர் : இதயம் விஜய் (6-Feb-18, 5:56 pm)
பார்வை : 325

மேலே