நம்மை போல் ஒருவன்

நம்மைப்போல் ஒருவன்
*****************
அளவு குறையுதென்று சொல்லி
அடிவயிற்றைத்தொட்டுக்காட்டி
அடிக்காதீங்கடா என்று
ஆவேசமாய் கத்தினான்
அவன்
ரேஷன்கடை வாசலில். .....
அலுவலரை அடித்ததாய்
சொல்லி
ஆறுமாசம் உள்ளேதள்ளியது -
அரசு
திருட்டுத்தனமாய்
ஆற்றுமணல்அள்ளவந்த
அரசியல்வாதிக்கு
அனுமதி கொடுத்த
அதிகாரி ஒருத்தனை
செவிட்டில் அறைந்தான்
அவன்
அதிகாரியை தாக்கியதாகச்சொல்லி
ஆறுமாசம் உள்ளேதள்ளியது -
அரசு
கடமையைச் செய்வதற்கே
கையூட்டு கேட்ட
வட்டாட்சியர் ஒருத்தனை
வசைபாடினான்
அவன்
கைவிலங்கு போட்டு
காராக்கிரகத்தில் தள்ளியது -
அரசு. .....
சரியில்லாத ரோட்டுக்கு
சாலைவரி எதற்கென்று
சத்தமிட்டு
நியாயம் கேட்டான்
அவன்
அரசு சட்டத்தை
அவமதித்ததாய் சொல்லி
ஆறுமாசம் உள்ளேதள்ளியது -
அரசு
இலவசமாய் தருவதாக
வாக்குறுதி தந்துவிட்டு
எதற்கடா விற்கிறீர்கள்
தண்ணீரையும்
கல்வியையும் என்று
எதிரேவந்த அமைச்சரின்மேல்
எச்சில் உமிழ்ந்தான்
அவன்
கொலைமுயற்சி வழக்குபோட்டு
கோர்ட்டுக்கு இழுத்தது -
அரசு
கள்ளப்பணம் பதுக்கி
அதைக்
கந்துவட்டிக்கு விடும்
கொலைபாதகக்கும்பலுக்கு
எதிராகக் கோஷமிட்டான்
அமைச்சர் ஒருவரின்
பினாமிகள் அவர்களென
ஆதாரத்தோடு
பிடித்துக்கொடுத்தான்
அவன்
இருந்த ஒருகுடிசையையும்
எரித்து ரசித்தது -
அதிகாரம்.......
இன்னமும்
முற்றுப்பெறவில்லை
அவனது -
போராட்டம்
இதோ.....
காவல்துறை
தேடிக்கொண்டிருக்கிறது
அரசின் உயர்ந்தவிருதான
தீவிரவாதிப் பட்டத்தோடும்
உரிமைக்காகப் போராடும்
அவனை
உடனே சுட்டுப்பிடிக்கும்
உத்தரவோடும்....!

அழ. இரஜினிகாந்தன்

எழுதியவர் : (13-Feb-18, 8:56 am)
பார்வை : 52

மேலே