வில்லில் விரையும் சொல் - சி எம் ஜேசு பிரகாஷ்

வளர்ந்த பருவம் அவன்
வயதோ நாற்பத்தியெட்டு

அன்பின் பாத்திரம் - அவன்
நன்மையில் மற்றொருவரை
அணுகா தனியொன் என

நாளெல்லாம்
நன்மையுறு செயலாளனாய்
அன்பின் சொல்லாளனாய் இருக்க

நிறையுது அவனுக்கு
நேரெதிரே சொல்லம்புகள்

குறையுது அவனது உள்ளம்
கூறிய சொல்லம்புகளினால்

எய்பவர் தாய் அவரை
இயக்குது எந்த மாயை

மலர் போல மென்மையும்
மகிழ்வினை மேன்மையுமாய்
இணைத்து அணைத்து காத்தவர்
இன்றோ வேறு சாயலில்

புதைத்தாலும் பதைத்து
கரம்கொண்டு தோண்டி எழுப்பி
உயிர்த்தொடர வாழ்த்து தெரிவித்தவர்
இன்றோ வேறு சாயலில்

கரையும் போது அணைத்து
உலகமாய் பிணைத்து
கவலைவிடு தெய்வமாய் நானிருக்கிறேன்
என்றவர் இன்றோ வேறு சாயலில்

வில்லில் சொல்லாய்
நாளும் விரைகிறார்

வெடித்து புகையாகும்
வெடிகுண்டு சொற்களாய்

அறமெனும் இல்லத்தில்
அமைதியெனும் தெய்வமே அம்மா

உறவெனும் இவ்வுலகின்
சிகரமே அம்மா இன்றோ வேறு சாயலில்

தெய்வங்கள் வேண்டி
தொய்வடையா மனதோடு

தொடர்ந்திடும் என் சேய் உள்ளம் - அம்மாவின்
அமைதியுறு வார்த்தைகள் தான் வாங்க

இயற்கையே
நீயே எனை விரட்டினால்

நான் எங்கு செல்வேனென
ஏக்கம் ததும்பும் பாக்களோடு

அமைதியாகட்டும் அன்னையர் தம் உள்ளங்கள்
சமனாகட்டும் சேய் உள்ளங்களின் பள்ளங்கள்

எழுதியவர் : சி .எம் .ஜேசு பிரகாஷ் (14-Feb-18, 9:11 pm)
பார்வை : 82

மேலே