நினைவுகள்

ஆர்வங்களும்
ஆசைகளும்
கேழ்வரகின் இருவண்ணம்போல்
புணர்ந்திருந்த
காலம் அது,

காலத்தின் பூப்பிற்காக
கடன் வாங்கி
கடை அமர்த்தி
உட்கார்ந்து கொண்டிருந்த
தாவும்
வண்டுறுட்டிய மலவுருண்டையும்
மாமன் மச்சான்
ஒறவாடிக் கொண்டிருந்த
வாட்டி அது,

மீன்குஞ்சுகளாய்
எண்ணிக்கொண்டு
அரைத்தவளைகளையும்
பொன்வண்டாய் எண்ணி
சீமெண்ண வண்டையும்
பிடித்து வைத்துக்
கொண்டிருந்தப்
பொய்மையின்
உச்சகட்டம் பாய்ந்தச்
சுவையினை,
மெய்யென சுவைத்தாடிய
தபா அது.

சட்டென
காலச்சக்கரத்தைக்
கசாப்புப் போட்டுக்கொண்டிருக்கும்
இந்த நொண்டியாடிக் காலக்
களத்தில்
பழைய நினைவுகள் எல்லாம்
வெறும்
நினைவுகளாய்
மட்டும்
இருந்துவிடவில்லை.

ரத்தங்கட்டிய விரலின்
சந்து
என்னதான்
முழு விழுக்காட்டில்
குணமடைந்திருந்தாலும்,

சில நேரங்களில்
அரிப்புகளாய்
வந்துதான் கொண்டிருக்கின்றன
நினைவுகளின்
இணைவுகளாய்.

எழுதியவர் : சக்தி கேஷ். (15-Feb-18, 1:11 pm)
சேர்த்தது : சக்தி கேஷ்
பார்வை : 131

மேலே