இன்றைய சூழலில் பணத்தால் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியுமா
இன்றைய சூழலில் பணத்தால் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியுமா?
“பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்” என்பது முதுமொழி. அதை சற்றே குறைவின்றி பிரதிபலிக்கும் விதமாக, பணம் இன்றைய மனிதனை அடிமைப் படுத்திருக்கின்றது. இன்று பணம் ஒருமனிதனிடத்தில் இல்லை என்றால் அவன் உலகத்தில் வாழ்வதில் அர்த்தமேயில்லை. எனவே, பணமே பிரதான தேவையாக இருப்பதால், மக்கள் அதை ஈட்டி கொள்ளும் வேலைகளையே அதிகம் காண்கின்றனர். இதனால், பணம் இருந்தாலே போதும், மற்றவற்றை அனைத்தையும் பணத்தால் சாதிக்க முடியும் என்று மனக்கோட்டை கட்டி அலைகின்றனர். சாதிப்பதற்கு பணம் முக்கியம் என்ற கருத்தைத் தவிர அது மட்டுமே இருந்தால்தான் சாதிக்க முடியும் என்பதை என்னால் ஏற்க முடியாது.
சாதிப்பது என்றால் என்ன என்ற தெளிவான வரையறை அல்லது அதற்குரிய அர்த்தம் நமக்கு தெரிய வேண்டும். பலர், ஒரு குறிக்கோளை அடைவதே சாதிப்பது என்று எண்ணுகின்றனர். ஆனால், குறிக்கோள் என்னவென்று அறிவதே சாதித்தல் தான். மரணப் படுக்கையில் மூச்சை இழுத்து இழுத்து விடும் ஒருவரிடம் கேட்டுப் பாருங்கள். சிக்கலில்லாமல் மூச்சு விடுவதே வாழ்க்கையின் வெற்றி என்பார். இவ்வாறு சாதிப்பதற்கு பணத்தைத் தாண்டி வேறு சில காரணிகள் நம்மிடத்தில் இருக்க வேண்டும். பணத்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்றால், இவ்வுலகில் பலர் தங்கள் வாழ்வில் சாதித்திருக்கவே முடியாதே. பல்வேறு மேதைகள், விஞ்ஞானிகள், தொழில் அதிபர்கள் கரடுமுரடான பாதையில், பணம் கையைக் கடிக்கும் வேளையில், தியாகங்கள் பலவற்றை செய்து வாழ்வில் சிகரங்களை அடைந்துள்ளனர்.
சாதிப்பதற்கு முதலில் இலக்கை நிர்ணயம் செய்வதென்பது, ஒரு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடாகும். சரியான இலக்கின் மூலமே, நமது கனவை நனவாக்க முடியும். உலகின் மிகப்பெரிய சாதனையாளர்கள் அனைவரும், சரியான ஒரு இலக்கை நிர்ணயம் செய்து, அதன்படி செயல்பட்டே தங்களின் இலட்சியத்தை அடைந்தார்கள். இலக்கை நிர்ணயித்தல் என்பது, விரிவான செயல்திட்டம் வகுத்தலாகும். இலட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகள், அதற்கான காலஅளவு, தேவையான முயற்சிகள், தேவைப்படும் மாற்றங்கள், சரியான நபர்களின் ஆலோசனைகள், ஏற்படும் தடைகளைக் களைவதற்கான வழிமுறைகள், சோர்ந்து போகாமல் இருப்பதற்கு தேவையான மனோதிடத்தை தக்கவைப்பதற்கான ஆலோசனைகளைப் பெறுதல் போன்ற அனைத்து விஷயங்கள் பற்றியும் திட்டமிட்டு முடிவெடுத்தலே இலக்கு நிர்ணயித்தலாகும். தெளிவான முறையில் இலக்கை நிர்ணயித்தப் பின்னர், தாமதமின்றி செயல்படத் தொடங்க வேண்டும். இவ்வாறே சாதிப்பற்கு உரிய வழிமுறையை வகுத்துக்கொள்ள வேண்டும். இவ்விடத்தில் பணத் தேவை எங்காவது உள்ளதா? இல்லையே. காலத்தை சரியாக பயன்படுத்தி சிந்தித்தாலே போதுமே.
அடுத்தது தன்னம்பிக்கையும் துணிவும் நம்மிடத்தில் ஆணித்தரமாக இருக்க வேண்டும். சாதிப்பது என்பது எளிதல்ல. அது பூக்கள் நிறைந்த பாதையல்ல, முட்கள் நிறைந்த ஒன்று.
“தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்-
மெய்வருத்தக் கூலி தரும்”
என்பது வள்ளுவ பெருந்தகையின் வாக்கு. இதற்கு சான்றாக பலர் உள்ளனர். உலகம் போற்றும் தாமஸ் அல்வா எடிசன் ஆயிரம் முறை தோல்வியைக் கண்டிருக்கிறார். அவர் நினைத்திருந்தால், எப்போவோ தன் ஆராய்ச்சியை நிற்பாட்டியிருக்கலாம். ஆனால், அவரிடம் இருந்த மனோதிடமே அபூர்வமானது. தோல்வியிடத்து மனத்தை இரும்பாக்கி வெற்றி எனும் மலையைத் துரும்பாக்கினார். இவ்வாறு செயல்பட பணம் எங்கு தேவை? சில முட்டாள்கள் சொல்வார்கள், மூச்சு முட்ட பேசும் தன்னம்பிக்கை உரைகள் கேளுங்கள், புத்தகங்கள் பலவற்றை வாங்கி படியுங்கள், பட்டறைகளுக்கு செல்லுங்கள் என்று போதிப்பர். இவையெல்லாம் எதற்கு, வாழ்வின் சம்பவங்களே இதனை அனைத்தையும் விளக்கி விடும் அல்லவா. இதனில் பணத்தையும் நேரத்தையும் செலவிடுவதைவிட ஆழ சிந்தித்தாலே போதும்.
ஜெஸிகா கோக்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். இரண்டு கைகளும் இல்லை. ஆனால் மனதில் ஏகப்பட்ட இலட்சியங்கள். அவற்றில் ஒன்று விமானம் ஓட்ட வேண்டும் என்பது. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா என்று கேட்பார்கள். ஆசைப்படலாமே, அதில் என்ன தப்பு? என கேள்வி கேட்டு சாதித்து நிற்கிறார் ஜெஸிகா கோக்ஸ். கைகள் இல்லாத முதல் பைலட் எனும் பெருமை இவருக்கு உண்டு. எது இல்லாவிட்டாலும் சாதிக்கலாம், சாதிக்க வேண்டும் எனும் மனம் இருந்தால் போதும். பணம் வேண்டுமா?
மற்றோரு அங்கம் உள்ளார்ந்த திறனை அறிதல். ஒருவர் பிறப்பிலேயே, மரபுவழியில் பல உள்ளார்ந்த ஆற்றல்களைப் பெற்றிருப்பார். ஒருவருக்கு வரலாறு, தத்துவம், அரசியல் உள்ளிட்ட விஷயங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதைப் புரிந்துகொள்வதும் அவருக்கு எளிது. சிலருக்கு இலக்கியம் என்றால் உயிர். சிலருக்கு தொழில்நுட்பம் என்றாலே அலாதி விருப்பம். சிலருக்கோ, மருத்துவ ஆராய்ச்சியில் ஆர்வம். இப்படி, பலவாறாக இருக்க, பலர் அதைப் புரிந்துகொள்வதில்லை, தெரிந்துகொள்வதற்கும் விருப்பமில்லை. பெற்றோர் சிலர் தங்கள் பிள்ளைகளின் இயல்பாற்றலை அறியாமலேயே, சமூகத்தில், வருமானத்தின் பொருட்டு, பிரபலமாக இருக்கும் சில படிப்புகளில் சேரச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். விருப்பமில்லாத மற்றும் உள்ளார்ந்த ஆற்றல் இல்லாத துறைகளில் ஈடுபடுபவர்கள், எதையும் சாதிக்க முடியாமல், வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்துவிட்டு போய்விடுகிறார்கள். எனவே, பணத்தால் வரக்கூடிய வினையை இதன் மூலம் அறியலாம். தன் திறனுக்கு ஏற்ற வேலையைச் செய்தால், நிச்சயம் ஒருவரால் சாதிக்க முடியும் என்பது வெள்ளிடைமலை.
பணமில்லாமல் சாதிக்க முடியும் என்பதற்கு சான்றாக நம் முன்னோர்கள் நடந்துள்ளனர். இந்நியாவின் சுதந்திர போராளியான காந்தியடிகள் பணத்தைக் கொண்டா வெள்ளையர்களை வீழ்த்தினார்?பணம் பணமாக பெட்டியா கொடுத்தார்? இல்லையே, அவரிடம் இருந்த திடமான மனவுறுதியும் கடுமையான முயற்சியும்தான் அவரை சாதிக்க வைத்தது. நம்மிடம் உள்ள நற்குணங்களே நம் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். நம் திறன்களும் வெற்றியின் சிகரத்தைத் தொட வைக்கும் என்பதற்கு சாட்சி, இந்தியாவின் முன்னாள் அதிபர், ஏ.பி.ஜே அப்துல் கலாம். ஏழ்மையில், வீட்டில் ஒளிக்கூட இல்லாமல் கஷ்டப்பட்டு படித்து முன்னேறி தன் திறன்களால் இந்தியாவுக்கே ஒளி வீசினார். எனவே, இவர்களை போன்ற ஆசான்களை நம் முன்மாதிரியாக வைத்துக்கொண்டு நாமும் சாதிக்க முற்பட வேண்டும்.
பணம் என்பது வெறும் காகித நோட்டு மட்டும்தான் என்று நான் கூற வரவில்லை. பணமும் அவசியம்தான். பணம் பத்தும் செய்யும் என்பது போல, ஒருவர் தன் திறன்களை வளர்க்க பணம் தேவை. பல்வேறு விதமான பயிற்சிகளை மேற்கோள்ள பணம் தேவை. உடல் உபாதைகள் போன்றவையைப் போக்க நம்மிடம் பணம் அவசியம். ‘சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்’. வாய்ப்புகளை சில நேரத்தில் உருவாக்க பணம் வேண்டுமே. நல்ல கல்வி, படிப்பதற்கு ஏற்ற சூழல் போன்றவற்றை தயார் செய்வது என்பது எளிதல்ல. இது போன்ற வசதிகள் கொண்டு பலர் படித்து முன்னேறி சாதித்து உள்ளனர். ஆனால், இவ்வளவையும் செய்த பின்னும் கோட்டைவிட்டவர்கள் எண்ணிலடங்கா.
“இன்றைய சூழல்” என்பது மிகவும் கடினமான ஒன்று. போட்டித்தன்மைமிக்க சூழலில் இன்று பலர் போராட தெரியாமல் தவிக்கிறார்கள். ‘சர்வைவல் ஆப் த பிட்டஸ்ட்’ (Survival of the Fittest) என்று டார்வின் கூறியது போல வலிமையாக இருந்தால் தான் இன்று சாதிக்க முடியும். இதற்கு பணம் ஒரு அத்தியாயமாக விளங்குகிறது. நம் இலக்கை அடைய வேறு யார் யாருடனோ போட்டி போட்டு முன்னேற வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால், நாம் மன உளைச்சல் போன்ற உயிர்கொல்லிகளுக்கு ஆளாக கூடலாம். எனவே, இது போன்ற சூழ்நிலைகளோடு போராட தெரிந்தவர்களே, சாதிக்க முடியும். “நீ எதுவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ, நீ அதுவாகவே ஆவாய்” என்று பகவத் கீதை கூறுகிறது. எனவே, நாம் நல்ல உயர்வான எண்ணங்களுடன் திகழ்ந்தால், வெற்றி நமக்கே.
பணத்தால் பலவற்றை வாங்க முடியாது. உணர்வுகள், உறவுகள், உடல்நலம், நேரம் போன்றவையெல்லாம் நம்மிடத்தில் பரிணாம வளர்ச்சியை நிலைநாட்டும். இவை அனைத்தும் நம்மிடத்தில் இருந்தால்தான் பரிபூரண வெற்றியை அடையலாம். இல்லையேல், சாதித்துவிட்டாய் என்று சொல்வதில் அர்த்தமில்லை.
ஒவ்வொரு துறையில் சாதனைப் புரிந்தவர்களும் தாண்டி வந்த தடைக்கற்கள் பல. பள்ளிப் படிப்பை முடிக்கவே சிரமப்பட்டவர்கள் ஐஏஎஸ்(IAS), மருத்துவர் ஆனதுண்டு. அனைத்து வாய்ப்புகளும் கிடைத்தவர்கள், கோட்டை விட்டதுமுண்டு. தளராத மனவுறுதியுடன், விடாத முயற்சியை மேற்கொள்பவரே, இறுதியில் வெற்றியாளராக ஜொலிப்பார் என்பதே உலக உண்மை. இதை உணர்ந்தவருக்கு கவலையில்லை. எனில், சாதித்தல் என்பது உயர்தலில் அல்ல, உணர்தலில் உள்ளது. சாதித்தல் என்பது அடைதலில் அல்ல, உடைதலில் உள்ளது. மொத்தத்தில், பணம் என்பது ஒரு அத்தியாதமே தவிர அது இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்பது மடைமை.