மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி 15

மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி -௧௫

அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்ததும் கார்த்திக்கின் மனசுக்குள் பதட்டம் ரயில் போல தட தட வென ஓடியது...இவள் எப்படி இவள் கூட சேர்ந்து வர..ஒரு வேளை விஷயம் தெரிந்து வீட்டில் சொல்லி கொடுத்திருவாளோ ...தன்னுடைய அப்பாவின் குணம் அவனுக்கு நன்றாக தெரியும் ..தப்புனு தெரிஞ்ச அடிச்சுட்டுதான் நம்ம சைடு நியாயத்தையே கேட்பார்...காடு கரையுனு போய் கூலி வேலை பாக்குறவர் அவர் மனசு நோகும்படி ஏதும் ஆகிவிட கூடாது ...எதா இருந்தலும் நமக்குள்ள இருக்கனும் வீடு வரைக்கு விஷயம் போச்சுன்னா அப்புறம் நடக்கும் நிகழ்வுகள் என்னவா இருக்கும் என்பதை நினைச்சு பார்க்கவே அந்த படபடப்பு இன்னும் கூடியது...
அதற்குள் அவர்கள் இருவரும் பஸ் ஸ்டான்டுனுள் வந்திருந்தனர்...
டேய் மச்சி ஒரு நிமிஷம் இங்கேயே நில்லு அவகிட்ட பேசிட்டு வந்து விடுகிறேன் என சலீமிடம் சொல்லிவிட்டு அவளை நோக்கி நடந்தான் கார்த்திக்..

ஏய் சுபா என்ன இங்க திடிர்னு என்று சாதாரணமாய் கேட்பது போல கேட்டாலும் உள்ளுக்குள் கொஞ்சம் உதறல் எடுத்தது...
csc கம்ப்யூட்டர் ல 10th பைனல் எக்ஸாம்க்கு லாஸ்ட் மூணு வருசமா வந்த கொஸ்டின் அண்ட் அன்செர் புக் கொடுக்காங்க சோ அத வாங்க வந்தேன்..வழியில மாலதி அக்காவை பார்த்தேன்...நான் படிக்கிற ஸ்கூல்ல போன வருஷம் 10th படிச்சாங்க,சூப்பர் ஆஹ் படிப்பாங்க ..482 மார்க் தெரியுமா..அதான் அக்காகிட்ட அப்படியே கொஞ்சம் டிப்ஸ் வாங்கிட்டு பேசிட்டு வந்தேன்...
ஆங் சொல்ல மறந்துட்டேன் பாருங்க ...
அக்கா இது என்னோட அண்ணா கார்த்திக். இங்கதான் 11th படிக்கிறாப்ல ..
உங்க அளவுக்கு படிப்பு வராது,ஆனா நல்ல பையன்தான் என் அண்ணனாச்சே என மாலதியிடம் அறிமுகப்படுத்தினாள்...

அவளும் சின்ன மழுப்பலான சிரிப்புடன் கார்த்திக்கை பார்த்து ஹாய் என்றாள்...
அவனும் அசடு வழிய ஹாய் என சொல்லிவிட்டு அடுத்து என்ன பேச என தெரியாமல் முழித்துக்கொண்டு நின்றான்..இன்னைக்கு பார்த்த இவா கூட வரணும் ..எப்டியாச்சு கொடுத்த லெட்டர் கு பதில் தெரிஞ்சுக்கலாம் னு பார்த்த ,சிவ பூஜைல கரடி புகுந்த கதை போல ஆகிருச்சே..இவா முன்னாடி மாலதி ஆஹ் தெரிஞ்ச மாதிரியும் காட்டிக்க முடியல..நேராவும் லவ் ப்ரொபோஸ் பண்ண முடியாம இருத்தலை கொள்ளி எறும்பு போல தவித்தான் கார்த்திக்..
மாலதியும் அவனை தெரிந்தது போலவே காட்டிக்கொள்ள வில்லை..கண்ணாலயாச்சு ஏதாச்சு பேசுவாளா என மாலதியின் விழிகளை பார்த்தான்..அதில் இரண்டு மீன்கள் தரையில் துடிப்பதுபோல அங்குமிங்கும் அலைக்கழித்தது..
பாலைவனத்தில் தாகித்து நிற்கையில் தூரத்தில் தெரிந்த நீரூற்றை அடைந்து வயிறு முட்ட குடிக்கலாம் என ஆவலோடு வந்தவனை,அது கானல் நீர் என்று அருகில் சென்றதும் உணர்ந்தால் எப்படி ஏமாற்றமாய் இருக்குமோ அதை விட அதிகமாய் அவனுக்குள் ஏமாற்றம் அவன் மனசுக்குள் பாலைவன புழுதி மணல் போல நிறைந்து கிடந்தது...

சரி நான் கிளம்புறேன்,பஸ் வந்துகிட்டு இருக்கு .முன்னாடி போய் சீட் புடிச்சு வைக்கேன் என சொல்லியவாறு சோகத்தை மறைத்து கொண்டு திரும்பி நடந்தான்..
டேய் மச்சான் என்னடா உன் ஆளு கிட்ட போய் பேசுவனு நினைச்சா இப்படி ஆகிருச்சு..
அந்த வாலு எதுக்குடா வந்துச்சு..டுடே மொத்த திட்டமும் இப்படி ஸ்பாயில் ஆகிருச்சு..
ஏதாச்சு சிக்னலாச்சு காட்டுனியா இல்ல அதுவும் இல்ல ஆஹ் ..இன்னைக்கு கிடைச்ச சான்ஸ் மிஸ் ஆகிருச்சுனு கவலை படாதடா ...நாளைக்கு பார்த்துக்கலாம் என்று ஆறுதல் படுத்தினான் சலீம்..

பஸ்ஸில் ஒரு சீட் பிடித்து கொடுத்து விட்டு சுபாவை இருக்க சொன்னான்.. அவளும் இருந்து கொண்டு மாலதியின் கையை பிடித்து,அக்கா நீங்களும் உட்காருங்க என அவளருகில் இருக்க வைத்து கொண்டாள்..சுபாவிடம் தன்னுடைய புக்கை கொடுத்து விட்டு மாலதியை வைச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்..
அழகான முகம்,கழுத்தின் பின்புறத்தில் ஒரு மச்சம்.நாடியில் சிறிதாய் கீறிய தழும்பு ஒன்று இருந்தது..இரட்டை ஜடை பின்னலில் இரண்டு புறமும் ரோஸ் கலர் ரிப்பனால் அதை கட்டி இருந்தாள்...
பிறை நெற்றியில் சுருண்டு விழும் ஒரு கீற்று கூந்தல் காற்று பட்டு அப்பப்போ அசைந்தாடியது ...கழுத்தில் வெள்ளியில் மெல்லிய செயின் ஒன்று போட்டு இருந்தாள்.
அதில் பிணைக்க பட்டிருந்த குட்டி டாலர் கண்ணுக்கு தெரியாமல் நெஞ்சுக்குள் புதைந்து கிடந்தது..வெள்ளை நிறத்தில் பச்சை கோடு போட்ட சுடியும்,பச்சை கலர் சாலும் அடர்ந்த கட்டுக்குள் நிற்கும் தனித்த மரம் போல அழகாய் இருந்தது..
என்றைக்கும் இல்லாமல் இன்று அவ்வளவு அழகாய் தெரிந்தாள்..காதல் வந்த பின்னால் அவனின் கண்களுக்கு அவள் மட்டுமே அழகாய் தெரிந்தாள்...காதலர் தினத்தில் அவள் பேரழகியாய் மாறி இருந்தாள்...
அவள் வைத்திருந்த சிகப்பு கலர் ஸ்டிக்கர் பொட்டு அழகுக்கு அழகு சேர்ப்பது போல இருந்தது..ஒவ்வொரு நாளும் அவள் வளையல் என்ன நிறத்தில் அணிந்திருப்பாளோ அதே நிறத்தில் ஸ்டிக்கர் பொட்டும் வைத்திருப்பாள்...அதை பார்த்ததும்
மனசிலிருந்த சொல்லாமல் விட்ட பாரம் கொஞ்சம் கொஞ்சமாய் பழைய நிகழ்வுகளில் கரைந்து கொண்டிருந்தது..
அன்றைய டூரில் கொடைக்கானல் சென்று விட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒவ்வொருவராய் வரிசையாக போய் கொண்டிருந்தனர் ...கார்த்திக் கடைசியில் வந்ததால் அர்ச்சகரிடம் விபூதி கிடைக்க வில்லை..சுற்றும் முற்றும் பார்த்து சாமி கும்பிட்டவரே நகர்ந்து செல்ல எதிரில் பார்க்காமல் யார் மீதோ மோதியது போலிருந்தது...
மாலதி கீழே விழுந்து கிடந்தாள்.. அவளின் கைகளில் இருந்த பிரசாதமும் குங்குமமும் தரையில் கொட்டி சிறிது அவள் முகத்திலும் அப்பி இருந்தது..
கார்த்திக் ஓடி சென்று சாரி சொல்லியவாறு அவளை தூக்கிவிட அருகில் சென்றான்.அதற்குள் அவள் கைகளை காட்டி வேண்டாம் என சைகை காட்டினாள்..
எழுந்து நின்று கார்த்திக்கிடம் எதோ சொல்ல வாய் திறக்கவும்,உத்தமன் கையில் குங்குமத்தோடு இருவரும் நிற்கும் பகுதிக்கு வந்தான்..
என்னடா குங்குமம் வாங்கவில்லையா...என்றவாறு தன கையில் இருந்ததை கார்த்திக்கிடம் கொடுத்தான்...அவன் நெற்றியில் வைத்து விட்டு,மாலதியை பார்த்து வேணுமா என்று சைகை செய்தான்...
அவள் முகத்தால் கோபமாக உதட்டை சுழித்து விட்டு எதுவும் சொல்லாமல் நகர்ந்தாள்...கார்த்திக் அருகிலிருந்த சிற்பத்தை ஒட்டி குங்குமத்தை ஓரமாய் வைத்து விட்டு உத்தமனோடு பேசியவாறு நகர்ந்தான்...எல்லோரும் சாமி கும்பிட்டு விட்டு காரில் அமர்ந்திருந்தனர்....
மாலதி நெற்றியில் குங்குமம் இருந்தது..
டேய் இருடா ஒரு நிமிசத்துல வந்துறேன் என்று சொல்லி விட்டு அவசரமாய் வண்டியை விட்டு இறங்கி கோவிலுக்குள் ஓடினான் கார்த்திக்..
அவன் வைத்து விட்டு போயிருந்த குங்குமத்தின் சில சிட்டிகைகள் எடுக்க பட்டிருந்தது.
திரும்ப வண்டிக்குள் ஏறி சீட்டில் அமர்ந்தான்..எங்கடா சொல்லாம கொள்ளாம ஓடுன.நீ போனதை பார்த்து மாலதி நீ வரும் வரை நீ போன திசையாத்தான் பார்த்துகிட்டு இருந்துச்சு என்றான் உத்தமன்...
கார்த்திக்கின் மனசு அன்று முழுவதும் அவளின் நெற்றியில் அவனே ஒட்டி கொண்டிருப்பது போல மகிழ்ச்சியில் மிதந்தான்..

நினைவில் மிதந்தவனை யாரோ காலில் மிதிப்பது போல இருந்தது..கால்களை பார்த்தான் மாலதியின் கால்கள் அருகில் அசைந்து சீட்டுக்குள் செல்வது போல தெரிந்தது..முகத்தை பார்த்தான் அவளின் தலை குனிந்து இருந்தது...
கார்த்திக்கின் பெருமூச்சு சப்தம் அவள் காதிற்கு கேட்டு இருக்கும் போல,அண்ணார்ந்து பார்த்து சின்னதா ஒரு ஸ்மைல் பண்ணிவிட்டு ஜன்னலை நோக்கி பார்த்தாள்...
இவள் அருகிலேயே இல்லை இல்லை இவளுடனே பயணம் செய்ய வேண்டுமென மனமெல்லாம் விண்ணப்பம் செய்து கொண்டிருந்தது அவனுக்குள்...
அவளுடன் பயணம் செய்கிறோம் அவளுக்குள் பயணம் செய்கிறோமா என்ற எண்ணம் அவனுக்குள் எழவே மனசில் மீண்டும் இறுக்கம் பரவ ஆரமித்தது..

இவ்ளோ நாள் எத்தனையோ தடவை மாலதியிடம் பேசிய போது கொடுத்த சந்தோசத்தை இன்று அதற்கு பகரமாய் மொத்தத்தையும் தன்னிடம் இருந்து எடுத்து கொண்டதை போல உணர்ந்தான்...
ஒரு வார்த்தை கூட பேச முடியாத அளவிற்கு சூழ்நிலை கைதியாக அகப்பட்டு இருந்தான்....

இன்னும் சில நிமிடங்களில் அவர்கள் அனைவரும் இறங்க வேண்டிய நிறுத்தம் வர இருந்தது...காற்று கொஞ்சம் அதிகமாய் அடிக்க ஆரமித்தது..ஜன்னல் வழியாக வந்த காற்று சுபாவிடம் இருந்த கார்த்திக்கின் புத்தகங்களின் சில பக்கங்களை பர பரவென புரட்டி போட்டது....

ஒவ்வொரு பக்கத்திலும் மாலதி என எழுதப்பட்டு இருந்தது...
மாலதியும் சுபாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்..
இப்போது இருவரின் பார்வையம் கார்த்திக்கை நோக்கி திரும்பியது...

காதல் கண் கட்டுதே .....நாளை தொடரும்...

எழுதியவர் : சையது சேக் (17-Feb-18, 6:17 pm)
பார்வை : 188

மேலே