பாரதி போற்றி ஆயிரம் – 57

பாடல்கள் 396 முதல் 402



கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்



கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

தமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண் ண ன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார்வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.

முதல் அத்தியாயம்: தமிழ்த்தாய் பார்வையில் பாரதி

30 முதல் 36 வரை உள்ள பாடல்கள்

எளியநடை எளிய பதம் எல்லார்க்கும் எளியசந்த

என்பதுவே எனக்களிக்கும் சேவை – அதுவேம்

என்னைவாழ வைக்கயிங்கு தேவை – எனவே

எளியவர்கள் கிராமங்களில் தெளிவுறவே பாடுகின்ற

இளமையுள்ள பலவடிவில் பாவை – எழுதி

அணிவித்தாய் அரியகவிக் கோவை





இருண்டதுயென் வாழ்க்கையென ஏக்கமுற்று வாடுகையில்

ஏற்றிவைத்தாய் அரியகவித் தீபம் – அதனால்

தீர்ந்த்துவே எம்தமிழர் தாபம் – உந்தன்

பெருமைதனை உணர்ந்தெவரும் போற்றிநின்ற போதில்கவிச்

செருக்குற்றோர் கொண்டனரே கோபம் – மக்கள்

வெறுத்ததினால் பதுங்கினரே பாபம்





எத்தனையோ தொழிலிருந்தும் பத்திரிகைப் பணியிருந்தும்

எமக்குத் தொ ழில்கவிதை ஒன்றே – கவிதை

எழுதாநாள் பிறவாநாள் என்றே – வாழ்வில்

நித்தமிங்கு வறுமையினால் செத்துச் செத்துப் பிழைத்தபோதும்

நீடுமுயிர் தமிழால்தான் நன்றே – என்று

நிலை பெற்றாய் காலத்தை வென்றே



யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம் – என

பாமரனோர் மொழிசொன்னால் எம்மொழிநீ

அறிவாயென பழித்தல் கூடும்

தேமதுரத் தமிழுடனே ஆங்கிலமா

ரியமிந்தி திகழும் வங்கம் – மேலும்

நேமமுறப் பிரஞ்சினையும் நன்குணர்ந்து

ஆய்ந்தன்றோ நீயும் சொன்னாய்





பாரதியார் தமிழ்மொழியின் பெருமைகள்

விரிவாகப் பாடவில்லை – என

சாரமிலா ஓர்குறையை சற்றேனும் தயங்காமல்

சொல்வா ருண்டு

சாரதியாய் கவித்தேரை நீசெலுத்த

நானமர்ந்து சென்ற போதில் – இந்தப்

பாரதனில் உன்னாலே ஒலித்ததெல்லாம் தூய

தமிழ்ப்பாடல் தானே?





பதவுரையோ தெளிவுரையோ விரிவாக

எழுதியிங்குப் பொருளு ரைக்க – என்றும்

பண்டிதர்கள் தேவையில்லை என்றிடவே

பாமரரும் பாடச் செய்தாய்

விதவிதமாய் பொருத்தமிலா வருணனைகள்

சொற்களிலே வித்தைகாட்டல் – எனும்

விவகாரம் ஏதுமின்றி கவிதைகளை

வடித்தென்னை வாழ்வித் தாயே!





உதவாத பாறைகளை உடைத்தாங்குக்

கவிவளர்த்த உழவன் நீயே – வாழ்வில்

நிதமிங்குச் சந்தமெனும் நிறம்பலவாய்

உடையளித்த நெய்வோன் நீயே!

சதமெனவே மொழியதனில் பலவடிவில்

நகைசெய்த தட்டான் நீயே – என்றும்

வதங்கலின்றிப் பொருள்தந்து இதயங்களைப்

பெற்றிட்ட வணிகன் நீயே!

பாரதிப் பத்துப்பாட்டு தொடரும்



தொகுப்பாளர் குறிப்பு:


கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, அவரே தொலைபேசியில் 5-2-2018 அன்று தொடர்பு கொண்டு பாரதி போற்றி ஆயிரம் முயற்சி வெற்றி பெற வாழ்த்தினார். அத்துடன் பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதியும் தந்தார். அவருக்கு எமது நன்றி

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.



கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்

இவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.

இவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.



நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன் ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.

ஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.



சென்னை தொலைக்காட்சிக்காக நரகாசுரன், ஜெயா டி.விக்காக இந்திரஜித், கால பைரவர், சாமியே சரணம் ஐயப்பா, பக்த விஜயம், விஜய் டி.விக்காக பைரவி, சன் டி.வி.க்காக விநாயகர் விஜயம், ஆதி பராசக்தி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை எழுதியவர் இவர்.



பெரும்பாலான தலங்களில் சமய சம்பந்தமான சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.



இவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.



பதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.



இவருக்கு நமது நன்றி.



இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069

சந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/

பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****



Share this:

எழுதியவர் : (23-Feb-18, 11:52 am)
பார்வை : 67

மேலே