நினைத்துப் பார்கிறேன் நண்பா


பாடித்திரிந்த நாட்களை
ஓடித்திரிந்த காலங்களை
இளமையின் இனிய நாட்களை
நினைத்துப் பார்க்கிறேன் நண்பா

நதிக்கரையில் அந்தியின்
அழகை ரசித்து விட்டு
நேரமானதால்
விடுதிக்கு விரைந்து வந்தது
யாருக்கும் தெரியாமல் சினிமாவுக்கு சென்று
மறுநாள் மாட்டிக் கொண்டது
கடை வீதியில் அந்த அழகிய பெண்னை
பின் தொடர்ந்து சென்றது
காதலுடனோ கணவுடனோ
அவள் கைகோர்த்து சென்றபோது
திரும்பி பார்த்து மெல்ல சிரித்தபோது
அசடு வழிந்தது
ஒரு காதல் கதை முதல் வரியிலே முற்றுப்பெற்றது
தொடர்வதெல்லாம் காதலும் அல்ல
நாவலும் அல்ல என்று
இரவெல்லாம் சொல்லிச் சிரித்தது

மீண்டும் அவளை கடைவீதியில்
தனியாய் சந்தித்த போது
துணிந்து ஆடோக்ராப் கேட்டது
நன்றி ,வாழ்த்துக்கள் --சினேகிதி
என்று அவள் புன்னகையுடன் எழுதித் தந்தது
எல்லாம் நினைவுகளில் சல சலத்து ஓடும்
நெஞ்சின் நீரோடைகள்
நினைத்துப் பார்க்கிறேன் நண்பா

கல்லூரி பாடப் புத்தகங்களுக்கு அப்பால்
விரிந்து சென்று
கவிதைகளை ரசித்தது
சினிமாவை விமர்சித்தது
எழுத நினைத்த கவிதைகளை
எழுதாமல் இடையே நின்ற வரிகளை
நினைவுகளில் கனவுகளை
சுமந்து நின்ற அந்த நாட்களை
நினைத்துப் பார்க்கிறேன் நண்பா

கல்லூரி இறுதி நாளில்
எல்லோரும் ஆடோக்ராபில்
கவிதை இலக்கியம் தத்துவம்
அறிவியல் என்று எதை எதையோ எழுதிட
நீ மட்டும்
விடை பெறவில்லை ,மீண்டும் வருவேன்
என்று எழுதிய யதார்த்த வரிகளை
இன்றும் ஒவொரு நாளும்
நினைத்துப் பார்க்கிறேன் நண்பா

நினைவுகள் நித்தியமானவை
சாவதில்லை
நம்மை வாழவைக்கும்
நன்றி நண்பா
என்றும் உன் நினைவில் ..
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Aug-11, 12:16 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 483

மேலே