மனிதா நீ மனம் மாறிடு
பகலோடும் இரவோடும்
உறவாடும் வானம்!
ஒளியென்றும் இருளென்றும்
பிரிக்காது நாளும்!!
மனிதா நீ மனம் மாறிடு!
மண்ணில் மனிதத்தின்
மலர் தூவிடு!!
நெல்லென்றும் புல்லென்றும்
நிலம் பார்க்குமோ?!
முள்ளென்றும் பூவென்றும்
மழை பார்க்குமோ?!
மதம் பார்த்து
மலர் இங்கு
மணம் வீசுமோ?!
மனிதா நீ மனம் மாறிடு!!
புலராத நிலை வந்தால்
கிழக்கில்லையே!
பூக்காத மரத்தின்மேல்
வழக்கில்லையே!!
புரியாத புதிர் என்று
ஒன்றும் இல்லை!
புதிதாய் நீ பூப்பூத்திடு!!
உருண்டோடும் கண்ணீரின்
சுவை ஒன்றுதான்!
உடலோடும் செந்நீரின்
நிறம் ஒன்றுதான்!
ஏழைக்கு தனிக்காற்று
என்றும் இல்லை!!
இனியேனும் இருள் நீக்கிடு!!