முதுமொழிக் காஞ்சி 40
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
தானோர் இன்புறல் தனிமையிற் றுவ்வாது. 10
துவ்வாப் பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் தானே இன்புறுதல் வறுமையின் நீங்கி யொழியாது.
பதவுரை: ஓர்தான் - ஒருவன்தான் மாத்திரமே, இன்புறல் - இன்புற்றிருப்பது, தனிமையின் துவ்வாது -வறுமையின் நீங்கியொழியாது.
பொருளுடையவனாய் எவர்க்கும் உதவாமல் தான் மாத்திரமே இன்புற்றிருப்பவன் பொருளில்லாமையால் தனித்துண்ணும் தரித்திரனுக்குச் சமானமாவதன்றி வேறாகான்.
ஒன்றுமில்லாதவன் இரந்து பெற்றதைத் தனியாக உண்பான்: ஆதலால் அவன் வறுமையைத் தனிமை என்று உபசரித்தார்.
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல். 229 ஈகை
பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.