திரு தோல்வி

தோல்வியே
நீ எனக்கு மதிப்பிற்குரியவன்
உன்னை வைத்துத்தான்
நான் என் திறமையை
எடைப்போடுகிறேன்

தோல்வியே
நீ என்னை
தழுவும் போதெல்லாம்
எனக்கு நானே
புடம் போட்டுக்கொள்கிறேன்

தோல்வியே
நீ சிறந்த ஆசான்
உன்னிடம் இருந்துத்தான்
புதுக்கல்விகளை
கற்கிறேன்

தோல்வியே
எனக்கு நீ இழிவு அல்ல
இழப்பும் அல்ல
பெருமையும் வரவும்

தோல்வியே
நீ கோழைக்கு தடங்கல்
வீரனுக்கு படிக்கல்

தோல்வியே
நீ கர்வத்தை அடக்கும்
வல்லமை படைத்தவன்
வெற்றித்திளைப்பில்
வரும் கர்வம்
நீ வந்தால் அடங்கிப்போகிறது

தோல்வியே
உனக்கு கோயில் கட்டி
கும்பிட வேண்டும்
நீ 'நான்' எனும்
அகந்தையை அகற்றி
அடக்கம் எனும் மகுடத்தை
சூட்டும் ஞான கடவுள்

தோல்வியே
நான் உனை
வைத்துத்தான்
வெற்றியேனும் கனியை
பறிக்கிறேன் சுவைக்கிறேன்

தோல்வியே
உன்னிடம்
எல்லாவற்றையும்
கற்றுக்கொண்டேன்
மீண்டும் என்னிடம் வந்து
நலம் விசாரிக்காதே

நான் வெற்றி மகுடத்தை
சூட்டி பிழையில்லாத
ராஜனாக ஆளவேண்டும்
போதும் உன் சகவாசம்
என்னிடம் வராதே
வரமாட்டாய் என நம்புகிறேன்
என் மதிப்பிற்குரிய தோல்வியே
உனக்கு என் மனமார்ந்த நன்றி...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (9-Mar-18, 6:55 am)
பார்வை : 574

மேலே