கருணைக்கொலை செய்திடுவீர்

பகலோடு இரவு சண்டையிடும் நேரம்
நாள்,ஒளி தின்று இருளாய் ஏப்பமிடும் நேரம்

உளவியல் மாற்றத்தால் உடலியல் மாற்றத்தால்
ஊற்றெடுக்கும் சுரப்பிகளால் உந்தம் பெற்ற நேரம்

உள்ளிருந்து வெளியேறத் துடிக்கின்ற உணர்வாய்
அவனான நான் அவளாக உருமாறி அவதரித்த நேரம்

நெளிந்து நளினமுற்று நாணப்பட்டு நான் நடைபயில
ஊர் உறவுகள் எனை வேறுபடுத்தி முகம்சுளித்த நேரம்

என் பெண்மையை சமூகம் அங்கீகாரம் செய்ய
அதீதமாய் அரிதாரம்பூசி நான் உலவுகின்ற நேரம்

மலர்சூடி திலகமிட்டு மாராப்புப் போர்த்தி
மங்கையாய் எனை நானே உருவகப் படுத்திய நேரம்

பனிப் பூத்த வெண்மலராய்
பருவமனம் அரும்பி
வெருவாக உலவி இன்பத் துணைதேடிய நேரம்

களவியலுக்குத் துணைதேடும் களங்கங்கள் விருந்தாய்
கள்ளமாய் மறைத்த தேகம் பசிக்கு ஒப்புவித்த நேரம்

உயிர் உறவுகள் உள்ளம் வெதும்பி வேண்டாத விகர்ப்பமானேன்
இயற்கையின் பிழைக்கும் பொறுப்பாகி நானே குற்றவாளியானேன்

சாக்கடையில் உழலும் புழுவுக்கும் கீழாக
வேக்காடுப் பார்வை என்மீது மோதியது
சாதிமத வேறுபாடுகள் களைந்து அனைத்துயிரும் என்னைச் சாடியது

பொட்டை ஒன்பது அலியென இழிவான கடைமொழி எனக்கு
கழிவான கருவான என்மானிடப் பிறவிக்கு யார்தான் பொறுப்பு?

பெண்மையாய் முழுதாய் உம்மோடு அணைத்திடுவீர்
இன்றேல் கருவிலே கண்டறிந்து கருணைக்கொலை செய்திடுவீர்!


கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (13-Mar-18, 1:58 pm)
பார்வை : 119

மேலே