ஸ்டீபன் ஹாக்கிங் உன்புகழ் நிலைக்கும் கவிஞர் இரா இரவி

ஸ்டீபன் ஹாக்கிங் உன்புகழ் நிலைக்கும் !

கவிஞர் இரா .இரவி !
.

சாதனையாளர்களுக்க்கு மரணம் என்றுமில்லை
சாதனைகளே உலகில் என்றும் வாழ்விக்கும்!



புறத்தோற்றம் அழகில்லை என்ற போதும்


புவியே பாராட்டியது அகத்தின் அழகை !



உடல் ஒத்துழைக்க மறுத்திட்ட போதும்
ஓய்வின்றி உழைத்துச் சாதனை புரிந்தவர்!



கடவுள் என்பது கற்பிக்கப்பட்ட கற்பனை
கடவுள் இல்லை என்பதில் நம்பிக்கை கொண்டவர்!



இங்கிலாந்து ஆக்ஸ்போர்டில் பிறந்த ஆச்சரியம்
இனிய கேம்பிரிட்ஜ் பேராசிரியப் பெருந்தகை!



அண்டத்தை ஆராய்ந்து ஆய்வறிக்கைத் தந்தவர்
அகிலம் பாராட்டும் பண்பினைப் பெற்றவர்!



வன்முறை எங்கு நிகழ்ந்திட்டாலும் கண்டித்தவர்
வளமான உலகம் அமைந்திட வழிவகை சொன்னவர்!



ஐன்ஸ்டின் பிறந்த தினத்தில் சுவாசம் நிறுத்தியவர்
ஐன்ஸ்டின் அளவிற்கு உலகப் புகழினைப் பெற்றவர்!



மருத்துவர்கள் குறித்த வாழ்நாளோ இரண்டு ஆண்டுகள்
மாமனிதர் வாழ்வு நீட்டித்ததோ ஐம்பத்தி அய்ந்து ஆண்டுகள்!



சக்கர நாற்காலியில் சக்கரமாகச் சுழன்றவர்
சகலருக்கும் உழைப்பின் உயர்வை உணர்த்தியவர்!



கணினியின் அருமையை அகிலத்திற்கு அறிவித்தவர்
கண் அசைவால் கருத்துக்கள் பல உரைத்தவர்!



தன்னம்பிக்கையின் சிகரமாக வாழ்ந்து காட்டியவர்
தன்னம்பிக்கையின் சிறப்பை வையகத்திற்கு தெரிவித்தவர்!



உடலை விட உயர்ந்தது மனம் என நிரூபித்தவர்
உடல்நலமின்றியே உலக சாதனை நிகழ்த்தியவர்!



திடகாத்திரமாக உள்ள சோம்பேறிகள் பலருக்கு
தரணியில் உழைத்தால் உயர்வென உணர்த்தியவர்!



வானம் வரை சென்று ரசித்து மகிழ்ந்தவர்


வானளாவிய புகழினை ஈட்டி மகிழ்ந்தவர் !



விஞ்ஞானியாக மட்டுமல்ல எழுத்தாளராகவும் சிறந்தவர்
விசித்திர மனிதனாக உலகில் வலம் வந்தவர்!



சோம்பி விடாமல் சுறுசுறுப்பை போதித்தவர்
சுற்றம் வியந்திட வியப்புகள் புரிந்தவர்!



நூற்றாண்டுகள் கடந்தும் உன்புகழ் நிலைக்கும்
நல்ல மனிதர்களுக்கு என்றும் இல்லை மரணம்!

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (15-Mar-18, 6:46 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 65

மேலே