கூடலார் கோமான்பின் சென்றயென் நெஞ்சு – முத்தொள்ளாயிரம் 60
நேரிசை வெண்பா
புகுவார்க் கிடங்கொடா போதுவார்க்(கு) ஒல்கா
நகுவாரை நாணி மறையா - இகுகரையின்
ஏமான் பிணைபோல நின்றதே கூடலார்
கோமான்பின் சென்றயென் நெஞ்சு. 60
- முத்தொள்ளாயிரம்
தெளிவுரை:
பாண்டியனது அரண்மனை வாயிலுக்குள் புகுந்து செல்பவர்க்கு இடங் கொடுக்காமலும், வெளியே செல்பவரைக் கண்டு ஒதுங்காமலும், சிரிப்பவர்களைக் கண்டு நாணங்கொண்டு மறையாமலும் வெள்ளம் பெருகிவரும் தாழ்ந்த கரையில் தயங்கி நிற்கும் பெண்மானைப் போல கூடல் நகரின் தலைவன் பின் சென்ற என் நெஞ்சு நின்றது.
விளக்கம்:
புகுவார் – வாயிலில் புகுந்து செல்பவர், போதுவார் – வெளியே செல்பவர்,
ஒல்கா – இடங்கொடாமலும், நகுவார் – நகைப்பவர், இகுகரை – தாழ்ந்த ஆற்றங்கரை,
மான் பிணை – பெண்மான், கூடலார் – மதுரை மக்கள், கோமான் – பாண்டிய மன்னன்
வெள்ளம் பெருகின் ஆற்றங்கரை கரையும், தாழ்ந்த கரையில் த துணையைப் பிரிந்த பெண்மான் ஆற்றின் கரை சரிந்து நீரில் அடித்துச் செல்லப் படுவோமோ எனத் தயங்கி நிற்கிறது; அதுபோல, தலைவியும் வாயிலைக் கடந்து அரண்மனைக்குள் செல்லாதவாறு நாணம் தடுக்கிறது; தலைவன் பின் சென்ற காதல் நெஞ்சில் ஏற்பட்ட நோயின் துன்பத்தால் தலைவிக்குத் தயக்கம். தலைவியின் செயலற்ற தன்மை உணர்த்தப் படுகிறது.