காணாமல் போன கடித பறவை
காணாமல் போன கடித பறவையே
எங்கே போனாய்
கருவியின் கதிர் வீச்சு
குருவிகளை விரட்டியது மட்டுமல்ல
கடிதப் பறவையே உன்னையும் தான்
ஓலைச் சுவடி உருவெடுத்து
ஒற்றன் மூலம் ஊர் பறந்து
மன்னர் தம் மடி தவழ்ந்து
உறவை இணைத்த உயர் பொருளே
இக் கவிதைக்கு நீ தான் கருப்பொருளே
பனை ஓலை பயணம் முடித்து
உன்னை பண்படுத்தி ஏடென தரித்து
எழுதி முடித்தோம் எட்டாய் மடித்து
கடிதம் எனும் பெயர் கொடுத்து
சிவப்பு பெட்டியில் சிறைபடுவாய்
சிகரமெனினும் சேர்ந்திடுவாய்
செவ்வக வடிவம் உன் படைப்பு
இவ் வையகம் உயர்ந்திட நீயே பொறுப்பு
அளவில் இருப்பாய் சின்னதாய்
மொழியை எழுத உதவிய வெள்ளத்தாய்.
மனித உறவை இணைத்த கடிதத்தாய்
இனி எழுத விழைவோமா ஆசையாய்?
எங்கிருந்தோ வருவாய்
எழுதியவரின் முகம் காட்டுவாய்
உள்ளத்தில் உள்ளதெல்லாம்
உன்னிடம் எழுதும்
உயர் நட்பும் நீயாவாய்
கடிதமே
பழைய காதலர்கள் வீட்டில்
நீ பரண் மீது கிடப்பாய்
எதையோ தேடுகையில்
ஏதோ போல் கிடைப்பாய்
பிரித்துப் படித்தாலங்கு
இளமையை திருப்பிக் கொடுப்பாய்
கடிதமே காலங்கள் கடந்த போதும்
மடித்து கிழிந்து கசங்கிய போதும்
கற்பென்று காப்பாற்றும்
கடித காதலியே எங்கே போனாய்
காதலர்கள் கொண்டாடிய
காகித தேவதையே எங்கே போனாய்
ஓ காதலர்களே
நீங்கள் காதலித்தீர்கள் என்பதற்கும்
உங்களுக்கு வயதானால்
வாசித்து மகிழ்வதற்குமாவது
ஒரு கடிதம் எழுதுங்கள்
காதோடு பேசியதையெல்லாம்
காற்றோடு மறைத்துவிடும்
கருவிக்கு என்ன தெரியும்
காதலைப்பற்றி
ஓ உறவுகளே
ஒரு கடிதம் போடுங்கள்
எங்கள் பிள்ளைகளுக்கு அதை
அறிமுகம் செய்து வைக்க
உடைகலாசாரத்திற்கு
உற்சாகம் தந்து விட்டு
ஊடக கலாசாரத்திற்கு
ஜன்னலை திறந்து விட்டு
கடித கலாசாரத்தின்
கதவுகளை சாத்திவிட்டோம்
வழி வழியாய் கடிதமெழுதி
மொழி வளர்த்த மானிடம்
முரண்பட்டு போனது
குறுஞ்செய்திக்குள்
குறுகித்தான் போனது மொழி
வாய் பேசவும்
காதுகளால் கேட்கவும்
வந்த கைப்பேசிகள் வாழட்டும்
ஆயினும் கண்களால் பார்க்கவும்
எழுதியோரின் இதயத்தை படிக்கவும்
கடிதங்கள் வளரட்டும்
எழுதி வளர்த்த கடித மொழி
இனியேனும் துளிர் விடட்டும்.
கடிதம் எழுதியதாய்
கைபேசியில் சொல்லுங்கள்
எழுதி அனுப்பிய கடிதம்
உங்கள் இதயத்தை பேசட்டும்
கடிதமே
உன்னை கடிதமாய் எழுதியோரேல்லாம்
காணாமல் தான் போனார்கள்
இன்றோ கைபேசிகளையே
கவச குண்டலமாய் கொண்டு வாழும்
நாங்களும் கலியுக கர்ணர்கள்
கடிதமே
மனதோடு பேசிய உன்னை
மறந்து விட்டுத்தான்
காதோடு பேசும் கருவியை
காதலிக்கிறோம்
தவறினால் தவிக்கிறோம்
புதிதாய் வாங்கிட துடிக்கிறோம்
அகன்ற பூமி வட்டத்தில்
வாழ்ந்து கொண்டே
சிறிய செவ்வக கருவிக்குள்
சிறைப்பட்டுத்தான் போனோம்
பேசியதை பதிவாக்கும்
கைபேசிய - எங்கள்
இதயத்தை பதிவாக்கும்
கடிதத்தை கண்டாயோ
எங்கள் கடிதம் போல்
நீ இல்லை
நீ கைவிட்டு தொலைந்து போனால்
கையில் இருந்ததற்கு சுவடுகள்
இல்லை
ஈரம் பட்ட கடிதம் முழுவதுமாய்
அழிவதில்லை
மடிந்து கிழிந்த போதும்
எழுதிய உண்மை அதில் மாறுவதில்லை
கருவறைச் சிறையோ பத்து மாதம்
ஆனால் கைப்பேசி சிறையோ
ஆயுள் முழுதும்
விலாசம் கட்டி விட்டால் வீடு தேடி வரும்
கடிதப்புறாக்களை
வரவேற்ப்போம்
இனி கடிதம் எழுதி மொழி வளர்ப்போம்