ஈர விழி காவியம்
அன்னை தேசம் ஆண்ட
அரபு மன்னனின் மகன்..!
அன்பும் அறிவும் பொங்கிடும்
அட்சயபாத்திரம் அவன்..!
அவர்களின் அரண்மனையில்
அடிமை பணியில் இவள்..!
ஆயிரம் நிலவின் ஒளியாக
ஆதவன் படாத உடல்..!
மகளிர் என்றால்
மறைந்துதான் இருக்கனும்..!
மதத்தின் கட்டுபாட்டால்
மனதிற்கு போடும் பூட்டு..!
அடிமைக்கோ இது விதிவிலக்கு
ஆடை சுதந்திரம் அதிகமிருக்கு..!
ஆடல் பாடல் இவள் செய்ய
அரசர் பார்க்கும் பொழுதுபோக்கு..!
கடவுள் தந்த கடமையென்று
கவலையோடு இவளாட
உடலை பார்த்த இளவரசன்
உள்ளத்தை தொலைக்கின்றான்..!
இதயத்தில் பூத்த காதலை
இதழ் பிரித்து சொல்லிவிட
அதிர்ச்சியின் உச்சத்தில்
ஆகாயம் பறக்கிறாள் - அவன்
அன்பையும் ஏற்கிறாள்..!
தங்க குவளையில்
தயிர்சாதம் போல
இல்லற விருந்தில்
இருவரும் பசி தீர்க்க....
காதல் பயணத்தில்
காமம் அதிகமாகி
காதலின் ஆதரமாய்
கரு ஒன்றும் உருவாகிறது..!
இருமனம் இணைந்தும்
திருமணம் இல்லையென்றால்
காதலின் அர்த்தம் மாறிவிடும்
காலதாமதமின்றி தந்தையிடம் சொல்கிறான்..!
அரசனின் வாரிசு
அடிமையின் குழந்தையா...
ஆழ்கடல் பேரலையாய்
ஆவேசமாகிறார்
அரசனாகிய தந்தை..!
சினத்தின் மிகுதியால்
சிறிதுகூட கருணையின்றி
சிதையில் தள்ளுகிறார்
சிசுவை சுமந்த உயிரை..!
கண் முன்னே
காதலும் காதலியும்
தீயிற்கு இரையாக
உயிருந்தும் பிணமாகிறான்
உள்ளத்தால் ஊனமாகிறான்
இதயத்தை இழந்த இளவரசன்..!
காலம் தொடரவேண்டிய
காதல் காவியம்
கவலையில் முடிகிறது..!
ஓர விழி பார்வையில்
ஈர விழி காவியங்களாய்
என் கவிதையில் நிறைகிறது..!