ஆட்டுக்கறி அப்துல் காதர்

ஆட்டுக்கறி அப்துல் காதர்
----------------------------------------------
வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் வந்து காத்திருந்தார்கள். என்னாச்சு காதர் பாய்க்கு. காலை ஐந்து மணிக்கே கடையை திறந்துவிடுவாரே. ஆட்டுக்கறி விற்பவர் காதர் பாய். அருகிலேயே பல கடைகள் இருந்தாலும் அவர் கடையில் தான் கூட்டம் எப்பொழுதும். காரணம் அவரின் சிரித்த முகம் என்பது அவருக்கும் தெரியாது யாருக்கும் தெரியாது. பக்கத்து கடைகள் பாதிக்கப்படக் கூடாது என்று அவர் ஆட்டுக்கறி மட்டுமே விற்றார். மற்றதை மற்றவர்கள் விற்றுக்கொள்ளட்டுமென்று.


"உடம்பு சரியில்லாமால் இருக்குமோ"


"இல்லை. நேற்று கூட வழியில் பார்த்துப் பேசினேன்"


இப்படி பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் பக்கத்துக் கடையில் கோழிக்கறி வாங்கிச் சென்றார்கள்.


அப்போது பாயின் மனைவி அங்கு வந்தார்.

"என்ன பாயம்மா. ஏன் இன்னக்கி கடை லீவு. என்ன விசேசம். பாய் வரலயா?"


"ஐயா. மன்னிச்சுகோங்கோ. இன்னிமே வரமாட்டார். கடையை எடுத்துர சொல்லிட்டாரு. உள்ள இருக்கிற ஆடுகளை அவுத்துவிடத்தான் நான் வந்தேன். நீங்க வேற கடையில வாங்கிக்கோங்கோ."


"என்னமா ஆச்சு. அவர் உடம்புக்கு ஒண்ணுமில்லையே"


"அவர் நல்லா இருக்கார் அண்ணா. நேத்து அவர் சின்ன பேத்தி 'ஆட்டுக்கு வலிக்கும் தாத்தா' அப்படினு சொல்லிட்டாளாம். இன்னிக்காலையில் திடீர்னு இப்படி முடிவெடுத்துட்டார். உங்களுக்குத் தான் தெரியுமே வீட்ல அவர் எடுக்கறதுதான் இறுதி முடிவு. இந்த ஆடுகள கூட விக்க வேண்டாம். தெருவில விடச் சொல்லிட்டாரு"


"அப்ப வருமானத்துக்கு"


"அல்லாஹ் இருக்கார் அண்ணா."



----------

சுரேஷ் ஸ்ரீனிவாசன்

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (21-Mar-18, 10:00 pm)
பார்வை : 146

சிறந்த கவிதைகள்

மேலே