இரவு புதினம்

இரவு ஜெயமோகன் எழுதிய சிறிய நாவல். 2010ல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது.

பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒருவனைப்பற்றிய கதை இது. பெரிய மிருகங்கள் எவையும் பகலில் விழித்திருப்பதில்லை. அவை இரவில் மட்டுமே வாழ்கின்றன என இவர்கள் நினைக்கிறார்கள். இரவே அழகானது பகல் அழகற்றது என்கிறார்கள். நாவல் இரவை குறியீடாக மாற்றுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் உள்ள இருண்ட பகுதிகளை இரவு என்று அது வகுத்துரைக்கிறது. இரவின் விரிவான வர்ணனைகள் கொண்ட படைப்பு.
--------------------------------------------------------------------------

இரவு, முன்னுரை

நடராஜகுருவின் சுயசரிதையில் ஓர் இடம் வருகிறது. அவர் ஐம்பதுகளில் லண்டன் செல்லும்போது சிலரை சந்திக்கிறார். அவர்கள் பகலில் முழுக்க தூங்கி இரவில் மட்டுமே விழித்திருப்பவர்கள். பகல் வெளிறியது, அழகற்றது என்று சொல்லும் அவர்கள் அழகுணர்வுள்ளவர்களுக்கு இரவே உகந்தது என்கிறார்கள். நமக்கு வேண்டியவற்றின் மீது மட்டும் வேண்டிய அளவுக்கு மட்டும் ஒளியை விழச்செய்யலாம் என்பதே அதன் அழகு என்கிறார்கள் .

ஒருவகையில் அது நம் யோகமரபில் இருக்கிறது. இரவில் விழித்திருத்தல் என்பது யோகத்தின் வழிமுறை. ‘தனித்திரு விழித்திரு பசித்திரு’ என்கிறார் வள்ளலார். ‘உயிர்களெல்லாம் உறங்குகையில் விழித்திருப்பவன் யோகி’ என்கிறான் கிருஷ்ணன் கீதையில். உயிர்களெல்லாம் உறங்கும் இரவு என்று ஒன்று இல்லை. ஆகவே அவன் சொல்வது பிரக்ஞையின் இரவையே.

உணர்ச்சிகளின் இரவு. சிந்தனைகளின் இரவு. உறவுகளின் இரவு. நாம் அறிந்த அனைத்துக்கும் இரவு. அதையே இதில் எழுத முயன்றிருக்கிறேன். இந்த நாவலை என் நண்பர் சிறில் அலெக்ஸுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்

[தமிழினி வெளியீடாக வரவிருக்கும் இரவு நாவலின் முன்னுரை]

ஜெ
------------------
இரவு ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு….

வணக்கம்…நான் உங்கள் கதைகள் நாவல்கள் சிலவற்றைப் படித்துள்ளேன். ஆனால் “இரவு” படிக்கும்பொழுது என்னுடைய conscious -இல் ஏதோ ஒரு பக்கத்தை..,எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை…ஏதோ முன் ஜென்மத்தில் இப்படித்தான் நான் வாழ்ந்திருபேனோ என்ற எண்ணம் கூட வந்தது…mysitc என்று சொல்லலாமா?தெரியவில்லை…இந்தக் கதை படிக்கும்பொழுது ஏதோ எனக்காகவே என்னுடைய வாழ்க்கை பற்றி எழுதியதைப் போல உணர்ந்தேன்.அதனுடைய அழகியல் மட்டும் அல்ல சூழ்நிலையும் என்னைக் கட்டிப் போட்டது..ஆனால் கண்டிப்பாக என்னால் சொல்ல முடியும்,இது என்னுடைய தர்க்க மனதுக்கு அப்பாற்பட்டது …..யாராவது இரவைப் பற்றித் தரக்குறைவாகவோ அல்லது வெறுத்துப் பேசினாலோஎனக்கு வரும் கோபத்துக்கு அளவு கிடையாது…இரவு ,அதற்கு உண்டான அழகு அதற்கு இருக்கிறது…

இங்கு சென்னையில் அந்த இரவுக்கு வாய்ப்பே இல்லை…என்னதான் வீட்டை இறுக மூடினாலும் இருட்டில் அடுத்தவர் முகம் தெரிந்து விடும்…அநேகமாக சென்னை வாசிகள் இரவு என்ற அற்புத இயற்கை அளித்த பெரும் வாய்ப்பை இழக்கிறார்கள் என்றே சொல்வேன் . என்னுடைய சிறு வயதில் எங்கள் வீடு கிராமத்தை விட்டுச் சற்றுத்தள்ளி இருக்கும்..இரவில் அடுத்தவர் முகம் கூடத் தெளிவாகத் தெரியாது. இரவு இரவாகத் துல்லியமாக இருக்கும்..அத்துடன் இரவு…எந்த சமரசமும் கிடையாது..விளக்கு வைத்து விரட்டாத வரை எங்கும் எவ்வளவு தீர்க்கமாக ஊடுருவ முடியுமோ அவ்வளவு தீர்க்கமாக ஊடுருவியிருக்கும்..நான் இரவில் மிதந்து கொண்டு இருப்பேன்..தூரத்தில் மின்சார விளக்குகள் சில வெளிச்சப் புள்ளிகளாய்த் தெரியும்..உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பேன்..சிறிது நேரத்தில் அந்த வெளிச்சப் புள்ளிகள் வெளிச்சக் கற்றைகளாக மாறும்..உடனே கண்ணை மூடிக் கொள்வேன்..தூரத்தில் கொல்லி மலையில் இரவில் மரங்கள் சில சமயங்களில் உராய்ந்து தீப்பிடித்துக்கொள்ளும்..ஒன்று இரண்டு பேருந்துகள் மலை மீது ஊர்ந்து செல்லும் பொழுது அவற்றின் கண்கள் மறைந்து மறைந்து செல்லும்..சிறு சிறு நெருப்புப் புள்ளிகள்,அந்த மரங்களின் பெரும் நெருப்புப் பந்தை நோக்கி வேக வேகமாக நகர்ந்து செல்வது போல இருக்கும்….

அந்த இருட்டின் பிசு பிசுப்பை என்னால் உதற முடிந்ததே இல்லை.அந்தக் கத கதப்பை என்னால் மறக்கவும் முடிந்ததில்லை.இன்று அந்தப் பழைய வீட்டில் நாங்கள் இல்லை..கிராமத்தின் பகுதிக்குள் வந்துவிட்டோம்.ஆனால் இன்றும் நான் ஊருக்குச் செல்லும்பொழுது அந்தப் பழைய வீடு இருந்த இடத்திலேயே நிறைய நேரத்தைச் செலவிடுகிறேன். இத்தனைக்கும் அந்த நிலத்தை நாங்கள் வேறொருவருக்கு விற்று விட்டோம். அவர்களுக்கு எனக்கும் அந்த இடத்திற்கும் இருந்த பந்தம் புரியும்.அதனால் அந்த வயல்களில் நான் நிறைய நேரம் இருந்தாலும் அவர்கள் எதுவும் சொல்வதில்லை.ஒரு வேளை அந்த இடத்தில இருந்துகொண்டு இரவை நெடு நாளாகச் சுவாசித்ததால்தானோ என்னவோ …..?

மீடியா நடராஜ்

அன்புள்ள நடராஜ்

இரவின் வசீகரத்துக்கான் முக்கியமான காரணங்களில் ஒன்று நாம் லௌகீகவேலைகளை முழுக்கப் பகலில்தான் செய்கிறோம், இரவை அதற்கு அப்பால் வைத்திருக்கிறோம் என்பதுதான் என நினைக்கிறேன்

சமீபத்தில் கோதாவரிக்கரையில் இருக்கையில் அதையே எண்ணிக்கொண்டேன். நாம் நம் லௌகீக வாழ்க்கைக்கு அப்பால் வைத்துக்கொள்ளவேண்டிய ஒரு இடம், ஒரு நேரம் நமக்கு இன்றியமையாதது

ஜெ
-------------

இரவு நாவல் -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

தங்கள் நலம் அறிய ஆவல் சார்

தங்களின் இரவு நாவலை சமீபத்தில் வாசித்தேன். கதை முழுக்க ஒரு புதுமையான புனைவில் நிகழ்கிறது. முழுக்க இரவில் வாழும் மனிதர்கள், சரவணின் அதே ஆச்சர்யத்துடன் அந்த வாழ்க்கை அறிமுக மாகிறது .மிகுதியான படிமங்கள் இந்த இரவுக்கு.

உள்ளே தீபத்தை வைத்து மூடப்பட்ட கருவறைக் கதவின் இடுக்கு போல ஆகியது வான்கோடு

சூரியன் மறையும் அந்தி வானத்த இனி எப்பொழுது பார்த்தாலும் உருகி ஒளிரும் படிமமாக (நீங்க சொன்னது தான் சார் ) இதுவே என்னில்; இதற்கு மேல் வேண்டாம் என்று சொல்லும்படியாக
விரிந்த இமைகளுடன் அதையே நினைத்து கொண்டு இருக்கும்போது இன்னும் ஓன்று சட்டென்று, “ஒரே ஒரு அரிக்கேன் சுடராக ஒரு படகு நீர்மேல் நகர்ந்து சென்றது.மீண்டுமொரு படகு, இரு சிவந்த புள்ளிகள் சட்டென்று காயல் கண் ஒன்று என்னை நோக்குவதாக உணர்தேன்”

இரவு வாழ்கையை மேற்கொள்ள ஆரம்பித்ததற்கான காரணத்தை மேனன், தற்செயலான ஒரு இரவின் மரநாய் ஒன்றின் கண்கள் தந்த ஒளியிலிருந்து சொல்லிக்கொண்டு போவார், “அது விட்டு விட்டு போன கிளையாகவும் அது போய் உக்கார்ந்த கிளையாகவும் மனசு ஆடி கொண்டு இருந்தது”பிரமாதம் சார் அந்த காட்சி உறைந்து இந்த படிமம் மேலேழுகிறது .. ,

சரவணின் முதல் ஆசிரம அனுபவத்தை பதைப்பின் ஊடாக சொல்லும்போது போது “ஒரு முழு கச்சேரி முடிந்த பின் உரையிடாமல் வைத்திருக்கும் தம்புரா போன்று என் அகத்தை உணர்ந்தேன். “மகத்தான அறியமுடியாமை யானை ”

இது எல்லாம் மின்னல் வரிகள் என்று எனக்கு படவில்லை, கதாபாத்திரத்தின் சில அனுபவங்களை அவர்களை விட இன்னும் அதிகமாக ஒரு வாசகனால் நுண்ணுணர்வோடு எடுத்துக் கொண்டு போக முடியும் என்பதற்கான படிமங்கள்.

நானும் இந்தக் கதையை முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக இரவில் தான் படித்தேன். வழக்கமாக சூழலை துளி துளியாக காட்சிபடுத்தி கொண்டே செல்லும் உங்கள் சரளமான நடை, மேலும் ஒரு காதல் முழுக்க இரவிலேயே நடப்பது . அழகா நிதானமான அனுபவங்கள் ஆக மேலும் மேலும் செல்வது,

“அவளது கழுத்து மென்மை மென்மை என்ற சொற்களாக இருந்தது”,

“என் இமைகளால் விசிறி விசிறி அவளை மேலும் சுடர செய்கிறேன் போல “,


“அவள் பார்வையை கண்டபின் நான் சென்று அவளருகே அமர்ந்தேன் (வயசுக்கோளாற இன்னும் கிளறி விடும் பார்வை அது),



“என் கைகளுகாகவே வடிவமைக்கப்பட்டது போல இருந்தது அவள் உடம்பு, அவள் உடலில் சுய நினைவு திரும்புவதை என் உடலாலயே உணர்ந்தேன்.

– இத எப்படி எழுத்தில கொண்டு வந்தீங்க சார் ….! ரொம்ப உச்சம் அந்த போட்டில் நடக்கிற சம்பவம், சில கணங்களில் ரொம்ப அப்பட்டமான பேச்சுகளை பின்னால் சரவணனே தாமசிடம் சொல்லும் வரிகள்” அவள் உடலுக்குள் குருதியும் சளியும் எல்லாம் இருக்கின்றன, ஆனால் நான் அவளை பார்க்கும் போதெல்லாம் அவையும் கூட தெரிந்தால் என்ன செய்வது..? ” ; இந்த வரிகள் வருவதற்கு முன்பே இந்த வரிகளை பற்றி மங்கலாக நினைத்தேன், அட சரியா சொல்லிடாப்லயே சரவணன் என்று .

இரவு வாழ்கைக்கு பயந்து சரவணன் உணரும் “பெருச்சாளியின் கண்கள்” மிக துல்லியமான குறியீடு . அந்த வாழ்கைக்கு மேலும் உள் செல்ல பெரச்சன் உடனான கடலில் செல்லும் படகு அனுபவமும் அதே . ஆனால் அதை விட பெருச்சாளியின் கண்கள் உச்சமான குறியீடு என்று நினைக்கிறேன். பிரசண்டனந்தா வின் உரையாடல் பகுதிகள் சரவணன் சொல்வது மாதிரி தெளிவான தர்க்கங்கள், சாக்த மதம் என்ற ஒரு மதம் இருந்ததா ..? ஒரு அசாதாரண மனிதராக தான் தோன்றியது ஆரம்பத்தில் . ஒரு சராசரி மாதிரி செக்ஸ் உள்ளுணர்வுக்குள் அவ்வளவு பிரச்சனையா இருந்திருக்கு அவருக்கும் ; இவர்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள், ஆனால் அசாதாரமானவர்களா காட்டி கொண்டது தான் பிரச்சனையே என்று மேனன் குறிப்பிடுவார் இறுதியில் கதையில் வரும் யார பத்தியும் தயக்கமான அபிப்ராயம் தான் எனக்கு

சரவணன் முடிவு எடுக்கும் தடுமாற்றத்தை விவரித்துப் போகையில் ” கோழியின் அடித்தாடை போல எனக்குள் ஒரு துடிப்பு ஓடிகொண்டிருந்தது” அந்த அனுபவம் தொடர்ச்சியான உணர்வு நிலையை கொடுக்கும் வரிகள் இவை.

திடு திப்பென்று ஒரு முப்பது பக்கம் காண்போன மாதிரி உன்னிக்கிருஷ்ணன் எழுப்பி சரவனிடம் கமலா கொலையானதைப்பற்றி பதறி சொல்வது, எல்லாவற்றிற்கும் பெரிய ப்ரேக் போட்டது மாதிரி
ஒரு சின்ன நெருடல்,போலீஸ் பற்றி முன் இமேஜ் இல்லை என்றாலும் இதில் வரும் சதானந்தனும் கிட்டத்தட்ட நைட் லைப் ஆட்களில் ஒருவர் மாதிரியே பேசுவதாகப் படுகிறது,கொச்சினை விட்டு சென்னை வரை காரிலேயே பயணம் செய்ய சரவணன் விரும்புவது சரியான உளவியல் நிகழ்வு

சரவணன் இரவு வாழ்க்கைக்கே முற்றிலும் திரும்புவது “ஒரு தடவ உச்ச கணங்களை கண்டு விட்டால் மனம் மேலும் மேலும் உச்ச கணத்த நோக்கியே சொல்லும், “இங்கு சாதாரண தருணம் என்பதே கிடையாது,,ஒவ்வொரு காலடியும் ஒரு சவால் ’’ –

நிறைய கணங்கள், மிகுந்த நன்றி திரு.ஜெயமோகன் அவர்களுக்கு

Regards
dineshnallasivam

அன்புள்ள தினேஷ்

நன்றி

இரவு வர்ணனைகளின் நாவல். அந்த நிலக்காட்சிக்குள் மானசீகமாகச் செல்லாமலிருந்தால் அதை உணர முடியாது. இரவில் இருக்கும் அனுபவத்தை சொல்லால் அள்ளும் முயற்சிதான் அது

சாக்தம் சக்தி வழிபாட்டை கொண்ட மதம். ஆறு இந்துமதப்பிரிவுகளில் மூன்றாவது
ஜெ





இரவில்மட்டும் வாழமுடியுமா?
அன்புள்ள ஜெயமோகன் சார்,
இந்தியச் சூழலில் இரவுச் சமூகம் பற்றி இப்பொழுது எப்படி பட்ட சித்திரம் உள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை. Longinus போன்ற கிரேக்க செவ்வியல் தத்துவ ஆசிரியர்கள் கவிஞர்கள் இரவில் தூங்கக் கூடாது என்பதை விதியாகவே சொல்கிறார்கள். இத்தகைய நம்பிக்கை உள்ளவர்களாகவே நிறைய கவிஞர்களும் தத்துவ ஆசிர்யர்களும் வரலாறு முழுவதும் காணக் கிடைக்கிறார்கள்.

தாந்தரிக பூஜைகள் தமிழக பெண்களுக்கு ஆச்சிர்யம் தராது என்றே நம்புகிறேன். செவ்வாய் கிழமை கொழுக்கட்டை(மாவு பூஜை) என்னவென்று தெரியாத விவசாய பின் புலம் கொண்ட பெண்கள் இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். அந்த பூஜையில் ஆண் குறிகளையும் பெண் யோனியையும் வைத்து பாலியல் கல்வியே போதிக்கபடுகிறது. அந்தப் புகை படங்களை என் வெள்ளைக்கார தோழி ஒருத்தி மூலம் கண்ட போது ‘அட நம் பெண்கள் இவ்வளவு விபரமானவர்களா?’ என்று ஆச்சரியப் பட்டேன். எல்லாம் மேலோட்டமாக கணினி முன்பு உக்கார்ந்து முற்போக்குவதமும் உலகமயமாதலும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு படுகிறது. எல்லோரும் தங்கள் குல சடங்குகளையும் நம்பிக்கைகளையும் சுமந்து மக்கள் காலம் காலமாக வாழ்கிறார்கள்.

இந்த கதையில் உள்ள மேல் தட்டு மக்களின் நகைச்சுவை உணர்வு ஏனோ சுஜாதாவின் நடையை ஞாபக படுத்க்கிறது, சில இடங்களில் மலையாளிகள் ஜாதியை பற்றி கிண்டலை பேசுவது தவிர்த்து. ஆனால் இதில் வரும் காட்சிகள் அனைத்துமே அசல் ஜெயமோகன் வர்ணனைகள். உதரணமாக சோபாவில் அமரும் நாயர் திமிங்கலம் நீரில் மூழ்குவது போல என்ற வர்ணனை. கூசும் சூரிய ஒளியை பற்றிய வர்ணனைகள், மற்றும் காலில் வரும் பாசி மனம் பற்றிய வர்ணனைகள் எல்லாம் நீண்ட நாட்கள் நினைவில் நிற்பவை.

elango

அன்புள்ள இளங்கோ

நடராஜகுருவின் சுயசரிதையில் ஒரு நிகழ்ச்சி. அவர் லண்டனுக்கு 1950களில் செல்லும்போது ஒரு இரவுச்சமூகத்தில் அவரைப்பேச அழைக்கிறார்கள். அவர்கள் இரவே இயல்பானது என்று நம்பும் சமூகம். நடராஜகுரு அங்கே இந்தியாவில் தாந்த்ரீகர்கள் பல்வேறு சாக்தர்கள் அப்படி வாழ்ந்திருந்ததைப்பற்றி பேசுகிறார். குருவும் சிஷ்யனும் என்ற பேரில் ப.சாந்தி மொழியாக்கத்தில் நடராஜ குருவும் நித்யாவும் செய்த பயணங்களைப்பற்றிய விவரிப்பிலும் அந்த செய்தி உள்ளது. அதுவே இந்நாவலுக்கு அடிப்படை.

எழுத எழுத நாவல் பல்வேறு தளங்களை நோக்கிச் சென்றது. இரவு பகலின் மறுபக்கம். அப்படியென்றால் பகலில் இபப்டி இருப்பதெல்லாம் இரவில் எபப்டி இருக்கும்? பகல் நம்முடைய ஜாக்ரத். அப்படியென்றால் இரவு ஸ்வப்னமா? தியானத்தில் ஸ்வப்னம் என்பது இனியதும் கொடூரமானதுமாகும். ஜாக்ரத் கட்டுக்குள் நிற்பது. ஸ்வப்னம் கட்டற்றது. இவ்வாறாக நாவல் வளர்ந்து எனக்கே சில தெளிவுகளை அளிப்பதாக அமைந்தது.

இரவுச்சமூகம் பல்வேறு வடிவில் நீடிக்கிறது. உலகில் படைப்பூக்கம் கொண்ட பலர் இரவில் வாழ்ந்தவர்களே. திரைத்துறையில் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள் இரவில் மட்டும் வாழ்பவர்கள் என்கிறார்கள். என்.டி.ராமராவ் இரவில்தான் அதிகம் விழித்திருப்பார். அவர்களின் செயலூக்கம் அதிகமானதாக இருக்கிறது

தனிப்பட்ட முறையில் நானும் இரவில் வாழ்பவன். இரவு 3 மணிமுதல் காலை 7 மணிவரை தூங்குவேன். என்னுடைய அலுவலக வெலைதான் எனக்கு தடை. சென்ற வருடம் 4 மாதம் அலுவலக விடுப்பு எடுத்து வீட்டில் இருந்துஎழுதியபோது இரவு முழுக்க எழுதி,வாசித்து பகல் முழுக்க தூங்கினேன். இப்போதுகூட வேலை இல்லாத நாளில் அப்படித்தான். ஒரு கட்டத்தில் இதை விட்டுவிட்டு இரவில் தங்கிவிடவேண்டும் என்று கனவு காண்கிறேன்.

யோகசாதனைகளுக்கு இரவே உகந்தது. ‘உயிர்களெல்லாம் உறங்கும்போது விழித்திருப்பவனே யோகி’ என்று சொல்கிறது கீதை.

இரவில் மட்டுமே வாழ்வது அபாரமான கவனக்குவிப்பை உருவாக்கும். வேலைக்கான நேரம் முடிவிலாது இருப்பது போலிருக்கும். செய்வன சிதறாது. இரவு மனதை கற்பனைகளில் பறக்கச் செய்கிறது. பகலில் ஒருபோதும் உணரமுடியாத அமைதியை அளிக்கிறது. பகலில் நன்றாக தூங்க முடிந்தால் உடல்நலம் குன்றாது . இது என் அனுபவம்

ஆனால் லௌகீக வாழ்க்கை கொஞ்சமேனும் எஞ்சியிருக்கையில் முழுக்க பகலில் இருந்து விலகி இருக்க இயலாது. கீதையின் சொற்களை திருப்பிப் போடலாம் –யோகி மட்டுமே இரவில் விழித்திருக்க முடியும். ஏதோ ஒன்றை யோகமெனச் செய்பவன்.
ஜெ
----------

அ.சிவபாதசுந்தரம்



உங்களின் இரவைப் படித்த பின் எனக்கு இப்பொழுது இரவுகளெல்லாம் முன்னரைப் போல் இல்லை- சாளரத்தின் திரைச் சீலையை விலக்கி சற்றே வெளியில் பார்க்கிறேன்– ஆகா இரவுதான் எத்துணை ரம்மியமானது!

வானக்துத் தாரகைகள் இரவுக்கு மகத்தான மெருகை அளிப்பது போன்று உங்களது உவமான உவமேயங்கள் உங்களது ‘இரவு’க்கு.– எப்படித்தான் எங்கிருந்துதான் அவற்றை வேண்டியபடி வரவழைக்கறீர்கள்?
யட்சி யாரை வசியப் படுத்துவாளோ தெரியாது– நீங்கள் நிச்சயமாகத் தமிழை வசியப்படுத்தி வசமாக்கிக் கொண்டீர்கள்

sivasakthi



ஜே எம்
இரவும் நிலவும் வெள்ளியில் வார்த்ததாக தெரியும் பிம்பங்களும் இளம் குளிரும் விளக்கின் சுடரும் அதில் ஆடும் நிழல்களும் பரந்து
அழுத்தும் அமைதியும் எல்லாமே அழகுதான். ஆனால் எல்லாவற்றுக்கும் உயிர் கொடுக்கும் பகலவன் இன்னும் சிறப்பு.

சரியா??

சிவா சக்திவேல்
--------

எந்த வாசகர்களுக்காக?

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு

முன்பு வாரபத்திரிக்கைகளில் வந்த தொடர்கதைகள் போல் 24 அத்தியாயங்களுடன், ஒவ்வொரு பகுதியின் முடிவில் ஒரு சிறு திருப்பத்துடன் அமைந்த இரவு குறுநாவல் ஒவ்வொரு நாளும் இரவு சரியாக 12 மணிக்கு பதிவெற்றம் செய்ததிலிருந்து நீங்கள் இக்கதைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளமுடிகிறது.

ஆனால் ‘முற்றும்’ வருவரை காத்திருந்து முழுவதும் ஒரே மூச்சில்தான் படித்து முடித்தேன். எங்குமே தோய்வில்லாமல் அடர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. நிறைய எழுதுவதை நீட்டி எழுதுவதாக சிலர் சொல்வதுண்டு. இந்த கதையில் எந்த பகுதியுமே தேவையில்லை என சொல்லமுடியாது. அப்படி அதிகம் அல்லது தேவையில்லை என எவரேனும் கூறினால் அது அவரின் அனுபவ குறைவையே குறிக்கும் என நினைக்கிறேன்.

வாசிப்பின் ஊடேயே கதை எங்கோ திருப்பம் கொள்ளப்போகிறது என்ற நினைப்போடே வாசிக்க முடிந்தது. இதுவே இக்கதையின் மிகப்பெரியா வெற்றியாக நினைக்கிறேன். கமலாவின் இறப்பிற்கு பின்னால் சற்று நாடகத்தன்மை கொண்டாலும், வர்ணணைகள், சித்தரிப்புகளை காணும்போது ஆழ்மனதின் மிகப் பக்கத்தில் நின்றே கதை முழுவதும் எழுதியிருக்கிறீர்கள் என தோன்ற வைக்கிறது. வாசகர்களையும் பக்கத்தில் அழைத்துவந்து உவகைகொள்ள வைத்துவிட்டீர்கள். மறக்கவே முடியாதபடி மனம் முழுதும் நிரம்பிவழிய வைத்துவிட்டீர்கள். இதற்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.

நுண்ணிய பகுதிகளை மனஎழுச்சியோடு எழுதிய இடங்களை, பல இடங்களை தவறவிட்டாலும், நாங்களும் கொண்டோமென உங்களுக்கு சொல்வதில் சற்று பெருமையாக உள்ளது, இதோ சில:

அந்தப்படிமங்கள் வழியாக அவர் உத்தேசிப்பதைத்தான் சொல்கிறாரா அல்லது அந்தப்படிமங்கள் அவரை யானைபோலச் சுமந்துகொண்டுசெல்கின்றனவா?

ஒரு முழுக்கச்சேரி முடிந்தபின்னர் உறையிடாமல் வைக்கப்பட்டிருக்கும் தம்புரா போன்று என் அகத்தை உணர்ந்தேன்.

தான் சொல்லும் விஷயங்களில் அபாரமான நம்பிக்கை கொண்டவர்களிடமிருந்து மனதை விலக்குவது எளிதல்ல.

இந்த ஒருநாள்தான் நான் யாரென்பதை எனக்குக் காட்டும். என்னை பிறிதொருவர் வசியம் செய்ய முடியுமா என்று நானே அறியும் நாள் இது.

ஏஸியின் உறுமலைக் கேட்டேன். அதை கடலோசை என்று எண்ணியது என் மனம்.

இமைகள் சிறிய குருவியொன்றின் சிறகுகள் போலச் சரிந்திருந்தன.

பிரச்சினைகள் இல்லாத சலிப்பில் இருந்து வெல்ல திரும்பவும் தவறுகளுக்குச் செல்வான்.

நீலிமாவை என் உடலின் எல்லா மயிர்க்கால்களாலும் உணர்ந்தபடி அவளைப் பார்க்காமல் தாமஸை நோக்கி பார்வையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

எட்டாம் வகுப்பு மாணவனை நீங்கள் ஏழாம் வகுப்பில் உட்காரச் செய்ய முடியாது. அவன் உடம்பு கூசும்.

பலசமயம் மனிதனுக்கு துன்பம் தேவைபப்டுகிறது. வலி தேவைப்படுகிறது. அவமானம் தேவைப்படுகிறது. தேடிப்போய் அவற்றை அடைபவர்கள் உண்டு

நான் ”ஷட் அப்…” என்று கடுமையாக சொல்ல அவள் ஒரு கணம் யார் இவன் என்பதுபோல என்னை வெறித்துப்பார்த்தபின் அமர்ந்துகொண்டாள்.

பெண்ணை விரும்பக்கூடிய எவரும் அவளைப் பார்த்ததுமே அழகாக இருப்பதாகச் சொல்ல மாட்டார்கள்.

பிளேடின் லேசர்செதுக்கிய கூர்நுனியைப் பார்ப்பதுபோல ஒரு மெல்லிய பதற்றம் அவளைப் பார்க்கும்போது ஏற்பட்டது

ஆனால் என் பழைய உலகுக்கு என்னால் செல்ல முடியாதே. பழைய இடங்களுக்கு மட்டும்தானே செல்ல முடியும்?

இந்த முட்டாளை விட்டு அவள் சோரம்போகாமலிருந்தால்தான் ஆச்சரியம் என்று நினைப்பீர்கள்.

ஆழமான மனநெருக்கடிகளுக்கு உள்ளானவர்கள் புறத்தோற்றத்தில் ஏதேனும் மாற்றத்தை அடைவதை அப்போது நினைவுகூர்ந்தேன்.

“மனநிலைகளை ஊகிக்க முடியும் ·பாதர். மனநிலை மாற்றங்களைத்தான் ஊகிக்க முடியாது”

இது ஒரு சாம்பிளுக்குதான் வேறுசில பகுதிகளை சொல்ல பாரா முழுவதும் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதால் அவற்றை விட்டுவிட்டேன்.

கடைசி அத்தியாயத்தை தாமஸுக்கு சொல்வதாக அமைத்திருப்பது கதைகூறும் உங்கள் திறமையை காட்டுகிறது.

கடைசியாக‌ இப்படி ஒரு கதை எழுதியமைக்கு, வாசகர்களின் சார்பாகவும், என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.



அன்புடன்.

கே.ஜே.அசோக்குமார்.


அன்புள்ள ஜெ,

இரவு என்னும் கதையை வாசித்து முடித்துவிட்டு இதை எழுதுகிறேன். நிறைய இடங்களை நாலைந்து முறை வாசித்தேன். அதன்பின்னர்தான் என்ன சொல்லவருகின்றீர்கள் என்பது எனக்கு புரிந்தது. உதாரணமாக ஒரு வர்ணனை. சாதாரணமாக வரக்கூடியது.

”ஐம்பதுக்கும் மேலான ஆடுகளை அங்கே அன்று வெட்டினார்கள். பீச்சிய குருதி தரையில் தெறித்து அதன் மீது மனிதர்கள் நடந்து நடந்து கோயில் முழுக்க ரத்தத்தின் பச்சை வீச்சம். பெண்கள்கூட அந்தப் பச்சைக் குருதியை தொட்டு நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டார்கள். வெட்டப்பட்ட ஆடுகள் வரிசையாக தூக்கி கிடத்தப்பட்டிருந்தன. குருதி படிந்து உலர்ந்து திரிதிரியாக ஆன அவற்றின் சருமம் மீது ஈக்கள் ரீங்கரித்தன. கருவறைக்குள் பளபளக்கும் கிரீடமும், செம்பட்டும், வெறித்த விழிகளுமாக காளி அமர்திருந்தாள்”

இதிலே ‘குருதி படிந்து உலர்ந்து திரிதிரியாக ஆன அவற்றின் சருமம்’ என்ற வரி என்னை வெளியே தள்ளிவிட்டது. அதேமாதிரி ‘பச்சை வீச்சம்’ என்ற வார்த்தை. அது புதிதான வார்த்தை. ஆனால் ரத்த கவிச்சியை அது சொல்லிவிட்டது. வெட்டப்பட்ட ஆட்டின் சடலத்தை கண்முன்னே கண்டேன். இப்படி நீங்கள் எழுதிக்கொண்டே செல்கிறீர்கள்.

இந்த அளவுக்குச் செறிவாக எழுதினால் அதை வாசகர்கள் உள்வாங்க முடியுமா? இப்படி எழுதுவதனால் என்ன ஆகிறது என்றால் கதைக்கு வெளியே நாம் வந்துவிடுகிறோம். கதையை ஒரே ஓர்மையாக வாசிக்க முடிவதில்லை. வரிவரியாக நினைவு இருக்கும்போது நமக்கு கதையின் ஓட்டம் கிடைப்பதில்லை.

இதேபோல எழுதி தள்ளுகிறீர்கள். நீங்கள் எழுதிய ஈராறு கால்கொண்டெழும் புரவி கதையே இன்னும் வாசித்து சர்ச்சை பண்ணி முடிக்கவில்லை. அதற்குள் இது மூன்றாவது கதை. இது கொஞ்சம் மூச்சு முட்டுகிறது.

தப்பாக எடுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். உதாரணமாக இங்கே ஒரு நண்பர் இரவு கதையிலே சரவணனின் ஈடிப்பஸ் காம்பிளக்ஸ் இருக்கிறது என்று சொன்னார். அவன் அம்மாவைப்பற்றி நினைக்கும் இடங்களை அவர் சுட்டிக்காட்டினார். அவன் அதைப்பற்றி முக்கர்ஜி பேசும்போது கத்துகிறான். நான் அதை கவனிக்கவே இல்லை. காரணம் வேறு விஷயங்களை நான் கூர்ந்து வாசித்தேன்

வாசகனை கருத்திலே கொள்ளாமல் எழுதிக்கொண்டே போவது நல்லதா என்ன?

எஸ்.சுப்ரமணியம்

அன்புள்ள சுப்ரமணியம், அசோக் குமார்,

தங்கள் வாசிப்புக்கு நன்றி

என்னுடைய கதைகள் எனக்கு இணையானவர்களுக்காக அல்லது என்னைவிட மேலானவர்களுக்காக எழுதப்படுபவை. மிகப்பெரும்பாலும் அவர்களே வாசிக்கிறார்கள். மற்றவர்கள் அதிகபட்சம் ஒரு அத்தியாயத்தில் குழப்பமும் எரிச்சலும் அடைந்து விலகி எதையாவது சொல்ல ஆரம்பிக்கிறார்கள். அவர்களை நான் கடந்த 20 வருடங்களாகக் கண்டு வருகிறேன் என்பதனால் தெளிவாகவே புரிந்துகொள்வேன்.

பெரும்பாலும் இவர்கள் கடினமான நடை என்பார்கள். என்னுடைய நடை மிக எளிமையானது என்பதை வாசகர்கள் உணர முடியும். சிறிய சொற்றொடர்கள், சிறிய பத்திகள் கொண்டவை. புரியவேண்டும், கச்சிதமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதப்படுபவை. நடை சிக்கலாக தோற்றம் அளிப்பது ஏனென்றால் எதுவுமே சுருக்கமாக, எது சொல்லப்பட வேண்டுமோ அதை மட்டுமே சொல்லி எழுதப்பட்டிருக்கும் என்பதுதான். ஆகவே ஒருவரிக்குப் பின் அடுத்தவரி அதே முக்கியத்துவத்துடன் வரும். ஒவ்வொரு வரியையும் வாசிக்கும் வாசகர்களே வாசித்துச் செல்ல முடியும், அவர்களுக்கே அது கிடைக்கும். கட்டுரைகளும் அப்படித்தான்.

அத்துடன் பொதுவாக நான் இதழியலில் வழக்கமாக எழுதப்படும் உத்திகள் , வழக்கமான சொற்றொடர்களை எழுதுவதில்லை. சொல்வதற்கான உதாரணமோ உவமையோகூட புதிதாக இருக்க வேண்டுமென்றே நினைப்பேன். ஆகவே ஒவ்வொரு வரிக்காகவும் மீண்டும் வாசித்தாகவேண்டும், சுயமாகக் கற்பனை செய்தாகவேண்டும்.

கடைசியாக, நான் மன ஓட்டத்தின் நுட்பமான தருணங்களைச் சொல்ல விரும்புகிறேன். மனிதமனம் எப்படி ஒன்றில் இருந்து ஒன்றுக்கு தாவிக்கொள்கிறது, எப்படி ஒன்றை மறைக்க இன்னொன்றை பயன்படுத்துகிறது, எப்படி எதிர்பாராத திருப்பம் அடைகிறது என்று. இது எப்போதுமே எழுத்தாளனுக்குப் பெரிய சவால். மரணம் போன்ற ஒரு பெரும் நெருக்கடியில் மனித மனம் என்ன செய்யும், என்னென்ன வகையில் கனவுகளையும் கற்பனையும் கையாண்டு அதைக் கடந்து வரும் என்பதெல்லாம் சாதாரண மொழியில் சொல்ல முடியாது. ஒன்றைச் சொல்வதற்குள் கூடவே நூறு விஷயங்கள் சேர்ந்து வரும்.

அவற்றை வாசிக்கும் வாசகனும் எங்கோ அவற்றை உணர்ந்திருக்க வேண்டும். எங்கோ அதே போல அகநெருக்கடிகளைச் சந்தித்திருக்க வேண்டும். அதைவிட, அந்த அகநெருக்கடிகளை கூர்ந்து கவனித்தும் இருக்க வேண்டும். அப்படிக் கூர்ந்து கவனித்த ஒருவரால் இந்த வரிகளை தொட்டு தன் அனுபவமாக ஆக்க முடியும்.

என்னுடைய எழுத்துக்கள் அளவில் அதிகம் என்று சொல்பவர்களும் சிலர் உண்டு என நான் அறிவேன். நான் முக்கியமாக நினைக்கும் பேரிலக்கியவாதிகள் அனைவருமே என்னைவிட அதிகமாக, என்னைவிட தீவிரமாக எழுதியவர்கள். ஒன்ற்றுக்கும் மேற்பட்ட தளங்களில் எழுதியவர்கள். காரணம் அவர்களுக்கு ஒரு கேள்வி, ஒரு தேடல் உண்டு. அதை அவர்கள் எல்லா ஞானத்தளங்களிலும் தேடுகிறார்கள். அவர்களில் பலர் எழுதியதையே மீண்டும் மீண்டும் எழுதியவர்கள். எழுதித்தீராதவர்கள்.

உதாரணமாக தஸ்தயேவ்ஸ்கி எல்லாவற்றையும் பல தடவை எழுதியிருக்கிறார். கதைமாந்தர்களை கதைச் சந்தர்ப்பங்களை மையப்பிரச்சினையை. வேறு வேறு கோணங்களில், அவ்வளவுதான். அவரை அவரது தீவிரத்தைப் பகிர்ந்துகொண்டுதான் வாசிக்க முடியும். அந்த தீவிரமில்லாதவர்கள் கரமஸோவ் சகோதரர்களை முடிக்க முடியாது. அதில் உள்ள எல்லாமே ஏற்கனவே அவரால் எழுதப்பட்டவை என்றறிந்தும் அதைப்படிக்க இன்னும் தீவிரம் தேவை.

என்னுடைய எழுத்து என்னுடைய தேடலின் தீவிரத்தாலேயே ஒழிய எவர் கூட வருவார் என்ற கணக்குடன் எழுதப்படுவதல்ல. ஆனால் தமிழில் மிக அதிகமான தீவிர வாசகர்களால் ஒரு எழுத்துகூட தவறவிடப்படாமல் வாசிக்கப்படும் எழுத்தாளன் இன்று நானே. இதை எவரும் தங்கள் சுற்றத்தை கவனித்தாலே அறியலாம்.

அவர்களில் ஒருதரப்பினர் என்னை நிராகரிக்க முயல்வார்கள். சிலர் என்னை வெறுக்கவும் கூடும். அது அவர்களின் அறிதல், அவர்களின் நுண்ணுணர்வு சார்ந்தது. ஆனால் என்னுடன் அவர்கள் இடைவெளியில்லாமல் அந்தரங்கமாக உரையாடிக்கொண்டும் இருப்பார்கள். என்னிடம் சொல்ல நான் எழுதிய அளவுக்கே சொற்களை அவர்களும் வைத்திருப்பார்கள்.

எந்த எழுத்தாளனும் தன் சூழலில் அவ்வாறே பங்களிப்பாற்ற முடியும். தீவிரத்தாலேயே அவன் உரையாடுகிறான். பாரதியும் புதுமைப்பித்தனும் செயல்பட்ட வருடங்களின் அளவை வைத்துப்பார்த்தால் அவர்கள் எழுதிய அளவு மிக அதிகம். அதிலும் பாரதியின் அளவு விகிதத்தை எந்த தமிழ் எழுத்தாளனும் இன்னமும் தொடவில்லை. அந்த தீவிரமில்லாவிட்டால் நம் காலகட்டத்தின் ஆகச்சிறந்த மனங்களுடன் உரையாட முடியாது.

அத்தகைய வாசகர்களுக்காகவே இவை எழுதப்படுகின்றன. சாதாரண அறிவுத்திறனும் சாதாரண கற்பனைத்திறனும் கொண்டவர்களுக்காக அல்ல. அவர்கள் தங்களுக்கான வாசிப்புகளைச் செய்யலாம். ஒரு சிறு விஷயத்தை நீர்த்து பல பக்கங்களுக்கு எழுதுதல், நேர்ப்பேச்சில் பேசுவதுபோல செயற்கையான விளையாட்டுத்தன்மையுடன் நீர்க்க எழுதுதல் ஆகியவையே இவர்களுக்கு உரிய எழுத்து. அவர்களுக்கா அவ்வாறு எழுதக்கூடியவர்கள் பலர் உள்ளனர். அத்தகைய வாசகர்கள் சொல்லும் குறைகளை அல்லது கஷ்டங்களை நான் பொருட்படுத்துவதில்லை.

நீங்கள் வாசித்திருக்கிறீர்கள், கூடவே வருகிறீர்கள். அதுவெ போதும்.

நன்றி

ஜெ

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

வணக்கம். நலம்தானே.

உங்கள் இணையத்தளப் பக்க்ம போவதில்லை என்ற பிடிவாதத்துடன் இருப்பேன். எப்படியும் இரண்டு வாரம் செல்வதற்கிடையில் மறுபடியும் மனம் தளர்ந்து உள்ளே நுழைந்துவிடுவேன். ‘இரவு’ முழுவதும் படித்துவிட்டேன். நாவல் உச்சத்தை தொட்டுவிட்டது. இனி எப்படி முடிந்தாலும் எனக்கு பரவாயில்லை. முடியாமல் இப்படியே நின்றால்கூட ஒன்றுதான். அது உன்னதத்தை அடைந்துவிட்டது. நான் எத்தனையோ நூறு ஆங்கில நாவல்களும் தமிழ் நாவல்களும் மொழிபெயர்ப்பு நாவல்களும் படித்திருக்கிறேன் ஆனால் இப்படியான ஒரு கற்பனையை எங்கேயுமே படித்ததில்லை. அருமையான கவிதை தலைப்புகளும் அதற்கு ஏற்ற மாதிரி புகைப்படங்களும் நம்பமுடியாத தரத்தில் வருகிறது. மற்றவர்களுக்கு ஒருவாரம் எடுக்கும் வேலையை ஓரிரு மணிநேரத்தில் செய்து முடித்துவிடுகிறீர்கள்.

மாப்பஸான் காலத்தில் அவர் எழுதுவதையெல்லாம் ரோல்ஸ்ரோயும் துர்கனேவும் நீட்சேயும் படிப்பார்களாம். செக்கோவ் படிக்கத் தயங்குவார். அவருடைய கலை நேர்த்தி செக்கோவை ஆட்டிவிடும். அவரால் ஒன்றுமே படைக்கமுடியாமல் போகும். அந்த நிலைதான் எனக்கும். வாசிப்பும் எழுத்தும் தடைபடுகிறது. ஆனால் உங்கள் எழுத்து தரும் கலை அனுபவத்துக்கு ஈடு ஒன்றுமே இல்லை.

அன்புடன்

அ.முத்துலிங்கம்

அன்புள்ள அமு சார்,

நலம்தானே?

இவௌ வாசித்தீர்கள் என்றறிந்து மகிழ்ச்சி. ஒரு சிறு சுய அம்சம் கூடும்போதுதான் படைப்புக்கு தீவிரம் வருகிறது. தனிப்பட்ட முறையில் நானும் ஒரு இரவு உபாசகன். இன்றும் இரவின் எழிலை விரும்புபவன். சமீபத்தில் ரிக் வேதத்தில் ராத்ரி சூக்தங்களை வாசித்தபோது இரவின் எழில் பற்றி பரவசமாக எண்ணிக் கொண்டேன். ஆனால் அன்றிரவு இன்னொரு எண்ணம். அம்மா அப்பா இறந்த நாட்களில் இதே இரவுகள் பெரும் சித்திரவதையாக இருந்திருக்கின்றன! ஆக, எது கனவோ அந்த தளம் கொடுங்கனவாகவும் ஆகலாம். அதையே எழுத எண்ணினேன். தத்துவார்த்தமான ஒரு தேடல். அதை வர்ணனைகள் மூலம் அழகாக கொடுப்பதற்கான முயற்சி

நன்றி

எழுதியவர் : (22-Mar-18, 5:06 am)
பார்வை : 302

சிறந்த கவிதைகள்

மேலே