உண்டிக்கணி விருந்தோடு உண்ணலே – அணியறுபது 26
நேரிசை வெண்பா
பொய்கைக் கணிநீர்ப் பொலிவே; புயலியைந்த
பெய்கைக் கணிவிளைவு பேணுகையே; - செய்தமைந்த
உண்டிக் கணிவிருந்தோ(டு) உண்ணலே; உண்ணுமுன்
பண்டிக் கணிபசியே பார். 26
- அணியறுபது, கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்
பொருளுரை:
இனிய நீர்ப்பெருக்கின் பொலிவு பொய்கைக்கு அழகாகும்; விளைச்சலின் வளம் மழைக்கு அழகு; விருந்தோடு உண்ணுதல் உணவுக்கு அழகு; பசித்துப் புசித்தல் வயிற்றுக்கு அழகு.
வேண்டிய காலத்து வேண்டிய அளவு காற்றுடன் கூடிய மழைபொழிதல் விளைச்சளை வளமாக்கும். ஆகவே இயைந்த பெயலமைந்த புயல் இங்கே எண்ண வந்தது.
வந்த விருந்தினரின் பசியை நீக்குவது புண்ணியமாதலால், விருந்துடன் உண்பது திருந்திய மனை வாழ்க்கையின் சிறந்த கடமையாயிற்று என்பதை ஆசாரக்கோவையும், திருக்குறளில் விருந்தோம்பலும் வலியுறுத்துகிறது..
விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் கொடுத்தல்லா லுண்ணாரே யென்றும்
ஒழுக்கம் பிழையா தவர். 21 ஆசாரக்கோவை
விருந்தினரும் மிக மூத்தோரும் பசுக்களும் சிறைகளும் பிள்ளைகளும் என்று சொல்லப்பட்ட இவர்கட்கு உணவு கொடுத்தல்லது உண்ணார் என்றும் ஒழுக்கம் பிழையாதார். விருந்தினர் முதலியவர்கட்கு உணவு கொடாமல் தாம் முன்னர் உண்ணலாகாது.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. 82 விருந்தோம்பல்
விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து. 944 மருந்து
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும். பசித்து உண்பதனால் தேக சுகமும், விவேகமும் விளைகிறது.