சாதிக்கு ஒரு வீதியா

( முன்னுரை: இந்த கட்டுரையை சில வருடங்களுக்கு முன் ஓரூ கனடா தமிழ் பத்திரிகைக்கு அனுப்பியபோது ஆசிரியர் பிரசுரிக்க மறுத்துவிட்டார் . இந்தக் கட்டுரை சிலருக்குப் பிடிக்கலாம், சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்.)

அண்மையில் இந்தியாவில் இருந்து வெளி வரும் இணையத் தளச் சஞ்சிகையொன்றில் வெளிவந்த திருமண விளம்பரங்களை நான் பார்க்க நேரிட்டது. ஒவ்வொரு விளம்பரத்திலும் மணமகன், மகளின் சாதி முக்கியமாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் வேறு சாதியினர் தொடர்பு கொண்டு நேரத்தை வீணாக்காதீர் என்று மறைமுகமாக எச்சரிக்கை செயப்;பட்டுள்ளது. கறுப்பு இனத்தவரின் இருதயத்தை ஒரு வெள்ளையினத்தவனுக்கு பொருத்தும் காலம் இது. அந்த காலக் கட்டத்தில் இது ஒரு வகை இனத் துவேசம் என்றே கூறலாம். ஈழத்தமிழர்களிடம் இந்த வேற்றுமை முற்றாக குறையாவிட்டாலும் தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளது என்றே கூறலாம். ஆனால் இன்றும் ஈழத்தில் கலியாணம் பேசிப் போகும் போது மணமகனோ அல்லது மணமகளோ எந்த இடம் என்று கேட்பது வழமையாக இருந்து வருகிறது. இங்கு இடம் என்பது பகுதி அல்லது சாதி அல்லது தெரு அல்லது ஊரைக் குறிக்கும்.
சில வீதிகளில் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஆட்சிபுரிந்த தமிழ் அரசர் வைத்த சாதிப் பெயர்கள் இன்றும் ஒட்டிக்கொண்டே இருக்கிறது. அதே போன்று சில ஊர்களில் குறிப்பிட்ட சாதி மக்கள் வாழ்ந்த காரணத்தால் தரத்துக்கேற்ப, அவ்வூர்கள் திருமணச் சந்தையில் மதிப்பை பெற்றன. ஊரக்கு ஊர் பேச்சு வழக்கில் வித்தியாசங்களுண்டு. கலியாணத் தரகர்களும் அதையறிந்தே நடப்பது வழக்கம்.

சாதிகளும், வீதிகளும்.
யாழ்ப்பாண மாநகரசபையையும், யாழ் குடாநாட்டையும் பொறுத்த மட்டில் கொட்டடி , ஆரியகுளத்தடி, அரசவெளி, அரியாலை, பாஷையூர் என்றவுடன் முகம் சுழிப்போரும் உண்டு. இந்த துவேசமுள்ள நோக்கு அவர்கள் மனதில் மரபு வழியாக வந்த பதிவாகும். ஈழப் போரினால் பல சாதி மக்கள் பலவிடங்களுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர். ஆகவே முன்பு நிலவிய சாதி வழி வந்த ஊர் பாகுபாடு இன்றும் சரியென நினைப்பது மடமை. இருபது வருடத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை விட்டு புலம் பெயர்ந்து மேற்கத்திய நாடுகளுக்குச் சென்றவர்கள் திரும்பவும் தன் வீட்டைப் பார்க்க ஊருக்குப் போனால் அவ்வூர் வாசிகள் அனைவருமே புதுமுகங்களாக இருப்பதை அவதானிக்முடியும். எவர் எந்த சாதியைச் சோந்தவர் என்று கண்டுபிடிக்க முடியாது. ஆனால் தட்டார் தெரு , சாண்டார் தெரு, சேணியர் தெரு, கொல்லன் கலட்டி, பறையன் கலட்டி, அம்பட்டன் தெரு ( இருபாலை) சிவியார் தெரு, செட்டித் தெரு, கோவியத் தெரு, வெள்ளாளன் தெரு, பறங்கித் தெரு, பறவர் குளம், முக்கியர் தெரு, வண்ணார்பண்ணை, குசவன் குளத்தடி, பண்டாரக் குளத்தடி, ஆரியகுளத்தடி, கைக்குல சந்தை, தச்சன் தோப்பு போன்ற சாதியுடன் இணைந்த பெயர்கள் இன்றும் மறையாமல் நிலைத்து நிற்பதைக் காணமுடியும். அவ்வளவுக்குச் சாதி ஈழத் தமிழர் கலாச்சாரத்துடன் கலந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது.

நல்லூரில் சாதிப் பெயரில் வீதிகள்.
நல்லூர் நகரத்தில் ஒரு காலத்தில் ஒவ்வொரு சாதியினர் வாழ்வதற்கு ஒரு வீதி ஒதுக்கப் பட்டிருந்தது. அதன் காரணமாக சாதிப் பெயரில் வீதிகள் தோன்றின. கொழும்பில் கூட செட்டித் தெரு , சோனக தெரு, மலேயர் தெரு என்று பெயர்களுண்டு. இது தமிழ்நாட்டிலும் இருந்து வருகிறது. அக்கிரகாரம் என்றாலே கோயில் அருகே பிராமணர் வாழும் பகுதி என்பதைக் குறிக்கும். அக்காலத்தில் நல்லூரில் அந்தணர், செட்டியினத்தவர், வேளாளர், கன்னார், தட்டார், தச்சர், கொல்லர், சிவியார், உப்பு வணிகர், கைக்கோளர், சாயக்காரர் போன்றோர்க்கென ஒவ்வொரு தெருவாக 64 தெருக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டது. தீண்டத்தகாத தாழ் சாதியினரான நளவர், பள்ளர் , பறையர் , அம்பட்டன், வண்ணான் , துரும்பர் போன்றோருக்கு வீதிகள் ஒதுக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் சுகாதாரமே. இவர்கள் ஒதுக்குப் புரமான புறச்சேரிகளில் வாழ்ந்தனர். அவர்கள் செய்யும் தொழிலும், இயல்பிலேயே சுகாதாரம் குறைந்தவர்களுமானவர்களாக இருந்த படியால் தீண்டத் தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப் பட்டனர். அவர்களுக்கு அதை உணர வைத்து அறிவை ஊட்ட முயலவிலலை. காரணம் அவர்கள் சிலசமயம் தம்மையும் மிஞ்சிவிடுவார்களோ என்ற உயர் சாதியினரின் பயம் தான். சில அரசியல் கடசிகளுக்கு அது போதும். ஒதுங்கி புறக்கணிக்கப்பட்டு வாழ்ந்த இவர்கள் அனேகர் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவாளர்களாக மாறினார்கள். எழுத்துத் திறமையுள்யவர்கள் தமக்கென இலக்கிய வட்டமாகிய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தையும் அமைத்து சாதி வேற்றுமைக்கு எதிராக எழுத்துவடிவில் போர் தொடுத்தனர். அவர்களின் எழுத்துகளில் விரக்தி தெரிந்தது. இவர்களில் ஒரு பகுதி கத்தோலிக்க, பௌத்த மதமாற்றத்துக்கு இரையாகினர். தசாப்தங்களுக்கு முன்; புத்தூரில இந்த மதத்தில் இருந்து பௌத்த மததத்துக்கு நடந்த மதமாற்றம் இதன் அடிப்படையில் நடந்தது. இந்துக் கோயிலுக்குள் மற்றைய சாதியினரைப் போல் உள்ளே சென்று வணங்கும் சுதந்திரம் தடைப்பட்டதே இதற்கு ஒரு காரணமாகும். கரையோரப் பகுதிகளில் வாழும் கரையார் பரவர் இனத்தவர் அனேகர் கத்தோலிக்கராக மாறியது இக்காரணத்தாலேயே. படிப்பு வசதி குறைவு , பொருளாதாரத்தில் பின்னடைவு ஆகியவையும் இவர்;கள் கத்தோலிக்க மதமாற்றத்துக்கு இரையாக உதவியது.

துரும்பர்
துரும்பர் என்பவர்கள் தினம் தோறும் அக்காலத்தில் வீதிகளில் உள்ள குப்பை கூழங்கள் , மலசலம் ஆகியவற்றை துப்பரவு செய்பவர்கள். இரவில் கைகளில் பந்தம் ஒன்றையும் எடுத்துச் செல்வார்கள். ஒரு துரும்பைக் கூட அவர்கள் வீதியில் விட்டு வைக்காத காரணத்தால் துரும்பர் என்று பெயர் வந்திருக்கலாம்;. அல்லது சாதிகளில் அவர்கள் சாதி முக்கியமானதாக கருதாதபடியாலும் துரும்பென மதிப்பு பெற்றிருக்கலாம். ஆனால் எது எவ்வாறு இருப்பின் அவர்கள் செய்த தொழில் ஊரின் சுகாதராத்தையும் நோய்கள் வராமலும் காக்க வல்லது. அதனால் அவர்கள் சேவை ஊருக்குத் தேவை. அக்காலத்தில் அவர்கள் பகல் நேரங்களில் வீதிகளில் நடமாடுவது தடைசெய்யப் பட்டிருந்தது தமிழ் அரசர் காலத்தில் இவ்வேற்றுமை தோன்றினும் முடியாட்சி முடிந்தபிறகும் தொடர்ந்து இருந்தது. பள்ளர், நளவர் , பறையருக்கு வஸ்திரம் வெளுக்கும் தொழிலையும் துரும்பர் அக்காலத்தில் செய்து வந்தனர். இரவில் தொழில் செய்யும் போது கையில் கொண்டு செல்லும் பந்தத்தின் சூட்டினிலே அவர்கள் உடம்பில் உள்ள அசுத்தம் நீங்குவதோடு, அவர்கள் கையிட்டு வாரும் அழுக்குக் குப்பைகளில் இருந்தெழும் துர்நாற்றம் அவர்களை பாதிக்காமல் இருக்க உதவும்.

யாழ்ப்பாணத்தில் பல சாதி மக்கள்.
சைமன் காசி செட்டி, சிலோன் கஸட் என்ற 19ம் நூற்றாண்டு வெளியீட்டில் பின் வரும்; சாதியினரை யாழ்ப்பாணத்தில் அடையாளம் கண்டுள்ளார். உயர் சாதியினராக கருதப்படும் பிராமணர்கள், செட்டிகள்( வணிகர்), வேளாளர் ( நில உரிமையாளர்கள்), இடையார், மடப்பள்ளி ( சமையல்காரர்), அகம்புடையீர் ( விவசாயிகள்), மறவர், மீன்பிடி தொழில் செய்பவர்களான பரவர், கரையார் , செம்படவர், பள்ளிவிளி, திமிலர், முக்குவர் , புகையிலை வியாபாரம் செய்யும் தனக்காரார், கள்ளிறக்கும் சாணார் , சுண்ணாம்பு எரிக்கும் கடையர், மேலதிகாரிகளின் பல்லாக்கை ஒரு காலத்தில் காவிய சிவியார் , கோவியர் , நெசவு வேலை செய்யும் சேணியர், கள்ளு இறக்கும் நளவர் , பறை மேளம் அடிக்கும் பறையர், பள்ளர் ஆகிய 22 சாதியினராகும். வீட்டு வெலை செய்யும் குடிமகன் என அழைக்கப்படும பத்து சாதிகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் சவரம் செய்யும் நாவிதர், கொல்லர் , தட்டார் ,பித்தளை வேலை செய்யும் கன்னார் ( கன்னா திட்டி என்ற பெயர் இதில் இருந்து உருவாகியிருக்கலாம்), மரவேலை செய்யும் தச்சர் , சிற்ப வேலை செய்யும் சிற்பர், தையல் வேலை செய்யும் பாணர்;; , எண்ணை வியாபாரம் செய்யம் வாணியர், குசவர், வஸ்திரங்களை கழுவும் வாணர் எனப்படும் வண்ணார்.

வேளாளர்.
1365ல் விஜயநகர் சக்கிரவர்தியின் மந்திரி கம்பண்ண உடையார் மதுரையை ஆண்ட போது தனக்கு எதிராக சிற்றரசர்கள் போர் தொடர்ந்தால் தனது தமிழ் அதிகாரிகள் அவர்களுடன் சோந்து தனக்கு எதிராக போர் புரிவார்களோ என்ற பயத்தில் அவர்களை பதிவியிலிருந்து நீக்கினார். பதவியை இழந்த அவர்கள் இலங்;கைக்குப் போய் யாழ் குடாநாட்டில் பல பகுதிகளில் குடியேறினார்கள். இவர்களில் பாண்டிய நாட்டின் பொன்பற்றியூர் வேளாளன் மழவன், காவிரியூர் ( ஒரு காலத்தில் காவரிப்பூம்பட்டினம் எனப்பட்டது) வாவிக்கை வேளாளன் செண்பக மாப்பாணனும் , காயில் நகர் வேளாளன் பூப்பண்ணனும் , கனகராயன் செட்டியும், கோவலூர் வேளாளன் பேராயிரமுடையானும், புத்தூர் வேளாளன் தேவராஜேந்திரனும், தொண்ட மண்டல வேளாளன் மரபில் வந்த மண்ணோடு கொண்ட மதுலியும் திருநெல்வேலி , மயிலிட்டி, இணுவில் , தௌ;ளிப்பளை , பச்சிலைப்பளை, புலோலி, தொல்புரம் . இருபாலை, கண்டி பகுதிகளில் பொய் குடியெறினர். சேயூர் இருமரபுந்துயய தனிநாயக் என்ற வேளாளக் குடம்பம் நெடுந்தீவில் குடியேறியது. இந்;த மரபு வழி வந்தவரே தனிநாயக அடிகளாக இருக்கலாம் என்பது பலர் கருத்து. இவ்வேளாளர்கள் பள்ளர் குடிகளை தாம் வந்து குடி யேறும் போது தமக்கு சேவகம் புரிய அடிமைகளாகக் கொண்டு வந்து குடியேற்றினர். சில ஊர்களில் பள்ளர் வேளாளர் வாசஸ்தளத்தைச் சுற்றி வாழத் தொடங்கினர் என முதலியார் செ இராசநாயகம் யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்காலத்தில் மறவர்கள் குடி யேறி ஆட்சி புரிந்த பகுதி மராட்சி என பெயர் பெற்றது. இவர்கள் போர் வீரர்களும் படைத் தளபதிகளுமாவார். காலப்போக்கில் மராட்சி வடமராட்சி, தென்மராட்சி என இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டது. வீரமாணிக்கன் தேவன் என்ற மறவர் குல படைத் தலைவன் பருத்தித்துறைப் பகுதியில் வந்திறங்கிய துறை இன்றும் வீரமாணிக்கன் தேவன்துறை என அழைக்கப் படுகிறது. அவன் மணமுடித்தது ஒரு சிங்களப் பெண்ணை. கரப்பிட்டி வன்னியர் கரப்பிட்டியிலும், காக்கை வன்னியன் ஊர்காவற் துறையிலும் வாழ்ந்தனர். இப்படைத்தலைவர்களின் மெய்காப்பாளர்கள் அக்காலத்தில் கத்தகட்டிகளென்று அழைக்கப்பட்ட சாணார் சாதியினர் என்கிறது சரித்திரம். அப்போது இவர்கள் பண்டத்தரிப்பு, மாகைப்பிட்டி போன்ற இடங்களில் எண்ணெய் வியாபாரமும் உழவுத் தொழிலும் செய்து வாழ்ந்தனர்.

கோவியர் மூதாதையர் சிங்களவரா?
கோவியர் எனப்படுவோர் சிஙகள விவசாயிகள் என்பது ஒருசாரார் கருத்து. சிங்களத்தில் “கொவியா” என்பது விவசாயம் செய்பவரை குறிக்கும். இவர்கள் அகடகாலத்தில் வடபகுதி தமிழர்களுடன் கலந்து வாழந்தனர் என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது. கோபியர் என்ற பெயரில் இந்தியாவில் ஒரு சாதி இருநததை அவதானிக்க முடிகிறது. இவர்கள் இடையர்கள். அதனால் கோவியர் முற்றிலும் சிங்கள இனத்திலிருந்து வந்தார்கள் என்ற வாதம் சரியானதில்லை. இது ஊராத் துறை பன்றித் துறை என்ற சிங்களப் பெயரில் இருந்து தோன்றியது என்ற வாதம் போன்றது. தமிழ் தலைவர்கள் தென்னிந்தியாவில் இருந்து வரும் போது இவர்களும் அவர்களின் வீட்டு வேலைகளைச் செய்ய, கூடவே வந்திருக்கலாம். இவர்களுக்கு மற்ற சாதியினரை விட சில உரிமைகள் கூடுதலாக வழங்கப் படுகிறது. மண விழாக் காலங்களில் மணமகன், மணமகள் வீடுகளுக்கு பலகாரம் பழவகைகள் கொண்டு செல்லும் உரிமை கோவியப் பெண்களடையது. போசனப் பந்தியில் கூட அவர்களுக்கு ஒரு தனியிடமுண்டு. கல்யாணத்தின் போது முன் வாசலில் கட்டிய இரு வாழை மர்ங்கள் உள்ள வாழைக் குலைகள் , கலியாணத்தின் பின்னர்; குடிமகனாகிய நாவிதருக்கும் , வண்ணானுக்கும் உரித்தானது. இது மரபு வழிவந்த சம்பிரதாயம். மணமகன் வரும்போது நிலப் பாவாடை விரிப்பது வண்ணானின் பொறுப்பு. அதே போன்று மணமகனுக்கு முகம் சவரம் செய்து மீசையை அழகு படுத்துவது நாவிதர் பொறுப்பு. கலியாண விPட்டில் சமையல் வேலை செய்வது மடைப்பள்ளியினரான பண்டாரிகளின் வேலை. இவ்வாறு சமூகத்தில் ஒவ்வொரு வேலையின் பொறுப்பு ஒரு சாதியினருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அக்காலத்தில். இது இக்காலத்தில் ஒரு திணைக்களத்தில் வேலை செய்பவருக்கு வேலை பாகிர்ந்தளித்து, டைபிஸட், லிகிதர், கணக்காளர் , பியூன் என்று பெயிரிடுவது போலாகும். அதிலும் அந்தஸ்து வேற்றுமையுண்டு

ஆங்கிலேயரிடையே சாதி வேற்றுமை
மன்னர்கள் ஆட்சியில் வளர்ந்த பெரிய பிரித்தானியா சமூகத்தில் சாதி பெயரில் தொழில் கள் தோற்றுவிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களிடையே தொழில் சார்பான பெயர்களுண்டு. உதாரணத்துக்கு Farmer, Clerk, Barber, Carpenter, Shepperd, Smith போன்ற பெயர்களை நாம் அறிந்ததே. அங்கும் உயர் சாதி குறைந்த சாதி என்ற வேற்றுமை இருக்கத்தான் செய்கிறது. உயர் சாதியினரான பிரபுக்களை மூக்குயர்ந்தவர் என வேடிக்கையாக அழைப்பதுண்டு. அவர்கள் திருமணமும் தம் சாதிக்குள்ளே பெரும்பாலும் இடம் பெறும். காலம் சென்ற டயனாவின் திருமணம் இதுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

முடிவுரை
சாதி வேறுபாடு காலப் போக்கில் பல இனத்தவர்களுடன் கலாச்சாரம் இணையும் போது சிறிது சிறிதாகசிறிதாக மாறி வருகிறது. இக்காலத்தில் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பங்களில் பிறதேசத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் சாதி என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு கலாச்சார மாற்றமடைந்துள்ளார்கள். ஆனால் இன்று தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் பல தமிழ் சினிமாப் படங்கள் சாதியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவை. இப்படங்களை இளம் தமிழ் சமுதாயம் பார்க்கும் போது இது என்ன இனத் துவேஷம்?. நாம் வாழும் மேற்கத்திய நாடுகளில், கறுப்பர், ஆசியர், வெள்ளையர், சீனர் என வேறுபாடு காட்டுவதை பெரிது படுத்துகிறோமே அதை விட மோசமானது இது என அவர்களைச் சிந்திக்க வைக்கிறது. இந்த வேற்றுமை மதம்., இலக்கியம் கலையில்கூட பாகுபாட்டை வளர்த்துவிட்டது. அவன் சென்ற பிறவியில் செய்த கர்மாவைப் பொறுத்தது அவன் பிறந்த சாதி என்கிறார்கள் சில மடமையில் ஊறிய மத வாதிகள். மனிதனின் வளர்ச்சியானது சாதியில் இல்;லை சாதனையிலும் முயற்சியிலும் தங்கியுள்ளது. அம்பேத்கார், ஜகஜீவன் ராம் திருவள்ளுவர் போன்றோர் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பல கலப்புத் திருமணங்கள் இப்போது தமிழ் சமூகத்தில் நடைபெறுகிறது. மொழி, மதம், கலாச்சாரத்தால் வேறுபட்ட வேறு இனத்தவரை திருமணம் செய்வதிலும் பார்க்க தமிழ் சமூகத்தில் சாதி பாராமல் ஓரெ மதம், மொழி, கலாச்சாரத்தை பின்பற்றும் ஒருவரை மணம் முடிப்பதில் என்ன தவறு?

ஆய்வு நூல்கள் -
யாழ்ப்பாண சரித்திரம் - முதலியார் செ இராசநாயகம்
யாழ்ப்பாண வைபவ கௌமுதி – க வேலுப்பிள்ளை

எழுதியவர் : =பொன் குலேந்திரன் - கனடா (28-Mar-18, 4:53 pm)
பார்வை : 715

மேலே