முதுமொழிக் காஞ்சி 53
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
வாய்ப்புடை விழைச்சி னல்விழைச் சில்லை. 3
(வாய்ப்புடை வழக்கின் நல் வழக்கு இல்லை)
- இல்லைப் பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் மக்கட்பேறு வாய்த்த கலவிபோலும் கலவியின் நல்ல தில்லை.
பதவுரை:
வாய்ப்பு உடை (ய) - மக்கட்பேறு வாய்த்த,
விழைச்சின் - இணைவிழைச்சு (கலவி) போல்,
நல் விழைச்சு இல்லை -கலவியின் நல்ல தில்லை.
'வாய்ப்புடை வழக்கின் நல்வழக்கில்லை' என்ற பாடம் கொண்டு, சாட்சி முதலியன வாய்த்துள்ள வழக்கைக் காட்டிலும் நல்ல வழக்கு வேறில்லை என்றும் உரைப்பார்.
வாய்ப்பு - பேறு, விழைச்சு - இணைவிழைச்சு - கலவி.
புத்திர பாக்கியம் பெறுதலான கலவியே கலவி.