முதுமையின் அனுபவம்

முதுமையின் அனுபவம்..!
========================


பதிவிரதை என்னனுபவத்தை இங்கே பகிர்கிறேன்
..........பகட்டான வாழ்க்கை தந்தானென் அன்புக்கணவன் *
அதிசயித்துப் பார்க்கிறேனென் கடந்தகால வாழ்வை
..........அனைத்து வசதிகளையும் அனுபவித்து உய்ந்தேன் *
கதியேயென் கணவன்தானென இருந்தேன்! விதியால்
..........காலனும் கடிதேயவரை அழைத்துக் கொண்டான் *
அதிட்டமில்லையோ?எனச் சொல்லியே அழுவேன்
..........ஆருக்கும் இந்நிலை வேண்டாமென வேண்டுகிறேன்*


உதிரத்தைக் கொட்டித்தான் ஒவ்வொரு தாய்மாரும்
..........உயிராய் மதிக்கும்தன் பிள்ளையை வளர்ப்பார்கள் *
எதிர்காலம் நினைக்காமல் எதிர்பார்ப்பு இல்லாமல்
..........என்றைக்கும் இருக்கின்ற மனம்தான் தாய்ப்பாசம் *
துதிப்பாட்டு பாடுதற்கு தனக்கோர் துணையொன்று
..........தேடிக்கொண்ட சந்ததியும் வெறுக்கிறார் தாயையும் *
அதிர்ச்சி யாயிருக்கும் அன்றாடமிதை நினைத்தால்
..........அன்னை நானெ உணர்ந்தாலனைத்தும் மறையும் *


பொதிசுமந்து பிள்ளையை வளர்த் தாளாக்கினேன்
..........பொறுப்பில்லை! போற்றும் குணம் அவரிடத்தில்லை *
சதிசெய்தார்கள்! சேர்த்தவென் சொத்தைப் பிரித்து
..........சாதிக்கிறார் கிடைத்ததைப் பங்கு போட்டுக்கொண்டு*
முதியோர் இல்லத்திலின்று...முகம்தெரியா நபர்களே
..........முகமலர்ந்த அன்பைப் பொழிந்தாலும்! நான்நிர்க்..
கதியாய் நிற்கிறேன்! எதிர்ஜன்னலில் எனைப்போல
..........கலங்குவோர்கள் இன்னும் எத்தனைபேர் உளரோ.?

==================================================

வல்லமை படக்கவிதைப் போட்டிக்குச் சமர்ப்பிவிக்கப்பட்டது

நன்றி கூகிள் இமேஜ்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (28-Mar-18, 6:25 pm)
பார்வை : 148

மேலே