வெளிச்சம் தேடும் மின்மினிகள்----யாழ்வேந்தன்----

அங்கம் மறைக்கும்
ஆடை வாங்கப் பணமில்லை!
இரைப்பை சுரக்கும்
அமிலத்தின் எரிச்சல் தணிக்க...
நிர்வாண முதலீட்டில்
பலரின் காமப் பசி தீர்க்கிறாள்
விலை மகள்!
********************************************
மனிதக் கடவுளர்களின்
வரம் கிடைக்கும் வரை...
நிர்பந்த உண்ணா விரதம் ஏற்கிறான் தெருவோரப் பிச்சைக்காரன்!
********************************************
சமுதாயத்திற்கு...

கைம்பெண் கருவுற்றால்..,
வளரும் சிசுவும்
கருவறைக் கழிவுதான்!
நான்காம் கணவனுக்குப் பிறந்தாலும்...
நடிகையின் குழந்தையும்
மணிமகுடத்தின் மாணிக்கம் தான்!
********************************************
பெண்ணின் ஜாதகத்தில்
செவ்வாய் தோஷம்...
நிராகரித்தது
மூடநம்பிக்கை மூளைகள்!
விண்ணில் செவ்வாய்க்கு
செயற்கைக்கோளை ஏவி
சாதனை படைத்தது
நவீன இந்தியா!
********************************************
உலக அங்காடித் தெருவில்
ஆயிரமாயிரம் கனவுக் கடைகள்!
ஒன்றை வாங்க நினைத்தபோது
கரங்களை வெட்டியது
அச்சுப் பதிந்த காகிதங்கள்!
********************************************
வாய்ப்புகள் கேட்டு
காத்திருந்த காலங்களில்...
நரையையும், முதுமையையும்
வாழ்நாள் பரிசாகத் தந்து
பரிகாசம் செய்கிறது
வளர்ந்துவிட்ட வெற்றிச் சமூகம்!
********************************************
சிபாரிசு கடிதங்கள் உடையவன்
விண்ணில் நட்சத்திரமாய்
மின்னுகிறான்!
திறமைகள் கொண்ட ஏழை
இறுதியில்
விளக்கைச் சுற்றிய விட்டிலாய்
இறக்கிறான்!
********************************************
இலவசக் கட்டாயக் கல்வி
வாசகம் தாங்கிய சுவரினோரம்
உறங்கிக் கொண்டிருக்கிறது
ஓர் ஆதரவற்றக் குழந்தை!
********************************************
கனியாக மாறும் ஆசையில்தான்
பூத்தாள் அவள்!
வண்டின் வரவு இல்லாததால்
வாடி வதங்கி முதிர்கன்னியாய்
உதிர்ந்தாள் மண்ணில்!


---------------------யாழ்வேந்தன்----------------------

எழுதியவர் : யாழ்வேந்தன் (28-Mar-18, 6:45 pm)
பார்வை : 221

மேலே