திசை மாறிய நேசம்

" திசைமாறிய நேசம்.."
( சிறுகதை)

"சொன்னது நீதானா..? சொல்.. சொல்.. என்னுயிரே..."
திரைப்பாடல் வரிகள் அவளுக்காக முன்பே எழுதப்பட்டுவிட்டதோ...
பாடல்வரிகள் மெல்ல செவிவழி இதயம் நுழைந்து,,
தூங்கிக்கொண்டிருந்த நினைவுகளை நறுக்கென்று
கிள்ளிவிட்டு, மறைந்திருந்த வேதனையை ஏககாலத்தில் எழுப்பிவிட்டது..

உயிர்ப்புள்ளவைகளை மட்டுமே தம்முள் வைத்துக்கொண்டு,
உயிரற்றவைகளை கரைக்குத் தள்ளிவிடும் கடலைப்போல், அவன்
நினைவுகளை மட்டுமே உயிராய் மனதில் சிம்மாசனம்போடவைத்து,
நீருபூத்த நெருப்பாய் உள்ளேயே தகதகவென்று கனன்று,,
மெல்ல மெல்ல அவள் உணர்வுகளை விழுங்கியது விதிதானா?..

தனியாக சில தருணங்களைத் தனக்காகவென்று தேடுகையில்,
தனக்கான எல்லா நொடிகளையும் அவன் ஒருவனுக்கே,
இதுவரை செலவழித்து வந்தது தாமதமாகப் புரிந்தது.
இனியும் நீடிக்கும் இந்த ஆத்மார்த்தமான உணர்வுகளை
எங்ஙனம் விலக்குவது..? எங்ஙனம் மீள்வது...?...

நேசம்..அன்பு எல்லாம் வெளிவேஷம்தானோ....?
பட்டாம்பூச்சியை பறக்கவிட்டால் ஓடிடும்.. இறுக்கிப் பிடித்தால்
இறந்திடும்.. இரண்டுக்கும் நடுவே இயல்பாய் இருப்பதை வேஷமென்று
எள்ளி நகையாடும் அன்பும் நேசமும் ரணமாக்கிவிட்டது அவள் மனதை..

இதயத்தில் நிறுத்தி வைத்த இனிய நினைவுகள் ஆழப்புதைந்து விட்டது..
இம்மென்று சொல்வதற்குள் எக்குத்தப்பாய் ஆகிவிடுகின்றது
அவள் எதார்த்தமாய் சொல்லும் சொற்கள் அனைத்தும்...
பண்பில்லாத சொற்களாய் உருமாறிப் போவது அவள் செய்த குற்றமா?
திருத்தப்படவேண்டிய பிறவியாய் அவள் மாறியது நிர்ப்பந்திக்கப்பட்ட
குறைபாடா.....???

அவனைப்பற்றிய பரவசங்களிலே மூழ்கிக்கிடந்த மனது,
அவன் வெறுப்புக்களில் துவண்டு போகின்றது...
எந்தச் சூழ்நிலையிலும் மாறாது என்ற கங்கணம் கட்டிய உறவொன்று..
தன்னிச்சையாக செயல்படத்துவங்கியது எதிர்பார்த்ததுதானே..
விலகிடத் துடிக்கும் எண்ணத்திற்கு தேவை ஒரு காரணம்..
தானாக பழம் நழுவி பாலில் விழ்ந்தது
விதியின் செயலன்றி வேறெதுவாக இருக்க முடியும்?....

இதுவரை கொட்டித் தீர்த்தது அன்பில்லையா...?
அன்பு கொண்ட மனதில் ஆத்திரம் எப்படி நுழையும்...?
பழிவாங்கும் மனதில் பாசம் எப்படி குடியிருக்கும்...?
எவ்வளவோ சமாதானங்களையும் ஆறுதல்களையும்
தமக்குத்தானே சொல்லிக் கொண்டாலும்..
அவளால் இனி வசந்தங்களை எதிர்பார்க்க முடியாது
என்று ஆணியடித்தாற்போன்று உறுதிப்படுத்தியது
இன்றைய பொழுது.....

"சொன்னது நீதானா ...." ம்ம்ம் .. ஒரு சொல்லில் உயிரைப்
பிசைந்தெடுப்பது உண்மைதானே.....
விதியின் வசத்தில் திசைமாறியது அவள் கதி...
இனி காலங்கனியுமா அல்லது
அவள் காலம் முடியுமா...?..


பெ.மகேஸ்வரி

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (28-Mar-18, 7:41 pm)
பார்வை : 277

சிறந்த கவிதைகள்

மேலே