வெட்கத்தில் விழித்த பார்வை

காண்கையில்
கவிழ்ந்த இமைகள்
திறந்தன மனதை.
நீண்ட யூகங்களின்
மகரந்தம் சுழன்றன
மௌனத்தில் மோதி.
பிறவிமுள் களைய
காந்தர்வ ஸ்நேகிதம்
ஒற்றிக்கொண்ட கண்களில்
ஸ்வாசித்தன அன்பினை.
வெட்கத்தின் கனவை
மொழிபெயர்த்த காதல்
மெல்லச்சிரித்தது
உன் கொலுசொலிகளில்.
ஒரு தருணத்தில்
சூடியிருந்த உன்
ஒளி கலவிய பூக்கள்
சாலையில் நழுவின
பயிர்ப்பின் உச்சத்தில்.
புன்னகையின் ஈரம்
நரம்புகளில் அதிர்ந்தது
காதலின் நறுமணமாய்.
பார்வைக்கப்பால் சென்றாலும்
வந்தவண்ணமாய் வருகிறாய்
தூரலில் திரண்டு
பூவில் கவிந்த பனியென.

எழுதியவர் : ஸ்பரிசன் (30-Mar-18, 7:40 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 811

மேலே