நீலவான வீதியிலே

நீலவான வீதியிலே தவழ்ந்து வந்து
***நெஞ்சத்தை முழுவதுமாய்க் கொள்ளை கொள்ளும் !
கோலயெழில் வட்டநிலா கண்ட பின்னர்
***கொஞ்சிவரும் பாக்களிலே உள்ளம் துள்ளும் !
நூலளவே வளைந்திருக்கும் பிறையைப் பெண்கள்
***நுதலுக்கும் உவமையாகக் கவிதை சொல்லும் !
பாலமுதம் கிண்ணத்தில் பிசைந்து வைத்துப்
***பாலகருக் கூட்டுகையில் நிலவே வெல்லும் !!

காதலர்க்கு நித்தமொரு வடிவம் காட்டும்
***கண்கலங்கும் கன்னியரின் கவலை தீர்க்கும் !
தூதனுப்பும் காதலனின் துடிப்பைக் கூறும்
***துணையின்றித் தனித்திருக்கும் தவிப்பைச் சொல்லும் !
மாதமொரு நாள்மட்டும் போகும் ஓய்வில்
***வருந்தாது வளர்ந்தபின்னர் உருவின் தேய்வில் !
மூதறிவு கொண்டோரும் மதியின் முன்னால்
***முதிராத மழலையாகிப் போவார் தன்னால் !

நிலவின்றி இலக்கியங்கள் மண்ணில் இல்லை
***நீந்துகின்ற அழகியலுக் குண்டோ எல்லை ?
உலகத்திற் கொளிகொடுக்கும் இரவின் தீபம்
***உணர்வுகளைக் குளிர்வித்துத் தணிக்கும் தாபம் !
வலம்வானில் வரும்நிலவை உவமை யாக்கி
***வள்ளுவனும் பாரதியும் நெய்தார் பாவை !
மலர்ந்தொளிரும் விண்பூவை நிசியில் கண்டு
***வருணிக்கா பாவலர்கள் எவரு முண்டோ ??

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (3-Apr-18, 12:48 am)
பார்வை : 771

மேலே